24_04

மிகுந்த கனி தர… (புனித யோசேப்பு மிகுந்த கனி கொடுத்தவர்)

 

01.05.2024 - சனிக் கிழமை

“நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்” - மத்தேயு 7:17

தாய் தந்தையோடு இணைந்திருக்கும் போது கிடைக்கும் கனி பாசம். நண்பர்களோடு இணைந்திருக்கும் போது கிடைக்கும் கனி மகிழ்ச்சி. உறவினரோடு இணைந்திருக்கும் போது கிடைக்கும் கனி ஒன்றிப்பு. 

இவற்றில் விரிசல் ஏற்படும்போது வாழ்வில் பலம் இழந்து போகிறோம். இணைந்திருக்கும் போது கிடைத்த கனிகள் இழப்பின் போது (அன்புக்குரியவர்களின் பிரிவில்) தான் கண்டுணரப்படுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15:1-8) நானே திராட்சைக் கொடி. என்னில் இணைந்திருப்போர் மிகுந்த கனி தருவார்கள் என்கிறார் இயேசு. அவருக்கு செவிக்கொடுப்போர் அவரில் இணைந்திருப்பதினால் மிகுந்த கனி தருவர். வார்த்தையை வாழ்வாக்குவது தான் இணைந்திருப்பதன் அடையாளம். 

பெயரளவில் இணைந்திருப்பவர்கள் கனி கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் கொடியோடு உள்ள உறவு நிலையிலிருந்து நீக்கப்படுவர். ஆனால் இயேசு என்னும் கொடி கிளைமீது அளவுக் கடந்த அன்பு கொண்டுள்ளது. கிளைகள் தறிக்கப்படும் முன் கனி தர வாய்ப்பு தரப்படுகிறது. 

நாம் கொடியோடு இணைக்கப்பட்ட கிளையாக இருந்து கனிதர போகிறோமா? அல்லது இயேசுவின் உறவிலிருந்து விலகி நிற்க போகிறோமா?

இறை உறவிலும் மனித உறவிலும் இணைந்திருந்து மிகுந்த கனி தருவோம்… அதன் வழியாக தந்தைக்கு மாட்சி அளிப்போம்.

இன்று தொழிலாளர் புனித யோசேப்பின் திருவிழா. தன் குடும்பத்தை மிகவும் பொறுப்புடன் நடத்தி வந்தவர். தன் உழைப்பின் வழியாக மிகுந்த கனி தந்தவர். விவிலியம் சுட்டிக் காட்டும் நேர்மையாளர். 

தன் விருப்பம் துறந்து இறைவிருப்பம் நிறைவேற்றியவர். தன் வலிகளை மறைத்து பிறர் வலி சுமந்தவர். அன்னை மரியாவை ஏற்றுக் கொண்டவர். திருக்குடும்பத்தின் பாதுகாவலர். 

விவிலியத்தில் பேசப்படுபவர், ஆனால் விவிலியத்தில் ஒரு வார்த்தையும் பேசாதவர். 

இத்தகைய சிறப்புக்குரிய நம் புனிதர் யோசேப்பு உழைப்பின் மகத்துவத்தை தன் வாழ்வால் சுட்டிக் காட்டுகிறார். தன் பணியை மட்டுமல்ல இறைபணியையும் சிறப்புடன் நிறைவேற்றியவர்.

இவர் வாழ்வு நமக்கு முன்மாதிரி ஆகட்டும்… இவரை போல நாமும் கனி கொடுப்போம்.


நாம் விரும்பும் அமைதி…

 

30.04.2024 - செவ்வாய்க் கிழமை

“பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்” - திருப்பாடல்கள் 23:2

அமைதி, மகிழ்ச்சி இவையிரண்டையும் வேண்டாம் என்று சொல்லாத நபர்கள் கிடையாது. இன்றைய காலக் கட்டத்தில் மனிதன் அமைதிக்காக எங்கெங்கோ அலைந்து திரிகிறான். சக மனிதரில் கிடைக்காத அமைதியை பலவற்றிற்கு (ஊடகம், மது, கேளிக்கை…) அடிமையாகி அடைய எண்ணுகிறான் மனிதன். 

இவ்வுலகம் நிரந்தர அமைதி கொடுக்காது என்பது மனிதனுக்கு தெரியும். உடனடி நிவாரணம் கிடைத்தால் போதும் என்பதனால் மனதோடு அலைபாய்ந்துக் கொண்டிருக்கிறான். 

இவ்வுலகம் தருகின்ற அமைதி எதிர்பார்ப்பின் அடிப்படையிலே அமையும். நான் எதிர்பார்ப்பதை நீங்கள் செய்தால், நீங்கள் எதிர்பார்ப்பதை நான் செய்வேன் (Do and Receive). என்னுடைய ஆசைகள் நிறைவேறினால் உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். அது தான் நம் அமைதியின், மகிழ்ச்சியின் அடிப்படையான விதியாக மாறிவிட்டது அல்லது மாற்றிவிட்டோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:27-31) ‘நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல’ என்கிறார் இயேசு. தன் தந்தையின் கட்டளையின்படி செயல்பட்ட அவர் உள்ளத்தில் அமைதியை பெற்றிருந்தார், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார். அவரில் நம்பிக்கை கொள்வோர் உள்ள அமைதியை நிறைவாக பெறுவர்.

இன்று மனிதர்கள் பலர் தங்களது ஆணவத்தால், அதிகாரத்தால், அதட்டலால் நம் அமைதியை குலைக்க பார்க்கிறார்கள். நம்முடைய பொறுமையை சோதித்து நம் அமைதியை சிதைக்கப் பார்க்கிறார்கள்.

உலகம் தரும் அமைதி அல்ல இறைஅமைதி நம் உள்ளத்தில் குடிக் கொள்ள வேண்டும்.

அமைதியை குலைக்கும் ஆணவக்காரரிடமிருந்து விலகி இருப்போம். இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதின் வழியாக நம் அமைதியை பெற்றுக் கொள்வோம்.


உள்ளத்தில் குடிகொள்ள…

29.04.2024 - திங்கட் கிழமை

“இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்” - இணைச் சட்டம் 6:6

அன்புக்குரியவர்களின் உள்ளத்தில் நம் நினைவுகள் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு. அன்புக்குரியவர்கள் எதிரியாக மாறுகின்ற வரை நம் உள்ளத்தில் எப்போதும் அவர்களுக்கும் இடம் உண்டு.

நினைவுகள் நீங்கி விட்டால் வாழ்வில் வருத்தங்கள். அதன்பின் அவர்கள் ஏற்படுத்திய வடுக்கள் ஆறாத தழும்பாய் குத்திக் கொண்டே இருக்கும். பேசிய வார்த்தைகள் காயங்களாய் மாறிவிடுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:21-26) யார் கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிக்கிறார்களோ, வார்த்தையை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுடன் நானும் தந்தையும் வந்து குடிகொள்வோம் என்று இயேசு கூறுகிறார். கட்டளைகளை கடைப்பிடிப்போர் அன்புக்குரியோர் ஆகின்றார். அன்புக்குரியோர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக் கொள்கின்றார். 

கட்டளைகளை கடைப்பிடிப்போருக்கு தூய ஆவி என்னும் துணையாளரை இயேசு தருகிறார். தூயஆவியானவர்  இரண்டு காரியங்களை செய்கின்றார். 1. அனைத்தையும் கற்றுத் தருதல், 2. அனைத்தையும் நினைவூட்டுதல்

நாம் அன்பு செய்கின்றவர்கள் கூறிய வார்த்தைகள் நம் உள்ளத்தில் நிறைந்து இருக்கும். அந்த அன்பு நிறை வார்த்தைகள் மகிழ்வை கொடுக்கும், ஆறுதலை கொடுக்கும், மனநிறைவை கொடுக்கும். ஆனால் அதையும் கடந்த இறைவனின் வார்த்தை எவ்வளவு சிறப்புமிக்கது. 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் (4:12) சுட்டிக் காட்டுவது போல “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. 

இறைவன் உள்ளத்தில் உறைந்தால் நம் நோக்கங்கள் திசை மாறாது. நம் சிந்தனைகள் சிதறடிக்கப்படாது. எல்லாம் அன்பு மயமே. அவருடைய வார்த்தையும் அன்பே… அவருடைய உடனிருப்பும் அன்பே… அவருடைய இயக்கமும் அன்பே…

கடவுளுடைய வார்த்தையை கடைப்பிடிப்போர் உள்ளத்தில் இறைவன் தங்குவார். நற்கருணை வடிவில் இறைவார்த்தையின் வடிவில் அவர் ஒவ்வொரு நாளும் நம்முள் வசிக்கின்றார். 


கனி தர…

28.04.2024 - ஞாயிற்றுக் கிழமை

“நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” - யோவான் 15:8

வாழ்க்கை என்பது பலன் கொடுப்பதற்கே. பலன் கொடுக்காத வாழ்க்கை பண்படாத, பயன்படாத வாழ்க்கை. எல்லோரும் 100 விழுக்காடு பலன் தர வேண்டும் என்பது இல்லை. தங்களது முயற்சிகளுக்கேற்ப பலன் கொடுக்க வேண்டும். பலன் கொடுக்க நாம் செய்ய வேண்டியது இணைந்து இருக்க வேண்டும். 

யாரோடு இணைந்து இருந்தால் நாம் பலன் கொடுக்க முடியும்? பண்பட்டவர்களோடு, பலன் கொடுத்தவர்களோடு இணைந்து இருந்தாலே நாம் பலன் கொடுக்க முடியும். 

பழைய ஏற்பாட்டில் முதற்பலன், பலன், நற்பலன், நிலப்பலன் என்ற வார்த்தைகள் பல இடங்களில் வருகின்றன. இவை எவற்றை சுட்டிக் காட்டுகின்றன? படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் அதனதன் பலனை பகிர்ந்தளிக்க அழைக்கப்படுகிறது. மனிதன் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டதற்கு நன்றியாக மனிதன் திரும்ப பலன் கொடுக்க வேண்டும். 

உதாரணமாக, தொடக்க நூல் 8:17இல் இவ்வாறு காண்கிறோம், “உன்னுடன் உயிரோடு இருக்கும் பறவைகள், விலங்குகள், நிலத்தில் ஊர்வன ஆகிய உயிரினங்கள் எல்லாவற்றையும் உன்னுடன் வெளியே கொண்டு வா. மண்ணுலகில் அவை பன்மடங்காகட்டும். பூவுலகில் அவை பலுகிப் பெருகிப் பலன் தரட்டும்”. வெள்ளப்பெருக்கின் முடிவில் கடவுள் இவ்வாறு நோவாவிடம் சொல்கிறார். 

தனக்குள்ள திறமையை வெளிக்காட்டாமல் மறைத்து வைப்பதனால் என்ன பயன்? நான் பெற்றுக் கொண்ட நல்ல அனுபவங்களை நான் வெளிக் கொணர வேண்டும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15:1-8) இயேசு திராட்சைக் கொடி உருவகத்;தை பயன்படுத்துகிறார். நானே திராட்சைக் கொடி, நீங்கள் அதன் கிளைகள் என்கிறார். திராட்சைக் கொடியோடு கிளைகள் இணைந்திருக்கும் வரை தான் அவற்றிற்கு மதிப்பு. அவை வெட்டப்பட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை.

இங்கு இயேசுவோடு இணைந்திருக்கும் வாழ்வு பலன் கொடுக்கும் அல்லது கனி கொடுக்கும் வாழ்வு. 

பலன் தராத மரத்தையோ, செடியையோ யாரும் விரும்பமாட்டார். அவற்றை அப்புறப்படுத்தி விடுவார். அது போல நமது வாழ்வு பலன் கொடுக்கவில்லையென்றால் நாமும் அப்புறப்படுத்தப்படுவோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சொல்லாடல் நமக்கு வியப்பளிக்கிறது. கனி தரக் கூடிய கிளைகளை இன்னும் அவர் கழித்துவிடுகிறார், கனித் தராத கிளைகளை அவர் தறித்துவிடுகிறார்.

நாம் அவரால் கழிக்கப்பட்டு, இன்னும் பலன் கொடுக்கும் பக்குவத்தை அடைய வேண்டும். 

நாம் அவருடைய வார்த்தைகளால் தூய்மையாக்கப்பட்டிருந்தால் நாம் மிகுந்த கனி தருவோம். நாம் அவரோடு இணைந்திருந்தால் நாம் மிகுந்த பலன் தருவோம்.

நாம் கனி கொடுக்கும் சீடர்களாக மாறினால், இவ்வுலகம் நற்கனிகளால் நிறைந்திருக்கும்.


