25_05

ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு...

இயேசுவின் விண்ணேற்ற பெருவிழா

01.06.2025 - ஞாயிற்றுக் கிழமை 

சில நேரங்களில் மனதுக்குள் எழும் கேள்விகள், எதுக்கு இந்த வாழ்க்கை? ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்கணும்? நல்லவர், பொல்லாதவர் இருவருமே இறக்கின்றனரே? செய்கிற எல்லாவற்றையும் செய்து விட்டு கடைசியில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாமோ?

வாழ்க்கையை குறித்த கேள்விகள் நம்மை வியப்புற செய்கின்றன. 

மண்ணகம், விண்ணகம், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்வு என்று எதை எதையோ கேள்விப்படுகிறோம். வாழ்க்கை குழப்பமாக இருக்கிறதே என்று சிரமப்பட்டுக் கொள்வோரும் உண்டு.

மண்ணக வாழ்வு விண்ணக வாழ்வை பெறுவதற்கான முன் சுவை. மண்ணகத்தில் நாம் வாழும் நேரிய வாழ்க்கை முறை தான், விண்ணகத்தில் நமக்கு கதவுகளை திறந்து விடும்.

நல்லவர், பொல்லாதவர் இருவருமே இறப்பது உண்மை தான், இருவரும் தீர்ப்பு பெற உயிர்தெழுவதும் உண்மை தான். 

நல்லவர் நிலைவாழ்வு பெற உயிர்த்தெழுவர், பொல்லாதவரோ தண்டனைத் தீர்ப்பு பெற உயிர்த்தெழுவர். 

மண்ணகத்தை கடந்த நிலைவாழ்வு பெற இவ்வுலக தீமையிலிருந்து நாம் கடந்துச் செல்ல வேண்டும்.

இயேசுவின் விண்ணேற்றம் என்பது கடப்பு நிலை. இயல்பான நிலையிலிருந்து முன்னோக்கி செல்வது. தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற உலகிற்கு மனிதராக வந்தவர், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி அதை நமக்கு விட்டு சென்றிருக்கிறார். 

நாமும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற, இந்த கடப்பு நிலை நோக்கி பயணிக்க, உலகிலிருந்து விண்ணகம் நோக்கி செல்வதற்கான பயணத்தில் இருக்கிறோம்.

இவ்வுலகம் நமக்கு நிரந்தரமானது அல்ல, இவ்வுலகம் ஒரு தற்காலிகமான நிலை தான்.

இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன் தனது அதிகாரத்தையும் தன் ஆற்றலையும் தன்னுடைய சீடர்களோடு பகிர்ந்து கொடுத்தார். அது இன்று நம்மோடு பகிரப்பட்டுள்ளது. 

இழப்பு இல்லாத முன்னேற்றம் இல்லை... கடப்பு இல்லாத வெற்றி இல்லை...

பழைய நிலையிலிருந்து புதிய நிலைக்கு/ பழைய வாழ்விலிருந்து புதிய வாழ்வுக்கு கடந்துச் செல்வோம். தேக்க நிலை அல்ல; தெளிவான மனநிலை கொள்வோம்.

இயேசுவின் விண்ணேற்றம் நம் உள்ளத்தையும் முன்னேற்றட்டும்...

சந்திப்பு சங்கடம் தீர்க்கும்…


புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழா

31.05.2025 - சனிக்கிழமை

தனிமையில் வாழ யாரும் விரும்புவதில்லை. சில மனிதர் தந்த காயங்களால் சிலருக்கு தனிமை நிரந்தரமாகிறது. தனிமையாய் இருந்தால் யாருக்கும் எதற்கும் பிரச்சினை இல்லை என்று எண்ணுவோர் உண்டு. ஆனால் தனிமையாய் இருப்பதே இங்கு பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

தனிமை பல மனிதர்களை மிருகமாக்கியிருக்கிறது. தனிமை பல மனிதர்களை அழித்திருக்கிறது. பல மனிதர்களை தனித்தீவாக மாற்றியிருக்கிறது. 

தேவையில் இருப்போரை சந்திக்க ஒருபோதும் தயக்கம் கொள்ள கூடாது. ஒவ்வொரு கால இடைவெளியும் தனிமையில் இருப்போரை கொன்றுக் கொண்டே இருக்கும்.

