பொதுக் காலம் 16ஆம் வாரம்
23.07.2024 - செவ்வாய்க் கிழமை
"கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது" - 1 யோவான் 4:20
இன்று சகோதர சகோதரிகள் ஒருவர் மற்றவரை அன்பை செய்வதில்லை. ஒருவர் மற்றவரை புரிந்துகொள்ள நேரமும் இருப்பதில்லை. புரிதல் இல்லாத இடத்தில் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடத்தான் செய்யும். (உடன்பிறப்புகளே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதபோது மற்றவர்கள் அவர்களை புரிந்து கொள்வது எம்மாத்திரம்).
சில வேளைகளில், புரிதலோடு இருப்பவர்களை குழப்புவதற்கு, கயவர்கள் கூட்டம் திட்டம் தீட்ட தான் செய்யும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 12:46-50) தன்னோடு பேச வந்த தன் தாயையும் சகோதரர்களையும் இயேசு இழிவுப்படுத்துவது போல இருக்கிறதே என்ற கேள்வி எழலாம். (இழிவுப்படுத்தியவர்களையே ஏற்றுக் கொண்டவர் இயேசு, அவர் எப்படி இறைத்திருவுளத்தை நிறைவேற்றியவர்களை இழிவுபடுத்துவார்???)
மத்தேயு நற்செய்தி 19:19இல் இயேசு இவ்வாறு சொல்கிறார், "தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக”, என்று சொன்னவர் எப்படி தன் தாயையும் சகோதரர்களையும் இழிவுபடுத்தி இருக்கக்கூடும்.
என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? என்பது தாழ்வுப்படுத்தும் கேள்விகள் அல்ல... மாறாக இறைத்திருவுளத்தை நிறைவேற்றிய தன் தாயையும் தன் சகோதரர்களையும் மிகைப்படுத்தும் சொற்கள் (என் சகோதரர் யார் தெரியுமா? என் தாய் யார் தெரியுமா? என்று சொல்வது போல்). இவர்களே இறைத்திருவுளத்தை நிறைவேற்றியவர்கள் என்பது இலை மறை காயாய் சொல்லப்பட்டுள்ளது.
அங்கு தன் தாயையும் தன் சகோதரிகளையும் அவர் முன் உதாரணங்களாக காட்டுகிறார். அன்று இயேசு என் தாய் யார்? என் சகோதரர் யார் என்று கேட்ட கேள்வி நேர்மறை கேள்வி.
இன்று உடன்பிறப்புகளால் நீ யார்? நீ யார் என்னை பேசுறதுக்கு? என்று கேட்கப்படக்கூடிய கேள்விகள் எதிர்மறை கேள்விகள். இவை உறவை முறித்து விடுகிறது. உறவை முறிப்பது பாவம். ஒருசில வேளைகளில் வார்த்தை பிழைகளால் வாழ்க்கை பிழையாகிறது.
சகோதர அன்பு இல்லாமல், நம்மை பெற்றவர்களை கவனிக்காமல் நாம் இறைத் திருவுளத்தை நிறைவேற்றி விட முடியாது. பிறர் அன்பிலும், பிறர் நலனிலும் இறைத் திருவுளம் வெளிப்படட்டும்.
No comments:
Post a Comment