செயல்களிலாவது நம்பிக்கை வேண்டாமா?

27.04.2024 - சனிக் கிழமை

மரத்திற்காவது நம்பிக்கையுண்டு; அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்; அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்” - யோபு 14:7

செயலும் சொல்லும் இணைந்து பயணிக்கின்ற போது வாழ்க்கை நலமாய் அமையும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல பேசுவது ஒன்று செய்வது ஒன்றாக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? (நம்பிக்கை குறைந்தவர்களை விட நம்பிக்கை குறைவுக்கு ஆளாக்குபவர்களுக்கே இங்கு ஆற்றல் இருப்பது போல இருக்கிறது).

நம்பிக்கை எங்கு குறைவுப்படுகிறதோ அங்கு வாழ்க்கை பலவீனப்பட்டு போகின்றது. கடவுள் மீதும் நம்பிக்கை இருப்பதில்லை, மற்ற மனிதர் மீதும் நம்பிக்கை இருப்பதில்லை, தன் மீதும் நம்பிக்கை இருப்பதில்லை. வாழ்க்கை ஏதோ செல்கிறது, நானும் பயணிக்கிறேன் என்று பயணம் செய்வோரும் உண்டு.

சாதாரணமாக செய்ய முடியாத ஒன்றை நம்பிக்கையினால் எளிதாக நடத்திக் காட்டியவர்களும் நமக்கு முன்னால் எடுத்துக்காட்டுகளாக இருக்கிறார்கள். நம் முன்னேற்றத்திற்கு தேவை நம்பிக்கை தான். தன்னால் முடியாது என்பவர்களை சிலந்தி கூட எளிதாக சிறைப்படுத்தி விடும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:7-14) தன் மீது நம்பிக்கை கொள்ளாத சீடருடன் இயேசு உரையாடுகிறார். என் வார்த்தைகளை நம்பாவிட்டாலும், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள், என்னில் நம்பிக்கை கொள்வோர் நான் செய்யும் செயல்களையும் செய்வார் என்கிறார் இயேசு. இயேசுவோடு இருந்தவர்களுக்கே இயேசுவை நம்புவதற்கு தயக்கம்.

இவர்களின் நம்பிக்கை குறைவு அடுத்த(வர்) செயலை செய்வதற்கு தடையாக இருக்கிறது. இந்த இடத்தில் இயேசு கோபப்படாமல், அவர்களின் நம்பிக்கையை மிகுதியாக்குகிறார். 

அவர்களின் நம்பிக்கையை செயலுள்ள நம்பிக்கையாக மாற்ற அவர் முயற்சி செய்கிறார்.

என் வாழ்வில் மற்றவர்கள் மீது நான் நம்பிக்கை இல்லாமல் வாழும்போது நான் என் அமைதியை இழந்து விடுகிறேன். மற்றவர்களின் செயல்களை கண்டாவது, யார் நம்பிக்கைக்குரியவர் உண்மையானவர்கள் என்பதை நாம் கண்டுக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை இல்லையேல் நம் வாழ்வு எளிதாக நகராது.


வழியும் உண்மையும்…

26.04.2024 - வெள்ளிக் கிழமை

“ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்” - திருப்பாடல்கள் 25:10

உண்மையின் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி… உண்மையின் பாதை கொஞ்சம் இடுக்கமான, இடறலான பாதை தான். உண்மையின் குரல் கொஞ்சம் எதிரிகளுக்கு எரிச்சலை கொடுக்கத் தான் செய்யும்.

உண்மையின் சார்பாக இருப்பவருக்கு கிடைக்கும் சன்மானம் எதிர்ப்பு, அவமானம், மிரட்டல். பிழைக்கத் தெரியாதவன் இதுதான் உண்மையை பேசுபவருக்கு உலகம் கொடுக்கும் பட்டம்.

உண்மை மாறும் போது பாதை மாறும். பாதை மாறும் போது பழக்கவழக்கங்கள் மாறும். ஒருதடவை நேர்மையாளர் உண்மையிலிருந்து விலகினார் என்றால் என்றைக்கும் அவர் உண்மையின் பக்கம் திரும்ப போவதில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:1-6) இயேசு, நானே வழியும் உண்மையும் வாழ்வும் என்கிறார். இது வெறும் வார்த்தை அல்ல, இயேசுவின் வாழ்க்கையே அதுதான். எதை தனது வாழ்க்கையில் அறிவித்தாரோ அதை அவர் செயல்படுத்தினார். உண்மையை போதித்தார், அந்த உண்மைக்காக தனது உயிரையே கொடுத்தார். 

ஒருவர் உண்மையுள்ளவர் என்பது அவர் நம்முடன் இருக்கும்போது தெரியாது. நம் வார்த்தைகளால் உண்மையுள்ளவரை, நேர்மையானவரை காயப்படுத்தி துரத்திவிட்ட பிறகு அல்லது இழந்த பிறகு தான் தெரியும், உண்மையிலே யார் உண்மையுள்ளவர் என்று.

இயேசுவின் வாழ்வை பொருத்தவரை அவருடைய சீடர்கள் அவரை புரிந்துக் கொள்ளவில்லை. அவரிடம் உண்மை இருப்பதை தெரிந்துக் கொள்ளவில்லை. அவரின் நோக்கத்தை அறிந்துக் கொள்ளவில்லை. 

உண்மையை கண்டுபிடிக்கும் வழி பெரும்பாலும் நமக்கு தெரிவதில்லை. உண்மையாய் இருப்பதற்கான வழியும் நமக்கு தெரிவதில்லை.

பொய் பேசுகிறவர்களை உலகம் மதிக்கிறது, தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. உண்மை பேசுகிறவர்களை உலகினர் கண்டுக் கொள்வதில்லை. 

நாம் இயங்குவதும் இருப்பதும் உலகினருக்காக அல்ல. அடுத்தவருக்காக, அடுத்தவர் விரும்பும்படியாக நாம் வாழ்ந்தோம் என்றால் நாம் நம் சுயத்தை இழந்து விடுவோம்.

அவரின் வழியில் உண்மையை நோக்கி பயணிப்போம்… நிலைவாழ்வில் உண்மையின் பலன் நிச்சயம் இனிக்கும்…


உறுதிப்படுத்த…

25.04.2024 - வியாழக் கிழமை

“நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு” - திருப்பாடல்கள் 27:14

எவ்வளவு உறுதியான மனிதராயிருந்தாலும் சில அடிகள் வாழ்க்கையில் விழும்போது, சில அடிகள் எடுத்து வைக்க முடியாத அளவுக்கு போய் விடுகிறது. தடுமாற்றம், துணிவின்மை, தயக்கம் இவை தான் ஒருவரை முடக்கும் ஆயுதங்கள். ஆயிரம் பேர் உடன் இருந்தாலும் மனதில் திடமும் உறுதியும் இல்லையேல் வாழ்க்கை நிலைகுலைய தான் செய்யும்.

உறுதியூட்டப்படுவதற்கான வார்த்தைகள் வெளியிலிருந்து கொடுக்கப்பட்டாலும் உறுதி கொள்வது நம் மனதாக இருக்க வேண்டும். மனதில் உறுதி வேண்டும் என்பார்களே அது இருந்தால் தான் அடுத்த பணிகள் தடையின்றி நடக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 16:15-20) இயேசு தன் சீடர்கள் செய்த அனைத்திலும் அவர்கள் உடன் இருந்து அவர்களை உறுதிப்படுத்துவதைக் காண்கிறோம். தன் பணி செய்ய தன் சீடர்களுக்கு மனத்திடமும் பணி பகிர்வும் கொடுத்து வழிநடத்துகிறார்.

நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களை செய்வர் என்று சிலவற்றை வரிசைப்படுத்துகிறார் இயேசு. பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர், பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர், கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது, உடல் நலமற்றோர் மீது தம் கைகளை வைக்க அவர்கள் குணமாவார்கள் என்ற அரும் அடையாளங்களை செய்வதற்கான ஆற்றலை அவர்களுக்கு கொடுத்திருந்தார் இயேசு.

இன்று நமது பணியாக இருப்பது, திடம் இழந்து இருப்பவர்களை உறுதியூட்ட வேண்டியது தான். பலம் இழந்து இருப்பவர்களுக்கு ஆற்றல் கொடுக்க வேண்டியது.

உறுதியான மனதுடனே மற்றவர்களின் வாழ்க்கையில் உறுதியூட்டுவோம்… இயேசுவின் அன்பு பணியில் இணைவோம்.


தீர்ப்பிட அல்ல மீட்பளிக்க…


24.04.2024 - புதன் கிழமை

“ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்” - திருப்பாடல்கள் 96:13

தவறு செய்தவர்கள் தவறு செய்யாதவர்களுக்கு தண்டனை கொடுக்கும் காலம் இது. தவறே செய்யாதவர்கள் வாய்மூடி கூனிகுறுகி நிற்கும் கொடுமை நடப்பதும் இங்கு தான் அரங்கேறும். நியாயத்தை நிரூபிக்க இங்கு நிறைய பேச வேண்டி இருக்கும். ஆனால் பொய்யை உண்மையாக்க இங்கு சிறிது பேசினால் போதும்.

எதிர்த்தவர்கள் எப்போது மாட்டுவார்கள் என்று ஆவலோடு கூட்டம் காத்திருக்கிறது. பழிவாங்க நேரமும் காலமும் கூடி வரும்போது கொடியவர்கள் ஆட்சி செய்வார்கள். தான் தவறு செய்யும்போது தட்டிக் கேட்டவர்களை வீழ்த்த கயவர்கள் எப்போதும் வலைவிரிக்க தான் செய்கிறார்கள். இங்கு தீயவர்களுக்கு பயப்பட வேண்டியது நேர்மையாளர்கள் தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 12:44-50) இயேசு உலகிற்கு தீர்ப்பு வழங்க அல்ல, அதை மீட்கவே வந்ததேன் என்கிறார். அந்த மீட்பு அவரில் நம்பிக்கை கொள்வோருக்கு கிடைக்கும். தன்னை எதிர்த்தவர்களையும் அன்பால் அரவணைத்தவர் இயேசு. தந்தையிடமிருந்து எதை பெற்றுக் கொண்டாரோ அதை அவர் மற்றவர் வாழ்வு பெற கொடுக்கிறார்.

இருளிலிருந்து ஒளிக்கு மக்களை அழைத்தவர், நம்பிக்கை கொள்வோருக்கு வாழ்வு அளித்தவர், தன் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றியவர் இயேசு.

இன்று அவரை, அவருடைய வார்த்தையை பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம். 

நம்முடைய கடுஞ்சொற்களால் மற்றவர்களை தீர்ப்பிடாமல், முடிந்தமட்டும் வாழ்வு கொடுக்க முயற்சி செய்வோம். வாழ்வு கொடுப்பவரை பற்றிக் கொண்டால் நம் வாழ்வு நிலைதடுமாறாது.

நாம் எந்த அளவையால் (தீர்ப்பால்) அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும். தீர்ப்பு என்னும் சுமைகளை சுமத்தாமல் மீட்பு என்னும் ஒளியை பற்ற வைப்போம்.

நம் நம்பிக்கை மற்றவர்களின் வாழ்வுக்கான விடியலாகட்டும் (மீட்பாகட்டும்)…


ஒன்றாய் இருப்போரை பிரிக்க இயலாது…


23.04.2024 - செவ்வாய்க் கிழமை

“எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்” - யோவான் 17:21

எதிர்பார்ப்பில்லா, பொறாமையில்லா, சமுதாய சீர்கேடு இல்லா அந்த காலம் எவ்வளவு அருமையாய் இருந்தது. அன்று தொலைத் தூர பயணம் இல்லை, தொலைத் தொடர்பு சாதனம் இல்லை. ஆனால் உறவு ஒன்றிப்புக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்று எல்லாம் இருக்கிறது, ஆனால் உறவு ஒன்றிப்பு தான் இல்லை. 

எல்லாரும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்று சிந்தனையில் எண்ணினோம் செயலில் காட்டினோம். ஆனால் இன்று மனதளவில் கூட அந்த ஒன்றிப்பு எண்ணம் வருவதில்லை. இணைந்திருப்போரை பிரிக்க சதித்திட்டம் தீட்டும் கூட்டம் இங்கு அதிகம். அதிலும் அந்த சதிக்கார கூட்டம் வீட்டுக்குள்ளே இருக்கிறது என்பது தான் வருந்ததக்கது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 10:22-30) மந்தையோடு ஒன்றித்திருக்கும் ஆயனை பற்றி வாசிக்க கேட்கிறோம். இந்த ஆயனிடமிருந்து மந்தையை பிரிக்க எவராலும் முடியாது. காரணம் அந்த ஆடுகள் அவரது குரலுக்கு செவிசாய்க்கின்றன. ஆடுகள் ஆயனோடு இணைந்திருக்கின்றன. தந்தையிடமிருந்து மகன் அவற்றை பெற்றிருக்கிறார், அவற்றிற்கு அவர் நிலைவாழ்வு அளிக்கிறார்.

