பொதுக்காலம் 15 ஆம் வாரம்
18.07.2024 - வியாழக் கிழமை
"உன்னை வெறுக்கும் ஒருவரின் கழுதை சுமையினால் படுத்துவிட்டதை நீ கண்டால், அந்நிலையில் அவரை விட்டகலாதே! அதைத் தூக்கிவிட அவருக்கு உதவிசெய்" - விடுதலைப் பயணம் 23:5
சுமை எப்படி எளிதாக இருக்க முடியும்? சுமக்கிறவருக்கு தான் தெரியும் சுமையின் பளு. ஒருவர் மீது சுமையை ஏற்றி வைத்துவிட்டு, பக்கத்தில் நடந்து வரும்போது அதன் வலி நமக்கு தெரியாது. சுமையை நாம் ஏற்றுக் கொள்கிற போது தான் கால்கள் தள்ளாட ஆரம்பிக்கும்.
எல்லா மனிதருடைய வாழ்க்கையிலும் சுமை அழுத்திக் கொண்டிருக்கிறது. சுமையில்லா சுதந்திர மனிதன் இவ்வுலகில் இல்லை. மனதில் சுமை, உடலில் சுமை, வாழ்வில் சுமை என்று சுமை நீண்டு கொண்டே செல்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 11:28-30) இயேசுவும் சுமையை பற்றி பேசுகிறார். "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்கிறார் இயேசு. இளைப்பாறுதல் தருவேன் என்றவர், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் சொல்கிறார்.
இந்த நுகம் என்பது அழுத்தத்தையோ பாரத்தையோ அதிகரிப்பது அல்ல, மாறாக இயேசுவின் பாதையை பின்பற்றுவதற்கான ஒரு கருவி. இயேசு நம்மீது வைக்கும் நுகத்தின் வழியாக நாம் அவரில் ஒப்படைக்கப்படுகிறோம், அவர் நம்மை வழி நடத்துகிறார். (அவரிடமிருந்து கற்றுக் கொள்ளும் போது உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்).
தலைவரை பின்பற்றுவது தான் சீடரின் கடமை. தலைவர் எவ்வழியோ அவ்வழியே செல்வதுதான் சீடத்துவத்தின் உயர்ந்த பண்பு.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மாடுகளுக்கு மேல் அழுத்தும் நுகம் வைக்கப்பட்டிருக்கும். அது மாடுகள் நேர்கோட்டில் பயணிப்பதற்காக, வழிகாட்டியின் வழி நடத்துதலிலே பயணிப்பதற்காக தான். அந்த நுகம் இல்லை என்று சொன்னால் அந்த மாடுகள் அதன் இலக்கை அடைய முடியாது.
நம்முடைய வாழ்க்கையிலும் இறை பாதையில் பயணிக்க நம்மீது நுகம் வைக்கப்படுகிறது. அதை விரும்பி ஏற்றுக் கொள்கிற போது, நாம் நம்முடைய சுமையை எளிதாக்க முடியும்.
திருப்பாடல்கள் 81:6இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, "தோளினின்று உன் சுமையை அகற்றினேன்; உன் கைகள் கூடையினின்று விடுதலை பெற்றன".
கடவுளை நோக்கி நாம் திரும்பும்போது கடவுள் நம்மில் இருக்கும் சுமைகளை இறக்கி வைப்பார். திசை மாறி செல்கின்ற போது மற்றவர்களால் நம்மீது சுமைகள் சுமத்தப்படுகின்றன. வாழ்வில் பளு அதிகமாகிறது.
சுமைகளற்ற வாழ்வை நோக்கிய பயணம் அல்ல நம்முடைய பயணம்; சுமைகளை எளிதாக்கும் பயணம் தான் நம்முடைய பயணம். யாருடைய வாழ்க்கையிலும் சுமை இல்லாமல் இல்லை ஆனால் அந்த சுமைகள் சுகங்களாக மாற வேண்டும். சுமை எளிதாக வேண்டும்.
மற்றொருடைய வாழ்வில் நாம் ஏற்றி வைக்கும் பாரங்கள், சுமைகள் எப்போது குறைக்கப்படும்?
வார்த்தைகளால், செயல்களால் மற்றவர்களை காயப்படுத்தி வாழ்க்கையின் வேதனைக்கு அழைத்துச் செல்லும் சூழ்நிலை எப்போது மாறும்?
எதை செய்கிறோமோ அதை நாம் திரும்ப பெற்றுக் கொள்வோம். நல்லது செய்தால் நல்லது விளையும், பிறரின் சுமையை இறக்கி வைத்தால் நம் சுமையும் எளிதாகும்.
No comments:
Post a Comment