கேட்டால் உதவி செய்யலாம், கேட்டால் போய் சந்திக்கலாம் என்ற எண்ணங்கள் நம்முடைய மனிதத்தன்மையை இழக்க செய்கிறது. உண்மையிலே தேவையில் இருப்போர் யாரிடமும் கேட்க கூச்சப்படுவார்கள், மற்றவர்கள் எண்ண நினைப்பார்களோ என்று தயங்குவார்கள். தேவையில் இருப்போரை நாம் தான் கண்டுக் கொள்ள வேண்டும், சந்திக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:39-56) மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு (ஜயின் கரீம்) விரைந்து சென்றார் என்று வாசிக்கிறோம். எதற்காக அன்னை மரியா விரைந்து சென்றார்? இரண்டு காரணங்கள் 1. எலிசபெத்தை சந்திக்க 2. அவருக்கு உதவி செய்ய

இந்த சந்திக்க வேண்டும் என்ற இரக்கக்குணம் இருக்கும் காரணத்தால் தான் அன்னை மரியா விரைந்து சென்றார்.

கண்டார், நம்பினார், தங்கினார், உதவினார் அன்னை மரியா.

இந்த சந்திப்பில் தூய ஆவியாரின் குறுக்கீடு இருப்பதை காண்கிறோம். எலிசபெத்து தூயஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு எலிசபெத்தை வாழ்த்துகிறார். இரண்டு தாய்மார்கள் மட்டுமல்ல இரண்டு சேய்களும் சந்தித்துக் கொள்கிறார்கள். 

சந்திப்போடு மட்டும் முடிவடையவில்லை இந்த பயணம் புரட்சி பாடலாகவும் தொடர்கிறது.

அன்னை மரியாவின் சந்திப்பு எலிசபெத்தின் சங்கடத்தை தீர்த்து மகிழ்ச்சியை கொடுத்தது போல நம் சந்திப்பும் நலம் இழந்தவர்களுக்கு நலத்தை, நம்பிக்கை இழந்தவர்களுக்கு புதுவாழ்வையும் கொடுக்கட்டும்…

இருப்பதை கொண்டு நிறைவு/மகிழ்ச்சி

பாஸ்கா காலம் 6ஆம் வாரம்

30.05.2025 - வெள்ளிக் கிழமை 

எது மனிதருக்கு நிறைவு தரும்? ஒவ்வொரு மனிதருடைய தேவையும் வித்தியாசமனது. ஒவ்வோர் மனிதரின் தேவை முடிந்த பிறகும் அடுத்த தேவை ஆரம்பமாகும். 

தேவையானது கொடுக்கப்பட்டாலும் அடுத்த தேவையை நோக்கி நம் கால்கள் நகர தான் செய்யும்.

நம்முடைய தேவைக்காக நாம் மற்றவர்களை சார்ந்து இருப்போம். சில நேரங்களில் கேட்டு கேட்டு அலுத்து போய் கேட்பதை நிறுத்தி விடுவோம். கேட்டது கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம். 

எப்போது நாம் நமக்குரியவர்களிடம் கேட்பதை நிறுத்துவோம். இனி கிடைக்காது என்கிற போது/கேட்டது பெற்றுக் கொண்ட பிறகு. ஆனால் இது தற்காலிகம் தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:20-23) இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.” என்கிறார் இயேசு.

இது போதும் என்கிற மனம் எப்போது வருகிறதோ அப்போது யாரிடமும் எதுவும் கேட்க மாட்டோம். 

அந்த முழு நிறைவை நோக்கி/ முழு மகிழ்வை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். 

நிலையில்லா உலகில் எதுவும் நிறைவு தருவதில்லை. நிறைவு தருவதாக இருந்தாலும் அது நிரந்தரமாக தங்குவதில்லை. 

நிறைவு தராத ஒன்று துயரத்தை தான் கொடுக்கும். இன்றைய கால கட்ட மனித உறவுகள் அதற்கு உதாரணம். 

எதையும் எதிர்பாராத, எதையும் (பிறர் பேசிய வார்த்தை, பிறர் தந்த காயம்) எளிதாக ஏற்றுக் கொள்ளாத மனம் தான் பக்குவப்பட்டது.

நம் மகிழ்ச்சியை நாமும் கடவுளும் தான் தீர்மானிக்க வேண்டும். 

சாமுவேல் இரண்டாம் நூல் 24:14 இவ்வாறு சொல்கிறது, “நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம்; ஏனெனில் அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழவேண்டாம்” ...

துயரம் மறைந்து மகிழ்ச்சி...