தந்தை மகனோடும் மகன் தந்தையோடும் ஒன்றித்திருப்பது போல நாமும் இணைந்து வாழ வேண்டும். இணைப்பில் தான் அமைதி உண்டாகும். ஒன்றிப்பில் தான் மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்து வாழ்ந்து, எதையும் நாம் அனுபவிக்காமலும் மற்றவர்கள் பெற்றுக் கொள்ளாமலும் போவதைவிட இருக்கும் வரை இணைந்து பயணிப்போம். 

சிந்தனையிலும் ஒன்றிப்பு தேவை, பேச்சிலும் ஒன்றிப்பு தேவை. (பல நேரங்களில் ஒன்றிப்பை சிதைப்பதே, நாம் வாய்த் தவறி விட்ட வார்த்தைகள் தான்) இறை உறவில் இழப்பு இல்லை. இறை மனித ஒன்றிப்பில் தோல்வி இல்லை.

பிளவை உண்டாக்கும் சந்தர்ப்பவாதிகளை தூரெடுப்போம். அதன் மூலம் நம் உறவுகள் தூய்மை பெறும். உறவுகள் இணைக்கப்படும்.


நன்மைக்கு (நல்உறவுக்கு) செவிமடுக்கும் ஆடுகள்…

22.04.2024 - திங்கள் கிழமை

“அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்” - திருப்பாடல்கள் 116:2

செவிமடுத்தலும் செவிசாய்த்தலும் இன்று குறைந்து விட்டது. அருகில் இருப்பவர்களுக்கு செவிமடுப்பதெல்லாம் இப்போது இல்லவே இல்லை. தொலைத் தொடர்பு கருவிகளால் நம் உள்ளம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. தொலைத் தூரத்தில் இருப்பவர்களோடு தொலைப்பேசியில் அதிக நேரம் செலவிடுகிறோம். ஆனால் நெருங்கிய நிலையில் உள்ள உறவுகளுக்கு செவிமடுப்பதில்லை. அடிமைத்தனம் செவிமடுக்கும் திறனை குறைத்து விட்டது.

வம்பை விலைக் கொடுத்து வாங்குவது போல தேவையில்லாத உறவுகளை, உணர்வை கொடுத்து வாங்கி விடுகிறோம். உணர்வினால் ஒருமுறை கட்டப்பட்டால் அதன்பின் மீண்டு வருவது கடினம் தான். ஒருவருக்கு அடிமையாகிவிட்டால் அவர் ஆட்டி வைப்பது போல தான் நாம் இயங்குவோம். அடிமைத்தனம் ஆபத்தானது. அலைபேசி அடிமை, உணர்வின் அடிமை, உணவுக்கு அடிமை, நுகர்வுவெறிக்கு அடிமை என்று அடிமைத்தனம் நீண்டுக் கொண்டே செல்கிறது.

இந்த அடிமைத்தனம் உள்ளே நுழைந்தால், மற்ற நல்லவை காதின் உள்ளே நுழையாது. இன்று பெற்றோருக்கோ, மூத்தோருக்கோ செவிமடுக்க முடியாதவாறு காதுகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 10:1-10) ஆயன், ஆடு செவிமடுக்கும் நிலை விவரிக்கப்பட்டுள்ளது. ஆயன் ஆட்டை அறிந்திருக்கிறார், ஆயனை ஆடுகள் அறிந்திருக்கின்றன, அவற்றிற்கு அவரது குரல் தெரியும், அறியாத ஒருவர் பின் அந்த ஆடுகள் செல்லாது என்கிறார் இயேசு கிறிஸ்து. 

நம்முடைய நல்வாழ்வை சிதைக்க பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்படுவது தெரிந்தும் திசைமாறி செல்வது முறையல்ல. ஆயனின் பார்வையிலிருந்து விலகி போக கூடாது. ஆயனுக்கு செவிமடுக்கின்ற போது நாம் நிலைதடுமாற மாட்டோம். ஆயனுக்கு ஆடுகளின் நிலை தெரியும், ஆடுகளின் பலவீனம் தெரியும், ஆடுகளின் களைப்பு தெரியும்.

நம்முடைய வேலை என்பது காதுகளை திறந்து செவிமடுக்க வெண்டும். செவிமடுத்தால் மட்டும் போதாது செவிசாய்க்க வேண்டும். கேட்பவற்றை செயல்படுத்த வேண்டும். 

இவ்வுலக வாழ்வை நாம் நிறைவாக பெற்றிட ஆயன் வழியில் நடப்போம். அடிமைத்தனத்துக்கு அல்ல ஆயனுக்கு செவிமடுப்போம். 


ஆயனின் அன்பு வழியில்…

21.04.2024 - ஞாயிற்றுக் கிழமை

“ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன்” - எசேக்கியேல் 34:12

இன்றைய நாள் இறையழைத்தல் ஞாயிறாகவும், நல்லாயன் ஞாயிறாகவும் சிறப்பிக்கப்படுகின்றது. பழைய ஏற்பாட்டில், இஸ்ராயேல் மக்கள் கடவுள் உறவு என்பது ஆயன் மந்தை என்னும் உருவகம் வழியாகவே விளக்கப்படுகிறது. ஆயனை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஆயனை நோக்கி வருதல், இது தான் பழைய ஏற்பாட்டு நிகழ்வு. 

கடவுள் இஸ்ராயேல் மக்களின் ஆயராக இருந்த போது அவர்கள் குறைகளை கண்டதில்லை. இதைத் தான் தாவீது அரசர் திருப்பாடல் 23இல் இவ்வாறு பாடுகிறார், “ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை”. ஆயரை விட்டு வழிமாறிய மந்தை தீமையை சந்திக்க நேருகிறது. அடிமைத்தன வீட்டிற்கு இழுத்துச் செல்லப்படுகிறது. 

கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகள் முக்கியமல்ல தனது உயிர் தான் முக்கியம். ஆனால் ஆயனுக்கு தன் மந்தையும் முக்கியம், தனது உயிரும் முக்கியம். தனது உயிரை பணயம் வைத்து ஆடுகளை காப்பாற்றுவதில் கூலிக்கு மேய்ப்பவரை விட ஆயனுக்கு அதிக ஈடுபாடு உண்டு. 

என்னதான் பார்த்து பார்த்து வளர்த்தாலும் அந்த ஆடு அடிமைவிலைக்கோ, கறிகடைக்கோ தான் செல்லும். இருந்தபோதிலும் அந்த ஆயன் வருவாயை ஈட்டி விடுவார். அங்கு இழப்பு இருக்கிறது, அதே சமயத்தில் உழைப்பின் பலன் இருக்கிறது.

இன்றைய நாளின் நற்செய்தி (யோவான் 10:11-18) வாசகத்தில் இயேசு நல்ல ஆயனாக உருவகப்படுத்தப்படுகிறார்.

ஆடுகளை மேய்ப்பவர்களுக்கு இந்த ஆடுகளால் பலன் உண்டு, பயன் உண்டு. ஆனால் இயேசு என்னும் ஆயனுக்கு இந்த மக்கள் என்னும் மந்தையால் என்ன பலன் உண்டு என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

“அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்” (யோவான் 6:39)

இது தான் இயேசு ஆயனாக இருந்து பெறும் பலன், பயன். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதே அவர் பெறும் பலனாக இருக்கிறது.

பிரிந்து கிடக்கும் மந்தையை ஒன்று சேர்ப்பதும், மனங்களால் சிதறி கிடக்கும் மக்களை கூட்டிச் சோப்பதும் தான் இந்த ஆயனின் வேலை.

இயேசு என்னும் ஆயன் இன்று நம் வழியாக செயலாற்றப்பட வேண்டும். ஒரே ஆயனின் ஒரே மந்தையாக எல்லோரும் இணைய நாம் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு நமக்குள் இருக்கும் கட்சி மனப்பான்மை, சாதிய உணர்வுவெறி, உயர்த்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் வேறுபாடு ஆகியவை களையப்பட வேண்டும். 

இறைவார்த்தையை அறிவிப்பதனால் மட்டும் நாம் இறைவனின் திருவுளத்தை  நிறைவேற்றிவிட முடியாது, தினசரி திருப்பலியில் பங்கெடுப்பதனால் மட்டும் இறைவனின் மனம் குளிர்ந்துவிடாது. 

இறைவனை போல 

நம்மை இழந்து, 

நல்ல ஆயனாக இருந்து,

நம்பிக்கை இழந்தோரை தூக்கிவிடும்போது, 

பசித்தோருக்கு உணவளிக்கும்போது, 

வாழ்விழந்தோருக்கு வாழ்விற்கான வழியை காட்டும்போது, 

வார்த்தையிலும் செயலிலும் இறையன்பை பிரதிபலிக்கும்போது 

நாம் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் ஆயராக இருக்க முடியும். 


நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் அவரிடமே…

20.04.2024 - சனிக் கிழமை

“நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலை வாழ்வு” - உரோமையர் 6:22

வெளிப்படையாக பேசுதல், வாயுக்குள்ளே முணுமுணுத்தல் இரண்டும் ஒன்றல்ல. வெளிப்படையாக பேசுகின்ற போது அடுத்தவருக்கு தெரிய வரும், அதற்கான பதில் கிடைக்க வாய்ப்புண்டு. முணுமுணுப்பதினால் உள்மனக் காயங்கள் தான் அதிகமாகும்.

இந்த முணுமுணுப்பு தான் நம் நிம்மதியையும் மற்றவர்கள் நிம்மதியையும் கெடுத்துவிடும். வார்த்தைகள் தெளிவாகவும் கருத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:60-69) ‘இயேசு நிலைவாழ்வு அளிக்கும் உணவை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது’ இந்த பேச்சை இன்னும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? என்று இயேசுவை சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்கள் முணுமுணுத்து இயேசுவை விட்டு பிரிந்து சென்றனர். இயேசுவின் வார்த்தையை அவர்கள் நம்பவில்லை, அவரில் நிலைவாழ்வு உண்டு என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

அந்த வேளையில் இயேசு தன் சீடர்களை பார்த்து நீங்களும் என்னை விட்டு போய்விட நினைக்கிறீர்களா? என்று கேட்கிறார். அப்போது பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்” என்கிறார். 

நம்முடைய இல்லற, துறவற வாழ்வில் முணுமுணுப்புக்கும் எரிச்சலுக்கும் இடம் கொடுத்தோம் என்றால் இருக்கிற அமைதியையும் நாம் தொலைத்துவிடுவோம். இறைவனில் நம்பிக்கையும் பணிவில் தெளிவும் வார்த்தையில் உண்மையும் இருந்தால் நிலைவாழ்வு நிச்சயம் தான். 

இவ்வுலகிலே நிலைவாழ்வை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் வார்த்தையும் வாழ்க்கையும் இணைந்து செல்ல வேண்டும்.

இயேசுவை போல, பணியிலும் பணிவிலும் பேசும் வார்த்தையிலும் கருத்தாய் இருப்போம்… அதனால் நிலைவாழ்வு நமக்கு சாத்தியமே…

பிலிப்பியர் 2:14 இவ்வாறு சொல்கிறது, “முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள்”

 

இயேசுவின் உடலே உணவு…

19.04.2024 - வெள்ளிக் கிழமை

“வயிறு எல்லா வகை உணவுகளையும் உட்கொள்கிறது; எனினும் ஒரு வகை உணவு மற்றொன்றைவிட மேலானது” - சீராக் 36:18

இயற்கை (தாவரங்கள், விலங்குகள், கடல் உயிரினங்கள்) தன்னை இழந்து பிறர்நிலை உயர உணவாகிறது. அவற்றின் உடல்தான் நமக்கு உணவு. சைவம், அசைவம் என்று நாம் தான் பிரித்து வைத்திருக்கின்றோம். ஆனால் ஏதாவது ஒன்றின் உயிரை கொன்று தான் நாம் உணவை நாம் பெறுகிறோம். இது தான் சார்புநிலை.

நாம் இறைவனையும் சார்ந்து இருக்கிறோம். அவரது உடலும் இரத்தமும் நமக்கு உணவாக மாறுகிறது. நாம் வாழ்வு பெற அவர் தன்னை இழக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:52-59) நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக்  கொடுக்க இயலும்? என்ற வாக்குவாதம் யூதர்களிடையே எழுவதை பார்க்கிறோம். இயேசு தனது உடலையே உணவாகத் தருகிறார். தன் இரத்தத்தை பானமாக தருகிறார்.

