10.04.2025 - வியாழக்கிழமை
இறக்கும்வரை உண்மைக்காகப் போராடு; கடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார் - சீராக்கின் ஞானம் 4:28
சிலருக்கு உண்மையை பிடிக்கும். ஆனால் உண்மை பேசுபவர்களை பிடிக்காது. அதிலும் குறிப்பாக பிடிக்காத நபர் பேசுவது உண்மையாக இருந்தாலும் கூட, அது பிடிக்கவே பிடிக்காது.
எதிரிகள் இவ்வுலகில் உருவாக்கப்படுகிறார்கள். உண்மை பேசுபவர்கள் எதிரியாக பார்க்கப்படுகிறார்கள். ஏன் பிறருக்கு எதிரியாக மாற வேண்டும் என்ற எண்ணமே நம்மை ஆளுக்கு ஏற்றார் போல பேச வைத்து விடுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 8: 51-59) இயேசு யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
யூதர்கள் அவரிடம், “நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” என்றார்கள்.
இயேசுவின் வார்த்தையை மேலோட்டமாக காணும் போது அது சாதாரண அர்த்தத்தை தான் கொடுக்கும். "சாகமாட்டார்கள்" என்ற வார்த்தையை இவ்வுலக பார்வையிலே அவர்கள் புரிந்துக் கொண்டார்கள்.
இறப்பைக் கடந்த வாழ்வு உண்டு என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. இவ்வுலகில் கூட சிலர் இப்படி சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இறந்தாலும் அவர் நம்மில் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார். (ஒருவர் செய்த நற்செயல் வாயிலாக அவர் என்றும் வாழ்ந்துக்கொண்டே தான் இருப்பார்).
சிலர் ஆற்றிய தொண்டுச் செயல் வாயிலாக அவர்கள் புகழ் இவ்வுலகில் நிலைத்து நிற்க தான் செய்யும்.
இயேசுவின் வார்த்தையை ஏற்று நடப்பவர்கள் இவ்வுலகால் நிராகரிக்கப்பட்டது போல தோன்றினாலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அவ்வுலகில் அவர்களுக்கு பெருமை சேர்க்கும்...
உண்மையை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம். உண்மை நமக்கு விடுதலை அளிக்கும்...
No comments:
Post a Comment