பாஸ்கா காலம் 6ஆம் வாரம்

29.05.2025 - வியாழக் கிழமை

“வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு” - திருப்பாடல்கள் 16:11

நாம் விரும்பாத ஒன்று, நம்மை வாட்டி வதைக்க கூடிய ஒன்று - துயரம். அதிகம் சோதிக்கப்படுபவர்கள் நல்லவர்கள் தான். துயரம் இருந்தாலும் பலர் அதை வெளியில் காட்டிக் கொள்வதில்லை.

 மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று கேட்கப்படும் கேள்விக்கு நம் பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று வரும். மகிழ்ச்சியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ‘மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று பதில் சொல்வோம். ஆனால் ‘நிறைவான மகிழ்ச்சி’ வார்த்தையால் அல்ல நம் செயல்பாடுகளால் வெளிப்படும்.

“எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்” (1தெசலோனிக்கர் 5:16) இது நம் எதிர்பார்ப்பு. எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க நம் உறவுகள் நம்மை விடுவதில்லை. நெருக்கடிகளுக்கு மத்தியில் எப்படி முழு நேர மகிழ்ச்சி சாத்தியம்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:16-20) நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்கிறார் இயேசு. ஒரு பிள்ளையை பெற்றெடுக்கும்முன் அந்த தாய் எவ்வளவு பேறுகால வேதனை அடைகிறாள். பிள்ளையை பெற்றெடுத்த பிறகு அந்த வேதனை தணிகிறது. ஒரு உயிர் உலகிற்கு வந்தது குறித்து மிகுந்த (நிறைவான) மகிழ்ச்சி அடைகிறாள் அந்த தாய்.

இறைவன் தரும் மகிழ்ச்சியும் அத்தகையது தான். சிறிது கால துன்பம், அதன் பிறகு நீடித்த மகிழ்ச்சி தான். 

மற்ற மனிதர்கள் முன்னிலையில் நாம் ஏமாற்றப்பட்டது போல தோன்றலாம், நம்முடைய நம்பிக்கை கேள்விக்குறி ஆகலாம். 

எது எப்படி ஆனாலும் இறைவன் தருகின்ற அந்த நிறைவான மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாரும் பிரித்துவிட முடியாது. இறைமகிழ்வில் இணைவோம்… இறைஆசிர் பெறுவோம்.


செயல்களில்/வாழ்வில் ஒன்றிப்பு தேவை


பாஸ்கா காலம் 6ஆம் வாரம்
28.05.2025 - புதன் கிழமை 

எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும் - யோவான் நற்செய்தி 17:21

போட்டி, பொறாமை, முன்பகை, அகங்காரம் இவையெல்லாம் தான் மற்றவரை எதிர்க்க தூண்டுகிறது. யார் எதை(நல்லதே) செய்தாலும் அதை எதிர்க்கும் மனநிலை உடையவர்கள் ஒன்றிப்பை விரும்பாதவர்கள். 

மற்றவர்கள் தவறுகின்ற போது அதை எதிர்ப்பவர்கள் வேறு; மற்றவர்கள் எதை செய்தாலும் எதிர்ப்பவர்கள் வேறு.

என்ன கொண்டு வந்தோம், எதை கொண்டு போக போகிறோம் என்ற கேள்வியை அடிக்கடி கேட்டு பார்த்தாலே தேவையற்ற குழப்பம் வராது. இங்கு பிரச்சினையே பிரச்சினையை தூண்டி விடுவது தான்.

கடவுள் பெயரை சொல்லி தான் பல பிரிவினைகள் உண்டாக்கப்படுகின்றன. கடவுளுக்காக என்று சொல்லி சொல்லி கடவுளை கொச்சைப்படுத்தி கொண்டிருக்கிறோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16: 12-15) உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்று சொல்கிறார் இயேசு.

தந்தை மகன் தூய ஆவியாரின் ஒன்றிப்பை நாம் இங்கு காண முடிகிறது. தந்தையிடமிருந்து மகன் பெற்றுக் கொண்டதை தூய ஆவியார் அறிவிக்கிறார். மூவரிடையே கருத்து ஒன்றிப்பு செயல்பாடு ஒன்றிப்பு இருப்பதை காண முடிகிறது. 

தந்தை மகன் தூய ஆவி என்று மூன்று ஆட்களாக இருந்தாலும் அவர்கள் இணைந்து செயலாற்றுவதை நாம் காணலாம். 

நாம் வாழும் சமூகத்திலும் பிரிவினைகள் பல உண்டு, அந்த பிரிவினைகளுக்கு மத்தியிலும் ஒன்றிப்பை வலியுறுத்தினோம் என்றால் சமத்துவத்தை உருவாக்கினோம் என்றால் இறை ஆட்சி நம் மத்தியில் தான்.