இயேசுவின் உடலை உண்பவர்களை தொடக்கக் காலத் திருஅவையில் தன் இனம் திண்ணும் கூட்டத்தினர் (Cannibals) என்று அழைத்தனர். இதை போன்ற வாக்குவாதம் தான், இயேசு தன் உடலை அப்பத்தின் வடிவில் உணவாக கொடுத்த நேரத்திலும் (அவர் வாழ்ந்த காலத்திலும்) எழுந்தது. எப்படி நாம் அவருடைய உடலை உணவாக உண்ண முடியும் என்பது அவர்களுடைய வாக்குவாதம்.

இங்கு இயேசு தன் உடலை தருதல் என்பது தன்னை இழப்பது, தியாகம் செய்வது, பிறரன்பு பணிசெய்வது ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறது. யார் மீது நாம் அதிக அன்பு வைத்திருக்கின்றோமோ அவர்களுக்காக நாம் நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கையளிக்க தயாராக இருப்போமே அது தான் இங்கு புலப்படுகிறது. 

நம்மை அன்பு செய்வோரை, நாம் பதிலன்பு செய்வோம். ஆனால் இங்கு தம் பகைவருக்காகவும் இயேசு தமது உடலை இழக்கத் துணிகிறார். இது தான் தெய்வ அன்பு.

உரோமையர் திருமுகம் 5:7,8இல் நாம் இவ்வாறு காண்கிறோம், “நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம்.  ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்”.

தன்னையே கொடுத்து மற்றவர்களுக்காக தன்நிலை இழக்க இயேசு அழைப்பு விடுக்கிறார். 

நாம் நம்மை பகிர்ந்து கொடுக்க வேண்டாம், நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொடுப்போம். ஒருவேளை பகிர்ந்து கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, பிறரிடமிருந்து பிடுங்கிக் கொள்ளாமலாவது இருப்போம்.


உயிர் (நிலைவாழ்வு) தரும் உணவு இயேசுவே…

18.04.2024 - வியாழக் கிழமை

"அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும்" - 1 யோவான் 2:25

உணவில்லாமல் உயிர் வாழ முடியாது. அதே போல உணர்வு இல்லாமலும் உயிர் வாழ முடியாது. இந்த இரண்டும் ஒருவரிடம் இல்லை என்றால் அவர் இறந்தவர் போன்றவரே. மரணப் படுக்கையில் இருக்கின்றவர் திட உணவு உண்பதை நிறுத்திக் கொண்டார் என்றால் நேரம் நெருங்கி வந்து விட்டது என்பதை நாம் உணர முடியும். படுக்கையில் இருப்பவர் உணர்வில்லாமல் இருந்தார் என்றாலும் அவர் அடுத்து சுயநினைவுக்கு திரும்புவாரா என்பது சந்தேகம் தான்.

பிறர் உயிர் வாழ நாம் உணவை பகிர வேண்டும், பிறர் நல்வாழ்வு வாழ பிறரின் உணர்வை நாம் மதிக்க வேண்டும். இயேசு இவ்வுலகிற்கு உணவாக வந்தார், பிறரின் உணர்வை மதித்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:44-51) தந்தையை நோக்கிய ஈர்ப்பு, தந்தையிடமிருந்து கற்றுக் கொள்தல், தந்தைக்கு செவிசாய்த்தல் இவை தான் நிலை வாழ்வை பெறுவதற்கான வழிமுறைகளாக கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை மகனுக்கு சான்று பகர்கிறார், மகன் தந்தைக்கு சான்று பகர்கிறார். 

பழைய ஏற்பாட்டு பாலைவன மன்னாவும் புதிய ஏற்பாட்டு இயேசுவின் உடலும் ஒன்றல்ல. பாலைவனத்தில் மன்னாவை உண்டவர்கள் மடிந்து போனார்கள். காரணம் அது அவர்களின் உடல் பசியை மட்டும் ஆற்றியது. அனுதின உணவை அவர்கள் உண்டார்கள். அவர்கள் உண்ட உணவு அவர்களுக்கு நிலைவாழ்வு கொடுக்கவில்லை.

இயேசு தன்னையே உணவாகத் தருகிறார். அவரில் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்றும் வாழ்வார்கள் (இவ்வுலகில் இறப்பு உண்டு, மறுஉலகில் நாம் செய்த செயலுக்கான, நாம் கொண்ட நம்பிக்கைக்கான கைம்மாறாக நிலைவாழ்வு உண்டு).

இயேசுவின் வார்த்தை, வாழ்வுமுறை, போதனை, தியாகம் ஆகியவை நமக்கான உணவு. அவரில் நம்பிக்கை கொள்வோர் என்றும் நிலைவாழ்வு பெறுவர்.

இயேசுவின் உடலை (நற்கருணையை) நம்ப மறுப்போருக்கு புனித அகுஸ்தினாரின் பதில், “நம்முடைய கண்கள் காண்பது சாதாரண அப்பமும் திராட்சை இரசமும் தான். அப்பத்தை இயேசுவின் உடலாகவும் திராட்சை இரசத்தை இயேசுவின் இரத்தமாகவும் ஏற்றுக் கொள்ள நமது நம்பிக்கை நமக்கு உதவுகிறது. சுருக்கமாக சொல்லப்பட்டதனால் இதை புரிந்துக் கொள்ள நமக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் நம்பிக்கைக்கு விளக்கம் தேவையில்லை”. 

இயேசுவின் உடல் நமக்கு நலமளிக்கும், நிலைவாழ்வு கொடுக்கும்.

 

என் கடமையைச் செய்ய…

17.04.2024 - புதன் கிழமை

"அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்" - 1 யோவான் 2:6

மனிதராய் படைக்கப்பட்ட ஒவ்வொருக்கும் கடமைகளும் உரிமைகளும் இருக்கின்றன. உரிமைகளை பெறுவதற்கு நாம் காட்டும் ஆர்வம் கடமைகளை நிறைவேற்றுவதில் இருப்பதில்லை. சில காரியங்கள் கடமைக்காக செய்யப்படுகின்றன. 

தேர்தல் காலங்களில் சிலரின் கடமையுணர்ச்சி பொங்கி வழிகிறது. (உதாரணமாக, மக்களை தேடி வருவது, முதியவர்களை சந்தித்து பணம் கொடுப்பது, குடிசையில் வாழும் மக்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்வது, சாலைகளை தூய்மைப்படுத்துவது…) தேர்தல் முடிந்ததும் நம் உரிமைகளை பெறுவதற்காக நாம் தான் ஏங்கி நிற்க வேண்டும். 

சில மனிதர்கள் போலியாக எல்லாவற்றையும் செய்கிறார்கள் என்றாலும் அவர்கள் பின்னாலும் ஒரு கூட்டம் நிற்க தான் செய்கிறது. போலியான வாக்குறுதிகள், போலியான பரப்புரைகள், போலியான வாழ்க்கை முறை என எல்லாவற்றிலும் போலித்தனம். போலிகளைக் கண்டு நாமும் போலிகளாக மாறி விடுகின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:35-40) வாழ்வு தருபவராய் இருப்பவரை, தம் பணிவாழ்வில் வாழ்வு கொடுத்தவரை மக்கள் கூட்டத்தினர் ஏற்றுக் கொள்ள தயங்குகின்றனர். அடையாளங்களை கண்டிருந்தும் அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். 

இருந்தபோதிலும், தந்தை எனக்கு கொடுத்த கடமையை நிறைவேற்றவே நான் இவ்வுலகிற்கு வந்தேன் என்கிறார் இயேசு. தன் சொந்த விருப்பத்தை அல்ல தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வந்தேன் என்கிறார். இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட கடமை அல்லது பணி என்பது எவரையும் அழியவிடாமல் அனைவரையும் இறுதிநாளில் உயிர்த்தெழ செய்ய வேண்டும். மகனில் நம்பிக்கை கொள்வோர் இத்தகைய உயிர்த்தெழுதலின் வாயிலாக நிலைவாழ்வை கொண்டிருப்பர் என்பது உறுதி.

நான் இந்த உலகத்தில் படைக்கப்பட்டதன் நோக்கத்தை சரிவர நிறைவேற்றுகிறேனா? கடமைகளை கண்ணும் கருத்துமாய் செயல்படுத்துகிறேனா? என்ற கேள்விகள் நம்மில் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்.

புனித அகுஸ்தினார் சொல்வார், ‘நாம் செய்ய வேண்டிய செயல்களை செய்யும்போது நாம் பாராட்டுகளை பெறுவதற்கு தகுதி அற்றவர்கள். ஏனென்றால் அது நமது கடமை’.

‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என்பார்களே அது தான் நம் இலக்கு.

இயேசுவை போல கடமையை செய்வோம்… அதன் வழியாக நம் உரிமைகளை பெறுவோம்…


ஆன்ம உணவைத் தேடி...


16.04.2024 - செவ்வாய்க் கிழமை

"வயிற்றுக்காகவே ஒருவர் வேலை செய்கிறார்; ஆனால், அவருக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை" - சபை உரையாளர் 6:7 

மனித வாழ்க்கையின் போராட்டமே உணவில் தான் தொடங்குகிறது. உணவு இல்லை என்றால் நாம் நிச்சயமாக வாழ முடியாது. உணவு நம்முடைய அடிப்படை தேவைகளில் ஒன்றாக இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. 

தினமும் ஒருவேளை உணவு இல்லாமல் உறங்கச் செல்லக்கூடிய மனிதர்களும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது வருந்தத்தக்க விஷயம்.

வயிற்றை நிரப்புவது மட்டும் நம்முடைய நோக்கமாக இருந்தது என்று சொன்னால் நம்முடைய வாழ்க்கை சிறப்பானதாக இருக்காது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:30-35) உணவிற்காக ஒரு கூட்டம் இயேசுவை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் உம்மை கண்டு நம்புவதற்கு எங்களுக்கு அரும் அடையாளம் ஒன்றை காட்டும் என்றும் அவர்கள் சோதிக்கின்றனர். பாலைவனத்தில் எங்களுடைய முன்னோர் மன்னாவை உண்டனர் என்று அவர்கள் பழைய ஏற்பாட்டின் நிகழ்வை அங்கு நினைவுப்படுத்துகிறார்கள். 

அந்த உணவு என் தந்தை வானில் இருந்து அவர்களுக்கு கொடுத்த உணவு என்பதை இயேசு அங்கு தெளிவுப்படுத்துகிறார். வானிலிருந்து அவர் தரும் உணவை உண்போர் வாழ்வை கொண்டிருப்பர் என்கிறார் இயேசு. 

அந்த வாழ்வு தரும் உணவு நானே என்கிறார். என்னிடம் வருபவருக்கு பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொள்கிறவருக்கு தாகமே இராது என்கிறார் இயேசு.

தங்களுடைய வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள ஏதாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு அலைந்து திரிபவர்கள் ஏராளம். தேடுவதை கண்டு கொண்டால் மகிழ்ச்சி, இல்லையென்றால் வாழ்க்கை குறித்த கவலை தான் எழுகிறது. 

தேடுதல் என்பது உணவை குறித்த தேடுதலாக இருக்கலாம், உறவை குறித்த தேடுதலாக இருக்கலாம், உணர்வு சார்ந்த தேடுதலாக இருக்கலாம். உடலுக்கு ஊட்டம் தரும் உணவும் ஆன்மாவிற்கு உறுதி ஊட்டும் உணவும் நம்முடைய வாழ்க்கைக்கு அவசியம். 

என்னுடைய தேடுதல் என்பது என்னுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டும் நின்று விடாமல் என்னுடைய ஆன்மிக தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் இருக்க வேண்டும். 

கடவுள் மீது நம்பிக்கை என்பது வழிபாடுகளை நிறைவேற்றுவதில் மட்டுமல்ல வழிபாட்டை வாழ்வாக மாற்றுவதில் தான் இருக்கிறது. 

எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உண்டு எனச் சொல்கிறவர்கள் அதை தன்னுடைய செயல்களில் காட்டாவிட்டால் அந்த நம்பிக்கை என்பது பயனற்றது.

அழிந்து போகின்றவைக்காக உழைக்க வேண்டாம்...

15.04.2024 - திங்கட் கிழமை

"சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை" - 1 கொரிந்தியர் 1:18 

நம்மிடம் எல்லாம் நிறைவாக இருந்தும் நம்மிடம் இல்லாதது மற்றவரிடம் இருப்பதை நாம் கண்டோம் என்றால், அதை அடைய வேண்டும் என்று ஆவல் நம்மிடம் வந்து விடுகிறது. 

