24_07

சிந்தனையும் இறைவார்த்தையும் - 1

 

ஒன்றுமில்லாத நிலையிலிருந்து ஒன்றுமில்லா நிலைநோக்கி...

மனித வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அழித்து தன் வாழ்வாதாரத்தை காத்துக் கொள்ள விரும்புகிறான். 

வாழ்கின்ற வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்ற போதிலும் மனிதன் மனிதனை கொடுமைப்படுத்துகிறான் என்றால், மனிதன் அழியா வரத்தைப் பெற்றுக் கொண்டால் உலகின் நிலை என்னவாகும்?

யாரும் இந்த உலகிற்கு வந்த போது எதையும் கொண்டு வந்ததில்லை; இந்த உலகை விட்டுச் செல்லும் போது எதையும் எடுத்துச் செல்ல போவதுமில்லை.

இதற்கிடையில் ஆக்கிரமிப்பு, சொத்து சேமிப்பு, பதுக்கி வைத்தல், சுரண்டல் என்று தீவினைகள் நீண்டு கொண்டே போகிறது. நாம் சேர்த்து வைப்பதை நாம் முழுவதுமாக அனுபவிக்கப் போவதில்லை என்பதை தெரிந்திருந்தாலும் கூட ஒன்றையும் நாம் விட்டு வைப்பதில்லை. 

நம்முடைய வாழ்க்கையில் நாம் எந்த நிலையில்  இருந்தாலும் மனதில் அசை போட வேண்டிய இறை வார்த்தைகள்...

1. தொடக்க நூல் 1:27 கடவுள் தம் உருவில் மானிடரை படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை படைத்தார்.

2. தொடக்க நூல் 2:7 அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்".

நாம் மண்ணால் உருவாக்கப்பட்டு இருக்கிறோம் நம்முடைய தொடக்கம் மண்ணில் தான், முடிவும் மண்ணில் தான். கடவுள் உயிர் மூச்சை கொடுத்ததனால் நாம் உயிர் வாழ்கிறோம். 

3. யோபு 1:21 என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் நான் செல்வேன். ஆண்டவர் அளித்தார் ஆண்டவர் எடுத்துக் கொண்டார்"

4. சபை உரையாளர் 5:15 மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்; வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை.

5. 1திமொத்தேயு 6:7 உலகிற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது.

பதுக்கி வைத்து எதை சாதித்து விட்டோம். இன்று பலர் ஏழைகளாக இருப்பதற்கு ஒரு காரணம் பற்றாக்குறை அல்ல; பகிராக் குறை தான் காரணம்.

ஒன்றுமில்லாத நிலையில் இருந்து இவ்வுலகிற்கு வந்தோம், ஒன்றும் இல்லாமல் இவ்வுலகை விட்டு செல்ல வேண்டும். இதுதான் இறைவனுடைய படைப்பின் கணக்கு. 

இருக்கும் வரை இரக்கம் நிறைந்த இதயத்தோடு இருப்போம். பகிர்வதன் வழியாக விண்ணுலக செல்வங்களை சேமிப்போம். 

மண்ணிலிருந்து மண்ணை நோக்கி நமது பயணம் விரைவில்...


சிந்தனையும் இறைவார்த்தையும்... தொடரும்

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...