இருப்பதில் நம்முடைய மனம் எப்போதும் நிறைவு கொள்வதில்லை. எதுவெல்லாம் அழிந்து போகக் கூடியதாய் இருக்கின்றதோ, எது எல்லாம் அழிவை உண்டு பண்ணக் கூடியதாக இருக்கின்றதோ அதைத்தான் நாம் விரும்பி தேடுகிறோம். 

நிலையில்லாத உலகில் நிலையற்றவைகளை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:22-29) இயேசு செய்த அரும் அடையாளத்திற்காக அன்றி, இயேசு கொடுத்த உணவிற்காக  மக்கள் கூட்டம் அவரை பின் தொடர்கிறது. இயேசு அந்த மக்கள் கூட்டத்தை பார்த்து சொல்கிற பதில்,, 'அழிந்து போகும் உணவிற்காக உழைக்க வேண்டாம். நிலை வாழ்வு தரும் அழியாத உணவிற்காக உழையுங்கள்'.

இந்த உலகத்தில் நாம் சம்பாதிக்க கூடிய, நாம் வாங்கிக் கொள்ளக்கூடிய பொருட்கள் நமக்கு பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும் அல்லது மற்றவர்களுக்கு அது பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும். பயன்படாமல் பதுக்கி வைக்கப்பட கூடிய, பாதுகாக்கப்பட கூடிய பொருட்களால் எந்த பலனும் இல்லை.

நம்முடைய வாழ்க்கையில் நிலை வாழ்வு தரக்கூடியவரை நாம் முன்னிலைப்படுத்தினோம் என்று சொன்னால் இந்த அழியும் செல்வங்கள் நமக்கு ஒரு பொருட்டாக தெரியாது.. பொருட்களை எளிதாக நாம் சம்பாதித்து விடுகிறோம், உறவுகளை நம்மால் சம்பாதிக்க முடிவதில்லை. செல்வங்களை நாம் சம்பாதித்து விடுகிறோம், ஆனால் கடவுளின் அருளை நம்மால் சம்பாதிக்க முடிவதில்லை. 

கடவுள் தரக்கூடிய அந்த நிலை வாழ்வை நோக்கிய பயணத்தில் நாம் அடியெடுத்து வைப்போம். அவரில் நம்முடைய நம்பிக்கையை வைப்போம்.

அழிந்து போகக்கூடிய நிலையை விடுத்து, அழியா நிலைவாழ்வை தரும் இயேசுவில் நம் நம்பிக்கையை வைப்போம்.

உங்களுக்கு அமைதி உரித்தாகுக!

 

14.04.2024 - ஞாயிற்றுக் கிழமை

“இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில் ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்” - திருப்பாடல்கள் 4:8

அமைதி தேடி நெஞ்சங்கள் இங்கு அலைகிறது வீதிகளில். எனக்கு யார் அமைதி தருவார், எனக்கான அமைதி எங்கிருந்து வரும்? என்று கேட்காத உதடுகளும் இல்லை ஏங்காத உள்ளமும் இல்லை.

சில வேளைகளில் நாம் நம்பியிருக்க கூடியவை (தீய உறவுகள், கெட்ட செயல்கள்) மகிழ்ச்சி, அமைதி கொடுக்கிறது என்ற எண்ணத்தில் நாம் சிறைப்பட்டு விடுகிறோம். ஒருமுறை அடைபட்டோம் என்றால் மீண்டும் அதிலிருந்து மீண்டு வருவது கடினம் தான். சிலர் சிறைப்பட்டு சுகம் கண்டுவிடுகின்றனர், சிலர் சிறையிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். 

ஆனால் அடைப்பட்ட எல்லா உள்ளங்களும் முடங்கியே கிடப்பதில்லை. அடைப்பட்ட இடத்தில் இருந்து சிறகு (தெளிவு, தன்னம்பிக்கை) முளைக்கிறது. முளைத்த சிறகை திரும்பி பார்த்தவர்கள், அதன் ஆற்றலை உணர்ந்தவர்கள் அதன் உதவியால் சிறகடித்து பறக்கின்றனர்.

நாம் மற்றவர்களை நமக்குள் அனுமதிக்காத வரை, நம்முடைய அமைதியை யாரும் குலைக்க முடியாது. நம்முடைய அனுமதி இல்லாமல் யாரும் நம்மை தொந்தரவு செய்யவும் முடியாது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 24:35-48) சீடர்கள் தங்களுக்குள் அமைதியின்றி தவித்தனர். எனவே உயிர்த்த ஆண்டவர் அவர்களை வாழ்த்தும் செய்தி இவ்வாறாக அமைகிறது, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக”. அவர்களுக்குள் இருந்த அமைதியை எது சிதைத்தது? பயம் தான். இறந்தவர் இறந்தவராகவே போய்விடுவார், நம்மை வழிநடத்த இனி யாரும் இல்லை, நாம் தைரியமாக வெளியே செல்ல முடியாது என்ற பய ஓட்டம் அவர்களுக்குள் அதிகரித்தது.

இயேசுவை கண்ட போதிலும் அவர்கள் அச்சமுற்றவர்களாய் தான் காணப்பட்டார்கள். “ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஜயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டு பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று சொல்லி அவர்களின் அச்சத்தை போக்கி அமைதியை கொடுக்கிறார் இயேசு.

சீடர்கள் அச்சம் நீங்கி, அமைதி பெற்றார்கள். அதன்பிறகு அவர்கள் செய்ய வேண்டிய பணியை (பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட) அவர்களுக்கு நினைவுப்படுத்துகிறார் இயேசு.

இன்று நம்மிலும் அமைதியற்ற சூழல் காணப்படுகின்றது. யாரோ சொன்ன வார்த்தைகள் நம் அமைதியை சீர்குலைக்கின்றது. உண்மையில்லாத வதந்திகள் நம் நிம்மதியை சிதைக்கின்றது. இறுதிவரை உடன் இருப்பேன் என்று சொல்லி ஏமாற்றிய வார்த்தைகள் நம் அமைதியை நிலைகுலைய செய்கின்றது.

யார் நமக்கு அமைதியை தருவார்?

உலகம் தரமுடியாத அமைதியை தருபவர் இயேசு. யோவான் நற்செய்தி 14:27இல் இயேசு சொல்கிறார், “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்”.

மனிதர் எனக்கு எதிராக எத்தனையோ இழிவான செயல்களைச் செய்யலாம். என்னை அழிக்க திட்டம் தீட்டலாம். கடவுள் என் சார்பாக இருக்கும் போது எனக்கு எதிராக இருப்பவர் யார்?

எபிரேயர் 13:6 இவ்வாறு சொல்கிறது, “இதனால், நாம் துணிவோடு, “ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன்; மனிதர் எனக்கு எதிராக என்ன செய்யமுடியும்?” என்று கூறலாம்”.

அவரில் நம்பிக்கைக் கொள்வோர் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை. அவரில் நம்பிக்கைக் கொள்வோர் அவர் தரும் அமைதியை பெறுவர்.


அஞ்சாதே! திகையாதே!

13.04.2024 - சனிக் கிழமை

“வலிமைபெறு; துணிவுகொள்; அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே; ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்; உன்னைக் கைவிடவும் மாட்டார்” - இணைச் சட்டம் 31:6

‘நான் உன்னோடு இருக்கிறேன்’ என்று நாம் எதிர்பார்க்கக் கூடியவர்கள் நமக்கு பதில் கொடுத்தார்கள் என்றார்கள் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை. ஆறுதல் தரும் வார்த்தைகள் ஒவ்வொருவர் வாழ்க்கையில் அவசியம். ஆறுதல் இல்லாமல் வாழ்க்கை நகர்வதில்லை. 

தனிமையில் சில வார்த்தைகள் ஆறுதல், சிலரின் உடனிருப்பு ஆறுதல். வாழ்க்கை குறித்த கேள்விகளோடு இருப்பவர்களுக்கு தவிப்பும் தனிமையும் மிகப் பெரிய கொடுமை. இந்த தருணங்களில் சிலர் மனம் உடைந்து போகின்றனர், சிலர் வாழ்க்கையை வெறுத்து விடுகின்றனர். 

அஞ்சாதே! திகையாதே! நான் உன்னோடு இருக்கிறேன் என்பது வெறும் வார்த்தை அல்ல அது நம்பிக்கை…

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:16-21) சீடர்களுக்குள்ளே அச்சம் நிலவுகிறது. காரணம் அவர்கள் மாலை வேளையில் படகேறி கப்பர்நாகுமுக்கு புறப்பட்டுச் செல்கிறார்கள். இயேசு அவர்களோடு இல்லை, பெருங்காற்று வீசுகிறது, கடல் பொங்கி எழுகிறது, இயேசு கடல்மீது நடந்து வருகிறார், அவரை அவர்கள் இயேசு என்று அறிந்துக் கொள்ளாமல் அஞ்சுகிறார்கள். அப்போது இயேசு அவர்களிடம், “நான்தான் அஞ்சாதீர்கள்” என்கிறார்.

சீடர்களின் அச்சம் நீங்குகிறது, இயேசுவை படகில் ஏற்றுக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.

அச்சம் இருக்கும் இடத்தில் தயக்கம் இருக்கும். பயம் இருக்கும் இடத்தில் முன்னேற்றம் இருக்காது. அச்சம் நீங்கினால் வாழ்வில் முன்னேற்றம் தான். 

புனித தந்தை பியோ சொல்வார், ‘பயப்படாதே! கடவுள் உன்னோடு இருக்கிறார்’.

கடவுள் நம்மில் இயங்குகிறார் என்றால் நம் வழியாக மற்றவர்கள் அமைதியை பெற வேண்டும். அமைதி இருக்கும் இடத்தில் அச்சத்திற்கு இடம் இல்லை.

இயேசு தரும் அமைதியை போல் நாம் நம்மோடு வாழ்பவர்களுக்கு நம்மால் முடிந்த மட்டும் அமைதியை கொடுப்போம். அதன் மூலம் அச்சம் நீங்கும், உள்ளத்தில் ஒளி உண்டாகும்.


இயேசுவைப் பின்தொடர்ந்த கூட்டம்…

 

12.04.2024 - வெள்ளிக் கிழமை

“நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்” - எபிரேயர் 4:15

நமக்கு ஒருவரை எதற்காக பிடிக்க ஆரம்பிக்கிறது? ஒருவர் நல்லவர் என்பதால், அவர் பேசுவது ஆறுதல் தரும் என்பதால், அவரின் உடனிருப்பே இன்பம் கொடுக்கும் என்பதால், தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்வார் என்பதால், தன் குறைகளை பெரிதுப்படுத்த மாட்டார் என்பதனால், தனது ஆசைகளை நிறைவேற்றுவார் என்பதனால்… இவ்வாறாக பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நமக்கு ஒருவரை பிடிக்கிறது என்றாலும் காரணம் உண்டு, நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றாலும் காரணம் உண்டு. 

மனிதர்கள் பல வேளையில் கண்மூடித்தனமாக மற்றவர்களை பின்பற்றுகிறார்கள். தங்களின் முன்மாதிரியாக, தலைவராக, ஹீரோவாக சிலரை கொண்டுள்ளனர். இன்றைய கால தலைவர்கள் எல்லோரும் தலைமைத்துவ பண்மை கொண்டுள்ளனரா என்பது கேள்விக்குறி! பணம், அதிகாரம் நல்ல தலைவர்களை உருவாக்காது. அது அடிமைச் சமூகத்தை தான் உருவாக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:1-15) இயேசுவை ஒரு கூட்டம் பின்பற்றுகிறது. எல்லாம் தேவைக்காக, ஆதாய நோக்கில் தான். இயேசு செய்த அரும் அடையாளங்களை கண்டு அவரை பின்பற்றியோர் பலர். பலன் முடிந்ததும் கைக்கழுவி விடும் கூட்டம் இது. இயேசு என்னும் தலைவர் மக்களின் தேவைகளை கண்டுணர்கிறார், நோய்களை நீக்குகிறார், பசியாற்றுகிறார், பரிவு கொள்கிறார், பகிர்ந்தளிக்கிறார், தன்னுடைய சீடர்களில் தலைமைத்துவ பண்பை ஏற்படுத்துகிறார். 

இயேசு கொணரும் தலைமைத்துவம் என்பது இல்லாமையை நீக்குவது, இருப்பதிலிருந்து பகிர்வது.

எனக்குள்ளும் தலைமைத்துவம் இருக்கிறது. அதை நான் சரிவர வெளிக்கொணர்கிறேனா? என்னையும் மக்கள் பின்தொடர்கிறார்களா? என்னால் தூவப்பட்ட தலைமைத்துவம் மற்றவர்களை தலைவர்களாக உருவாக்கியிருக்கிறதா? என்ற கேள்விகள் நம்மில் எழுப்பப்படட்டும்.

தலைமைத்துவத்தை நோக்கி படையெடுப்போம்… புதிய சமூகம் படைக்க…


மேலானவரின் மேல் நம்பிக்கை…

 

11.04.2024 - வியாழக் கிழமை

“மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும்விட உயர்ந்தது அவரது மாட்சி” - திருப்பாடல்கள் 113:4

யார் பெரியவர்? யார் சிறந்தவர்? யார் உயர்ந்தவர்? என்ற பல கேள்விகள் மனிதர்களிடம் கேட்கப்படுகின்றன. மண்ணகத்தில் ஒருவரும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. உயர்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவினை மனிதர்களால் கொண்டு வரப்பட்டது. படைத்தவரை விட படைக்கப்பட்ட பொருள் உயர்ந்தது இல்லை. 

இன்று மனிதர்கள் தங்களை உயர்ந்தவர்களாக எண்ணிக் கொள்கிறார்கள். தங்களை உயர்ந்தவர்களாக எண்ணுவது தவறில்லை, ஆனால் மற்றவர்களை தாழ்வாக எண்ணுவது மிகத் தவறு. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3:31-36) மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர் என்கிறார் இயேசு. இங்கு இயேசு தன்னை பெருமைப்படுத்தவில்லை, மாறாக தனது பணி அங்கீகரிக்கப்படவில்லை என்பதை எடுத்துச் சொல்கிறார். நான் தரும் சான்றை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை, நான் கடவுளின் சார்பாக பேசுகிறேன் என்பதையும் நீங்கள் புரிந்துக் கொள்வதில்லை என்கிறார். தந்தை மகன் மீது நம்பிக்கை கொண்டு அனைத்தையும் அவரிடத்தில் ஒப்படைத்திருக்கிறார் என்பதை நீங்கள் நம்பவில்லை என்றால் நீங்கள் வாழ்வு பெற மாட்டீர்கள் என்கிறார். 

இங்கு மேலானவரை நம்புதல் என்பது அவரது வார்த்தையை ஏற்றுக் கொள்தலையும், அதன்படி நடத்தலையும் குறிக்கிறது. அவரது வார்த்தையின் படி நடப்போர் ஒருபோதும் நிலைவாழ்வை பெறாமல் போவதில்லை.

கடவுளை நாம் சார்ந்து இருக்கும்போது நாம் நம்மை உயர்வாக எண்ண மாட்டோம். தன்னை மட்டும் முன்னிலைப்படுத்துவோர் பிறர்மீது அக்கறை கொள்ளமாட்டார். 

இன்று சக மனிதர்கள் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை கூட, நாம் இறைவன் மீது வைப்பதில்லை. இன்று நம்முடைய நம்பிக்கையெல்லாம் உடனடி பலனை (கைம்மாறை) எதிர்பார்க்கிறது. எதாவது கிடைக்குமா என்பது அல்ல நம்பிக்கை, எல்லாமே கைக்கூடும் என்பதே நம்பிக்கை.

எளிய நம்பிக்கையாக அல்ல… மேலான நம்பிக்கையாக நம் நம்பிக்கை மாறட்டும்…


நம்பிக்கை என்னும் நலமான வாழ்வு

10.04.2024 - புதன் கிழமை

“உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர்; ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை” - திருப்பாடல்கள் 9:10

சில அன்புக்குரியோர் உடனிருந்தாலே, மலையை பிளக்கக்கூடிய ஆற்றல் நம்மிடம் இருப்பது போல இருக்கும். அன்புக்குரியவர் தரும் நம்பிக்கையும் நேர்மறை சிந்தனைகளும் நம்மை எப்பொழுதும் தாங்கும். “நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள்” என்கிறது சீராக்கின் ஞான நூல் 6:14.

இன்றையக் காலக் கட்டத்தில் நம்பிக்கை கொண்டதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

சாதாரண மனிதர்களிடம் இருக்கிற நம்பிக்கையே இவ்வளவு ஆற்றல்மிக்கது என்றால், இறைவனில் நாம் நம்பிக்கை கொண்டிருந்தால் இன்னும் ஆற்றலை நாம் அதிகமாக பெற முடியும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3:16-21) தன்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை என்கிறார் இயேசு கிறிஸ்து. இறைவனில் கொள்ளும் நம்பிக்கை நம்மை தண்டனைத் தீர்ப்பிலிருந்து காக்கும். எப்படி நம்பிக்கை நம்மை காக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது! நற்செய்தி தெளிவுப்படுத்துகிறது. “உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்” (யோவான் 2:21)

கடவுளில் நம்பிக்கை கொள்வோர் கடவுள் காட்டும் ஒளியில் நடப்பர், கடவுள் காட்டும் ஒளியில் நடப்போர் தண்டனைத் தீர்ப்பு பெறமாட்டார்கள். தீங்கு செய்வோருக்கு கடவுள்மீது நம்பிக்கை கிடையாது. அவர்கள் செல்வ மிதப்பில் இருப்பதனால் கடவுள் துணை அவர்களுக்கு தேவையில்லை என்று எண்ணுகிறார்கள்.

இன்று இறைவனில் நாம் கொள்ளும் நம்பிக்கை நமக்கு நலமான வாழ்வை கொடுக்கிறது. அவருடைய வார்த்தை பலம் இழந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கை என்னும் வாழ்வு கொடுக்கிறது. 

இறைவனில் இணைந்து ஒளியை நோக்கி பயணிப்போம். அதனால் உலகு நம்மை (நாம் செய்யும் நன்மையை) வெறுக்கலாம். நன்மை செய்வதால் (நம்பிக்கை கொள்வதால்) நாம் இறைவனால் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை.

 

பழைய மனித இயல்பை களைந்து விட…

 

09.04.2024 - செவ்வாய்க் கிழமை

“ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும்” - கொலோசையர் 3:9,10

மறுபடியும் பிறப்பது ஒருவரால் இயலாத காரியம். ஆனால், பிறப்பை புதுப்பிறப்பாய் மாற்றுவது நமது கையில் இருக்கிறது. புதுப்பிறப்பாய் மாறுவது என்பது தன்னுடைய இயலாமையிலிருந்தும் தன்னுடைய நிலையிலிருந்தும் மீண்டு வருவது.

அவர்களை போல நான் இல்லையே, எனக்கு திறமையே இல்லையே, என்னுடைய எண்ணங்கள் எல்லாம் எதிர்மறையாகவே இருக்கிறது, என்னுடைய முன்னேற்றத்தை என் கண்கள் எப்போது காணும்? என்னைப் போன்றோர்கள் எல்லோரும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் நான் மட்டும் இப்படி இருக்கிறேன் என்று பலர் தங்களை குறித்து, இவ்வாறு வருத்திக் கொள்வது உண்டு.

இப்படி எண்ணுவதால் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை, ஒரு முன்னேற்றத்தையும் நாம் காண போவதில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3:7-15) இயேசு நிக்கதேமிடம் ‘மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என்று சொல்கிறார். நிக்கதேமுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது, ஏற்கனவே பிறந்துவிட்ட நான் எப்படி மறுபடியும் பிறக்க முடியும்.

நிக்கதேமின் கேள்வி சரியாகத் தான் தோன்றுகிறது. ஆனால் இயேசு இங்குக் குறிப்பிடும் ‘மறுபடியும் பிற’ என்பது உடலின் மாற்றத்தை குறிப்பது அல்ல மாறாக, உள்ள இயல்பின் மாற்றத்தை குறிப்பது. பழைய மனித இயல்புகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

இன்று நம்மிடம் இருக்கக் கூடிய நம்மைக் குறித்த\மற்றவர்களைக் குறித்த தவறான எண்ணங்கள், இயல்புகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவை நீக்கப்படவில்லை என்றால் நம்மில் இயங்கும் இறைவனை நாம் கண்டு கொள்ள இயலாது. இயேசுவின் வார்த்தையும் நம்மில் தங்காது.

பழைய இயல்புகள் மாறட்டும்… புதுவாழ்வு தொடரட்டும்…


ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு பெருவிழா

08.04.2024 - திங்கட் கிழமை

இன்றைய நாள் மங்கள வார்த்தை நாள் என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கமாக இந்த பெருவிழா மார்ச் 25ஆம் தேதி தான் கொண்டாடப்படும். இந்த ஆண்டு இந்த பெருவிழா புனித வாரத்தில் வந்த காரணத்தால் இன்றைய நாளில் கொண்டாடப்படுகின்றது.

ஏன் மார்ச் 25 ஆம் தேதி கிறிஸ்துவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது? மார்ச் 25 முதல் டிசம்பர் 25 வரை 9 மாதங்கள். ஒரு குழந்தையின் பிறப்பு சராசரியாக 9இலிருந்து 10 மாதங்கள் வரை இருக்கும்.

இறைவன் மனிதராக ஒரு பெண் வழியாக உருவாக போகிறார் என்று கபிரியேல் தூதர் வழியாக முன்னுரைக்கப்பட்ட நாள் தான் இன்று. இயற்கைக்கு அப்பாற்பட்டு ஒரு கன்னிப் பெண் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது வியப்புக்குரிய செயலே. கபிரியேல் தூதர் கன்னி மரியாவிடம் நடந்த உரையாடலில் சந்தேகங்களுக்கு தெளிவும், தெளிவு கிடைத்த பின் அன்னை மரியாவின் தாழ்ச்சியும் வெளிப்படுகின்றது. “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று அன்னை மரியா பதிலிறுப்பு செய்கிறார்.

இறைவனின் தாயாக மாற போகிறேன் என்ற அகங்காரம் இங்கில்லை, மாறாக இறைத்திருவுளத்தை நிறைவேற்ற போகிறேன் என்ற மனநிறைவு இங்கு புலப்படுகிறது. தனக்கு எல்லோரும் பணிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இங்கில்லை, மாறாக தன் உறவினருக்கு பணிவிடை செய்ய புறப்படுகிறார்.

இறைவனின் தாயாக இம்மண்ணில் உருவாகும் முன்னே அவர் இறைவனின் எண்ணத்தில் தாயாக உருவாகி விட்டார். தொடக்க நூல் 3:15 (“உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்”) இதற்கு அடையாளம்.

இயேசுவின் பிறப்பு அறிவிப்பில் அன்னை மரியாவோடு இணைந்து மகிழ்வோம்.

வத்திக்கான் செய்திகளில் இருந்து பெறப்பட்ட வரலாற்று தகவல்

அருள் நிறைந்த மரியே வாழ்க என்று கபிரியேல் வானதூதர் அன்னை மரியாளுக்கு வாழ்த்து செய்தி கூறிய நாளே கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழா என்றழைக்கப்படுகின்றது. திருத்தந்தை முதலாம் ஜெலாசியுஸ் (492-496) காலத்து திருவழிபாட்டு நூலில், ஆண்டவரின் திருவருகை அறிவிப்பு பற்றிய குறிப்பு உள்ளது. 

6ஆம் நூற்றாண்டில் இதே பெயரிலேயே சிறப்பிக்கப்பட்ட இவ்விழாவானது 7ஆம் நூற்றாண்டில் மங்கள வார்த்தை விழா என்று பெயர் மாற்றம் பெற்றது. அதன் பின் திருத்தந்தை புனித பெரிய கிரகோரி (590-604) அவர்களின் திருவழிபாட்டு நூலிலும் இடம் பெற்றது

656ஆம் ஆண்டில் நடைபெற்ற தொலெடோ சங்கம், 692ஆம் ஆண்டு கூடிய துருல்லோ சங்கம் ஆகியவற்றின் விதிகளில் காணப்படும் மங்கள வார்த்தை விழா குறித்த பதிவுகள் இதனை உறுதிசெய்கின்றன.  799ல் நடைபெற்ற சால்ஸ்பர்க் சங்கத்தின் 10வது விதி குறிப்பிடும் மரியாளின் நான்கு திருநாட்களில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழா மார்ச் 25ந்தேதி இடம் பிடித்து 10ஆம் நூற்றாண்டளவில், கடன் திருநாளாக சிறப்பிக்கும் வழக்கமும் உருவானது. 

1895 ஏப்ரல் 23ஆம் நாள், இத்திருநாளை முதல் தர விழாவாக உயர்த்தி திருவழிபாட்டு பேராயம் ஆணையிட்டது. 1969ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 6ஆம் பவுல் அவர்கள் சீரமைத்த திருஅவை நாள்காட்டியில், பெருவிழாக்களின் பட்டியலில் இவ்விழா சேர்க்கப்பட்டது. 

1969 ம் ஆண்டிற்கு பிறகு நடந்த திருவழிபாட்டு மறுசீரமைப்பிற்கு பின், மங்கள வார்த்தை திருவிழா என்பது கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழா என்று அழைக்கப்பட்டது. புதிய திருவழிபாட்டு ஒழுங்கின்படி, மார்ச் மாதம் 25 ம் நாள் கொண்டாடப்படும் இவ்விழாவானது புனித வாரத்திலோ அல்லது உயிர்ப்பு விழாவின் வாரத்திலோ வந்தால், உயிர்ப்பு வாரத்திற்கு அடுத்து வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட வேண்டும் எனவும்,  தவக்காலத்தில் சிறப்பிக்கப்பட்டாலும் பெருவிழாவாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் திருஅவை வலியுறுத்துகின்றது.


நம்பி வாழ்வு பெறுவதற்காக…

07.04.2024 - ஞாயிற்றுக் கிழமை

“நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்” - யோவான் 10:10

இன்று பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு. இது இறைஇரக்கத்தின் ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. தன்னுடைய சீடர்களுக்கு தொடர்ந்து காட்சியின் வழியாக தன்னை வெளிப்படுத்தி, தன்னுடைய இரக்கத்தை பொழிகிறார் இயேசு. 

இயேசுவின் சீடர்களுக்கு சில கேள்விகள் இருந்திருக்கும்… இதுவரை இயேசுவை சார்ந்திருந்தது போதும், இனி இவரால் நமக்கு என்ன பயன்? இவர் திரும்பி வருவாரா? இதனால் தான் ஒருவர் சொல்லும் சாட்சியத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்றைய காலக்கட்டத்தில் நம்மிலும் சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன. கடவுளை ஏன் நம்ப வேண்டும்? கடவுளுக்கு அஞ்சுவதனால் என்ன பயன்? கடவுள் நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை அந்த அளவுக்கு உயர்ந்ததாக தெரியவில்லையே? கடவுள் இருக்கிறார் என்றால் நாம் வாழும் இந்த பூமியில் இத்தனை பிளவுகள் தேவையா? கடவுள் பெயரால் தானே இத்தனை பாகுபாடுகள் இங்கு நிலவுகிறது என்ற எண்ணங்களும் கேள்விகளும் கடவுளை மறக்கடிக்கச் செய்கின்றன.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் ஒன்றை மறந்துவிடக் கூடாது. நம்மை இயக்கக் கூடிய சக்தி இவ்வுலகில் உண்டு. கடவுள் தன்னில், பிறரில், இயற்கையில் செயலாற்றுவதை சிலர் கண்டுக் கொள்கிறார்கள். சிலர் கண்டும் உணர்வதில்லை.

கடவுள் நம்முடைய சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை (நம்முடைய சுதந்திரத்தில் எல்லா வேளையிலும் குறுக்கிட்டார் என்றார் நாம் நாமாக இயங்க முடியாது). அவர் நம்மை இயக்கும் சக்தி தான் ஆனால் நம் சுதந்திர போக்கின்படி செயல்பட நம்மை அனுமதிக்கிறார். கடவுளுக்கு நம்முடைய ஒவ்வொரு அசைவும் தெரியும். நாம் செய்தவை, செய்கிறவை, செய்யப் போறவை எல்லாம் அவர் அறிவார். 

புனித அகுஸ்தினார் சொல்வார், ‘உன்னையன்றி உன்னை படைத்தவர், உன் துணையின்றி உன்னை மீட்க மாட்டார்’.

நம்மை அவர் மீட்க, நம்முடைய முழு ஒத்துழைப்பு அவருக்கு தேவை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 20:19-31) இயேசுவோடு இருந்தவர்களே இயேசுவையும் அவரது உயிர்ப்பையும் நம்ப மறுக்கிறார்கள். அச்சத்தோடு வாழ்ந்தவர்களுக்கு முன் இயேசு தோன்றி அவர்களுக்கு அமைதியை கொடுத்து அவர்களின் அச்ச உணர்வை போக்குகிறார். தூயஆவியைக் கொடுத்து பணிவாழ்வு புரிய அழைப்பு விடுக்கிறார். இயேசுவின் உயிர்ப்பு சீடர்களின் பணி வாழ்வுக்கான தொடக்க புள்ளி. 

இயேசு தோன்றும் போது, சீடர்களுள் ஒருவரான திதிம் என்னும் தோமா அவர்களோடு இல்லை. சீடர்கள் இயேசு தங்களுக்கு காட்சிக் கொடுத்ததை அவரிடம் சொன்ன போது அவர் அதை நம்பவில்லை. மீண்டும் இயேசு எட்டு நாள்களுக்குப் பின் தன்னுடைய சீடர்களுக்கு காட்சித் தருகிறார். தோமா அப்போது அவர்களோடு இருக்கிறார். சந்தேகத்தை நீக்கிக் கொள்ள, “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஜயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்கிறார் இயேசு. 

சந்தேகம் அடைந்த தோமாவுக்கு இப்போதோ தயக்கம் ஏற்படுகிறது. அவ்வளவு வீராப்போடு பேசியவர் இப்போது கூனிக் குறுகி நிற்கிறார். 

நம்மிலும் பலர் இப்படி உண்டு. கண்ணால் கண்டால் மட்டுமே கடவுளை நம்புவேன் என்று சொல்வோரும் உண்டு. ஒருவகையில் புனித தோமாவின் சந்தேகத்தால் நாம் இன்று திடப்பட்டு நிற்கின்றோம். நாம் இறைவன்மீது முழு நம்பிக்கை கொள்ள புனித தோமா ஒரு காரணம்.

தம் பணியை தொடர இயேசு தம் சீடர்களுக்கு பணித்தார். இன்று அதே பணிப்பகிர்வு நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நம்பிக்கை குறைவுள்ளோரிடம் நம்பிக்கையை மிகுதியாக்கவும், வாழ்வு இழந்து காணப்படுவோரிடம் அவர்கள் புதுவாழ்வு பெற உழைக்கவும் நாம் முன்வர வேண்டும். இப்படி செய்யும் போது நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கை மற்றவரை சென்றடையும். நம்பிக்கையினால் புதுவாழ்வு மலரும்…


நம்பிக்கையின்மை தான் காரணம்

 

06.04.2024 - சனிக் கிழமை

“நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை” - எபிரேயர் 11:1

கடவுள் மீது நம்பிக்கை, பிறர் மீது நம்பிக்கை, தன்மீது நம்பிக்கை என்று பல வழிகளில் நாம் நம்பிக்கை கொள்கிறோம். அந்த நம்பிக்கை நிலையானதாக இருக்கிறதா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 

ஒரு மனிதன் நல்வாழ்வு, நீடித்த வாழ்வு வாழ நம்பிக்கை அவசியமாக இருக்கிறது. மனிதனின் பலம் நம்பிக்கையில் இருக்கிறது என்பார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 16:9-15) இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்ப மறுத்தனர் சீடர்கள். இயேசு தங்களோடு இருந்த போது சொன்ன அந்த வார்த்தைகளை கூட அவர்கள் நினைவுக் கூறவில்லை. இயேசு இல்லையே என்று அவர்கள் துயருற்று அழுதுக் கொண்டிருந்தார்கள். இது அவர்களின் இயலாமையை சுட்டுகிறது. நம்பிக்கை அந்த அழுகையை இடமாற்றம் செய்திருக்க வேண்டும். 

ஒன்றன்பின் ஒன்றாக மற்றவர்கள் சொன்ன அந்த வார்த்தைகளின் பொருட்டாவது இயேசுவின் கூற்றையும் அவரது உயிர்த்தெழுதலையும் நம்பியிருக்க வேண்டும். சீடர்கள் கடின உள்ளத்தினராய் இருந்தார்கள். நம்பத் தயங்கினர், மறுத்தனர்.

நம்பிக்கை குறைவோடு ஒருவர் இருக்கின்றபோது நாம் செய்ய வேண்டியது என்ன? இறைவார்த்தை சொல்கிறது, “நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்” - யூதா 1:22

இன்று நம்முடைய எதார்த்த உலகில், நம்பிக்கை குறைவு அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் ஒரு சில நபர்களின் நம்பிக்கைத் துரோகம் தான். நம்பி நம்பி ஏமாந்து போனதால் அடுத்த நபர்கள் மேல் நம்பிக்கை வைக்க முடியா நிலை உருவாகியிருக்கிறது.

நம்பிக்கை துரோகம் ஒரு கொடிய பாவம். அன்புக்குரியவர்களிடம் பொய் சொல்லும் போது, அவர் நம்மீது வைத்த நம்பிக்கைக்கு நாம் துரோகம் செய்கிறோம். 

இயேசு நம்பிக்கைக் குன்றியவர்களை கண்டித்த போதிலும், அவர்களை மனதார மன்னித்தார். அவர்களின் நம்பிக்கையை மிகுதியாக்கினார். நம் நம்பிக்கை இறைவனில் மிகுதியாகவும், நம்பிக்கை குறைவோடு இருப்பவர்களின் வாழ்வை உயர்த்தவும் முற்படுவோம். இயேசுவின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச் சொல்வோம்.


இயேசுவின் பெயர்!


இயேசுவின் பெயரில் தியானம்

தொடக்கப் பாடல் -1

இயேசுவின் நாமம் இனிதான நாமம்

இணையில்லா நாமம் இன்ப நாமம்-எங்கள்


பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்

பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்


பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்

பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்


வானிலும் பூவிலும் மேலான நாமம்

வானாதி வானவர் இயேசுவின் நாமம்


நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்

நம்பினோரை என்றும் கைவிடா நாமம்


வாசிக்க… பிலிப்பியர் 2: 4-11


“ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்” - பிலிப்பியர் 2:10-11

இயேசு தம்மைத் தாழ்த்திக் கொண்டதால் கடவுள் அவரை மிகவே உயர்த்தினார். எப்படிப்பட்ட உயர்த்துதல் என்றால் மேலேயும் கீழேயும் வாழ்வோர் அனைவரும் அவரது பெயருக்கு மண்டியிடுவர். 

இயேசுவின் பெயருக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கிறது

நலம் கொடுக்கும்

பேதுரு அவரிடம் (கால் ஊனமுற்றோரிடம்), “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றி பிடித்து தூக்கிவிட்டார் - திருத்தூதர் பணிகள் 3:6-7

வலுவூட்டும்

இயேசுவின் பெயரே இவருக்கு (கால் ஊனமுற்றோருக்கு) வலுவூட்டியது - திருத்தூதர் பணிகள் 3:16

அடையாளங்கள் அருஞ்செயல்களை செய்யும்

உமது ஊழியர் இயேசுவின்  பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ் செயல்களும் நடைபெறச் செய்யும் - திருத்தூதர் பணிகள் 4:30

துணிவு கொடுக்கும்

… பவுல் ஆண்டவரை வழியில் கண்டதுபற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார் - திருத்தூதர் பணிகள் 9:27

தூய்மையாக்கும்

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள்; கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள் - 1 கொரிந்தியர் 6:11

புத்துயிர் கொடுக்கும்

ஆம் சகோதரரே, ஆண்டவர் பொருட்டு எனக்கு இந்த உதவியைச் செய்யும். கிறிஸ்துவின் பெயரால் உன் உள்ளம் புத்துயிர் பெறச் செய்யும் - பிலமோன் 1:20

இத்தனை மதிப்பு மிக்கது இயேசுவின் திருப்பெயர். இன்று இயேசுவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களால் இயேசுவுக்கு மரியாதைக் கொடுக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறி…


இன்று இந்த இயேசுவின் பெயரால் பல பிளவுகள் காணக்கிடக்கின்றன

1. கிறிஸ்துவின் பிள்ளைகளிடையே பிளவு (1 கொரிந்தியர் 1:10-17)

- கிறிஸ்துவின் பெயரால் திருத்தூதர் பவுல் கெஞ்சிக் கேட்கிறார்

- நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள்

- உங்களிடையே பிளவுகள் வேண்டாம்

- ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்

- நான் பவுலைச் சார்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சார்ந்தவன், நான் கேபாவைச் சார்ந்தவன், நான் கிறிஸ்துவைச் சார்ந்தவன் என்கிறீர்கள்

- கிறிஸ்து இப்படி பிளவுப்பட்டாரா?

- பவுலா உங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டான்? பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றீர்கள்?

- நற்செய்தி அறிவிக்கவே நான் அனுப்பப்பட்டுள்ளேன் (1 கொரிந்தியர் 1:23 - நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம்).

- 1கொரிந்தியர் 2: 2 “நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை”. 

இன்று கிறிஸ்தவர்களிடையே கிறிஸ்து பிளவுப்பட்டு இருக்கிறார். கிறிஸ்துவுக்கு பணிசெய்வதாக சொல்லிவிட்டு நாம் நம்முடைய பெருமைக்கான வழிகளைத் தேடிக் கொள்கிறோம். (“பெருமை பாராட்ட விரும்புகிறவர் அண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்” - 1 கொரிந்தியர் 1:31)

2. திருவிருந்தில் பிளவு (1கொரிந்தியர் 11:17-34)

- நீங்கள் சபையாகக் கூடி வரும்போது உங்களிடையே பிளவு இருக்கிறது.

- உங்களிடையே கட்சிகள் இருக்கின்றன

- நீங்கள் கொண்டு வரும் உணவை நீங்களே உண்டு விடுகிறீர்கள்

- சிலர் பசியோடு இருக்க, சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள்

- கடவுளின் திருச்சபையை இழிவுப்படுத்துகிறீர்கள்

- இயேசுவின் உடல், இரத்தம் என்று உணராமல் உண்கிறீர்கள், பருகுகிறீர்கள்

- ஒருவர் மற்றவருக்காக காத்திருங்கள்

தொடக்கக் கால திருஅவையி;ல் கிறிஸ்துவின் விருந்தில் பங்கெடுக்க அனைவரும் கூடி வருவது வழக்கம். அப்படி வருகின்ற வேளையில் அவர்கள் கொண்டு வருகின்ற உணவை பகிர்ந்துண்ண வேண்டும். அதுதான் கிறிஸ்துவின் திருவிருந்தில் பங்கெடுப்பதன் அடையாளம். ஆனால் அதை தவறாக பயன்படுத்தி பிளவை ஏற்படுத்திய மக்களை பவுல் கண்டிக்கிறார்.

3. இயேசு வெறுப்போர் பிளவை கொணர்வர் (மத்தேயு 10:34-39)

- நற்செய்திக்காக அதன் விழுமியங்களுக்காக இந்த பிளவு உண்டாகிறது

- இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொள்வோரை மற்றவர்கள் வெறுப்பர்

- இயேசுவின் பாதையில் பயணிப்போர் மற்றவர்களால் புறக்கணிக்கப்படுவர்

- குடும்பத்தில் உள்ளவர்களே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிராக எழுவர்

- சிலுவை என்னும் பளுவை சுமக்காதவர்களுக்கும் இயேசுவுக்கும் இடையே பிளவு இருக்கும்

- இயேசுவுக்காக இழப்பை சந்திப்போர் உயிரைக் காத்துக் கொள்வர்


பிளவை எதிர்க்கும் சக்தியாக நாம் மாற வேண்டும். நீதியின் பாதையில் நடப்பதால் எதிர்ப்பு வருகிறதா?  பிளவு வருகிறதா? மகிழ்ச்சி அடைவோம்… நாம் கிறிஸ்துவின் பாதையில் பயணிக்கிறோம்… துன்பத்தில் பங்கெடுக்கிறோம்… 

என் மீட்பர் வாழ்கின்றார் - யோபு 19:25 +  இயேசு உயிரோடிருக்கிறார் - லூக்கா 24:23

 


திரும்பி பார்க்கலாகாது…

 

05.04.2024 - வெள்ளிக் கிழமை

“இயேசு அவரை நோக்கி, கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல என்றார்” - லூக்கா 9:62

திரும்பிப் பார்க்கிறவர் தகுதியுள்ளவர் அல்ல என்ற சொல் துறவற வாழ்வுக்கு மட்டுமல்ல, இல்லற வாழ்வுக்கு பொருந்தும். துறவற நிலை, திருமண நிலை இரண்டும் இறைவனின் பணியை தொடர்ந்து ஆற்றுவதற்கான பணித்தளங்களே. கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்று இயேசுவே கூறியிருக்கிறார். 

இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் என்னும் கலப்பையை பிடித்தவர்கள் திருமணப்பந்தத்தை இறுதிவரை காப்பாற்றிக் கொள்ளமுடியா நிலையில் இருக்கிறார்கள். கோபம், ஆணவம், செருக்கு, தலைக்கணம் மற்றொருவரை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு தடையாக இருக்கிறது. பேசப்பட்ட ஒரு வார்த்தைக்காக விவாகரத்து என்ற நிலைக்கு வந்தவர்களும் உண்டு. கடவுள் கொடுத்த வாழ்வை சிறு பிரச்சினைக்காக அழித்தவர்களும், அழிக்க காரணமாய் இருந்தவர்களும் உண்டு. 

அதேபோல துறவற வாழ்வில், கிறிஸ்து கொடுத்த அழைப்பையும் மேன்மையையும் இழந்தவர்களும் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தகுதியற்றவர்களாய் மாறியதும் உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 21:1-14) இயேசுவின் சீடர்களுக்கும் அதே நிலை தான் ஏற்பட்டது. இயேசுவோடு இருந்தவர்கள், இயேசுவின் இறப்பிற்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எண்ணுகிறார்கள். பேதுரு மற்ற சீடர்களிடம், ‘நான் மீன்பிடிக்கப் போகிறேன்’ என்றார், உடனே மற்ற சீடர்களும் ‘நாங்களும் உம்மோடு வருகிறோம்’ என்று சொல்லி படகில் ஏறினார்கள். சீடர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மறந்து விட்டனர், தாங்கள் சான்று பகர வேண்டும் என்பதை மறுத்து விட்டனர். நற்செய்தி பதிவு செய்கிறது, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு மூன்றாம் முறையாகத் தம் சீடர்களுக்கு தோன்றினார். 

இத்தனை காட்சிகள் கொடுத்தும் அவர்கள் உறுதிப்படவில்லை. முன்னோக்கி செல்ல வேண்டியவர்கள், நிலைதடுமாறி பின்னோக்கி பார்க்க ஆரம்பித்தனர். 

முன்னோக்கி செல்ல வேண்டிய குடும்ப வாழ்க்கை இன்று பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. திருமணத்திலும் துறவறத்திலும் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. 

நம் நிலை என்ன? கலப்பையில் வைத்திருக்கின்ற நமது கை, கடவுளின் பணியை நிறைவு செய்கின்றவரை எடுக்கப்படாமல் இருக்கின்றதா? என்பதை சிந்திப்போம். 

அழைப்பின் மேன்மையை அழித்துவிடாமல்\இழந்துவிடாமல் காப்போம்.


மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வியப்பும் நிறைந்த சாட்சிய வாழ்வு!


 04.04.2024 - வியாழக் கிழமை

“எழுந்து நிமிர்ந்து நில். என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே நான் உனக்குத் தோன்றினேன். நீ என்னைக் கண்டது பற்றியும் நான் உனக்குக் காண்பிக்கப் போவதைப் பற்றியும் சான்று பகர வேண்டும்” - திருத்தூதர் பணிகள் 26:16

மனிதரை நம்புவதற்கு தயக்கம் ஏற்படுகிறது. ஏற்கனவே நடந்த கசப்புணர்வினால் மீண்டும் மீண்டும் தயக்கமும் வருத்தமும் ஏற்படுகின்றது. பிறர்மீது நம்பிக்கை இல்லாத போது எப்படி மகிழ்ச்சி ஏற்படும், அவரை குறித்து வியப்பு வரும். கசப்புணர்வினால் வெறுப்புணர்வு தான் வரும்.

தனக்கு ஒருவர் செய்த நம்பிக்கை துரோகத்தை மன்னிப்பது ஒருவகை, அதை மன்னித்து மறப்பது மற்றொரு வகை. மன்னிப்பதால் மட்டும் ஒருபயனும் இல்லை, மற்றவர்களின் துரோகத்தை மன்னித்து மறக்க வேண்டும். கசப்பும் வெறுப்பும் நம் மகிழ்ச்சியை சிதைத்து விடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 24: 35-48) இயேசு தனக்கு துரோகம் செய்தவர்களையும் தேடி செல்கிறார். அவர்களின் நம்பிக்கையின்மையை போக்குகிறார். அவர்களோடு உணவு உண்ணுகிறார். தனது காட்சியில் எந்த இடத்திலும் ஏன் எனக்கு இப்படி துரோகம் செய்துவிட்டீர்கள் என்று இயேசு கேட்கவில்லை. தவறுகளை மன்னித்து அவர்கள் செய்த செயல்களை மறந்து அவர்களை ஏற்றுக் கொள்கிறார். 

மெசியா துன்புற்று, இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை அறிவிக்கவும், பாவமன்னிப்புப் பெற மனம்மாற அழைப்பு விடுக்கவும் தன்னுடைய சீடர்களை அனுப்புகிறார். 

நம்பிக்கை துரோகம் செய்த சீடர்களின் பரிகாரம் அவர்கள் பின்னாளில் வெளிக்கொணர்ந்த சாட்சிய வாழ்வில் வெளிப்பட்டது. துன்ப வேளையில் மகிழ்ச்சியோடும், தடுமாற்றத்தில் நம்பிக்கையோடும், இயேசுவின் பெயரால் வியப்பான வல்ல செயல்களை செய்வதிலும் அது வெளிப்பட்டது.

சாட்சிய வாழ்வு சொல் வடிவில் அல்ல… செயல் வடிவில் வெளிப்பட வேண்டும்…

நம் வாழ்வில், பணியில் இயேசுவை முன்னிலைப்படுத்துவோம், இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன் வாயிலாக நாம் உயர்த்தப்படுவோம். 


உள்ளம் பற்றியெரிய வேண்டாமா?


03.04.2024 - புதன் கிழமை

இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி பேசுகிறோம், ஆனால் நம்முடைய உள்ளம் அவருடைய உயிர்ப்பினால் பற்றியெரிகிறதா? விதையாக விழுந்த இயேசு விடியலாக உயிர்த்தெழுந்தார். அவரின் உயிர்ப்புப் பலருக்கு புதிரே…

விதை மடிந்து விட்டது என்று எண்ணியவர்கள் பரிசேய சதுசேய கூட்டம் மட்டுமல்ல, மாறாக இயேசுவின் அன்புச் சீடர்களும் தான். 

இனி இயேசுவை காணவே முடியாது என்று எண்ணியவர்களின் உள்ளங்களில் எல்லாம் ஒளி அணைந்துக் கொண்டிருந்தது. அந்த தருணங்களில் தான் இயேசுவின் காட்சி ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது. ஒருவருடைய சாட்சியத்தை மற்றொருவர் ஏற்கவில்லை, தயங்கினார்கள். ஆனால் இயேசு உயிரோடிருக்கிறார் என்ற துளிர் அவர்கள் நடுவே முளைக்க ஆரம்பித்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 24:13-35) எம்மாவு செல்லும் வழியில் இருவரின் உள்ளம் இயேசுவின் உடனிருப்பால் பற்றி எரியும் நிகழ்வை வாசிக்க கேட்கிறோம். ‘வழிநெடுகிலும் நீங்கள் பேசிக்கொண்டிருப்பது என்ன? என்று இயேசு கேட்டதும், அவர்கள் பதில், ‘எருசலேமில் தங்கியிருப்பவருள் உமக்கு மட்டும்தான் இந்நாளில் நிகழ்ந்தவை தெரியாதோ!... நாசரேத்து இயேசுவைப் பற்றியே பேசுகின்றோம்’ என்று இயேசுவோடு இயேசுவை பற்றி பேசினார்கள்.

இறைவார்த்தையும் இறைஉணவும் பகிரப்பட்ட போது அந்த இருவர் இயேசுவை இன்னாரென்று அறிந்துக் கொண்டனர். அவர்கள் உள்ளம் பற்றியெரிந்தது.

நம்முடைய எதார்த்த வாழ்வில், உடனிருப்பவர்களின் உள்ளம் பல வேளைகளில் நம்மோடு ஒன்றிப்போவதில்லை. அவர்கள் நம்மைவிட்டு பிரிந்த பிறகு அவர்களின் நினைவுகள் நம்மைவிட்டு விலகுவதில்லை. நெருக்கமானவரின் நினைவலைகள் நம்மில் பற்றியெரிந்துக் கொண்டிருக்கும். (இருக்கும்போது அன்பு புரியாது)

இயேசுவை அடுத்தவரில்\அடுத்தவரின் நலனில் கண்டோம் என்றால் ஒவ்வொரு நாளும் உயிர்ப்பின் நாளே! ஒவ்வொரு நாளும் புதுப்பொலிவின் நாளே!

 

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...