இன்று குடும்ப உறவுகளில் பிளவு ஏற்பட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் ஏற்றுக்கொள்ளாமை தான். குறைகளை ஏற்றுக் கொள்கிற போது, பிறரின் இயலாமையை ஏற்றுக் கொள்கிற போது இங்கு ஒற்றுமைக்கு/இணைவதற்கு வாய்ப்பு உண்டு.

ஒன்று போய் மற்றொன்று...


பாஸ்கா காலம் 6ஆம் வாரம்

27.05.2025 - செவ்வாய்க் கிழமை 

ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன - எசேக்கியேல் 37:1

ஒருவர் போனால் மற்றவர் வருவார். ஒன்று போனால் மற்றொன்று வரும். இது தான் எதார்த்தம். இருப்பது எல்லாம் அப்படியே நிலைத்து விடுவதில்லை. இருப்பது நிலைத்து விட்டால் புதியதற்கு இடமில்லை.

இந்த உலகில் மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், வாழ்க்கை முடிந்ததும் ஆரம்பமான இடத்திற்கே திரும்பி விடுகிறார்கள். யாரும் இங்கு தங்கிவிடுவதில்லை. 

ஒன்று போய் மற்றொன்று வருவதை/ ஒருவர் போய் மற்றவர் வருவதை நேர்மையாகவோ எதிர்மறையாகவோ புரிந்துக் கொள்ளலாம். சிலர் நம் வாழ்க்கையில் வரமாய் வருவார்கள், சிலர் சாபமாய் இருப்பார்கள்.

வரமும் சாபமும் நம் செயல்களை/எண்ணங்களை பொறுத்தே மாறும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16: 5-11) இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் ‘நீர் எங்கே போகிறீர்?’ என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக் குறித்துத் துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள். நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்".

இங்கு இயேசுவின் புறப்படுதல் திட்டம் தன் சீடர்கள் பயன் அடைவதற்காக. சில நேரங்களில் நம்மோடு இருப்பவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக, திறமை மிக்கவர்களாக இருந்தால் நாம் அவர்களை சார்ந்து மட்டும் இருப்போம். அவர்களை போல் செயல்பட மாட்டோம்.

யாரை நாம் சார்ந்து இருக்கிறோமோ? எதை சார்ந்து இருக்கிறோமோ? அவை நம்மை விட்டு பிரியும் தருணத்தில் தான் நம் ஆற்றல் வெளிப்பட ஆரம்பிக்கும். 

தனித்து விடப்படும் போது தான் நமக்குள் சிறகு இருப்பதை நாம் அடையாளம் கண்டுக் கொள்ள ஆரம்பிப்போம்.

தேக்க நிலை மறையும் போது புதிய பாதை தொடங்கும். புதிய தெளிவு பிறக்கும்.

இயேசு தன் சீடர்களை பிரிந்தது அவர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக. நாமும் தேவையற்ற தருணங்களில் தேவையற்ற இடத்தில் இருப்பதை தவிர்ப்போம்.

செயல்பாடு ஒன்றாக இருந்தாலும் பார்க்கப்படும் பார்வை வேறு.

சான்று பகர்தல் சவால் நிறைந்தது...


பாஸ்கா காலம் 6ஆம் வாரம் 

26.05.2025 - திங்கட்கிழமை

என்னைக் கேட்ட செவி, என்னை வாழ்த்தியது; என்னைப் பார்த்த கண் எனக்குச் சான்று பகர்ந்தது - யோபு 29:11

நமக்கு பிடித்தவர்களை குறித்து நாம் அதிகம் பேசுவோம். பிடித்தவர்களை அதிகம் அறிந்துக் கொள்ள ஆசைப்படுவோம். வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் அந்த நபரை குறித்து பேசிக் கொண்டே இருப்போம்.

அது வரைக்கும் என்றால் அந்த நபரை பிடிக்கும் வரை மட்டும் தான். அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு வர ஆரம்பித்து விட்டால், நேர்மறையாக பேசியது எதிர்மறையாக மாறும். 

யாரை குறித்து நன்கு பேசினோமோ? அவரை குறித்து தவறாக பேச ஆரம்பிப்போம்.

சான்று பகர்தலில் இரண்டு வகை உள்ளது. 1. நேர்மறை சான்று 2. எதிர்மறை சான்று

சில சமயங்களில் சான்று பகர்ந்தால் சாவு நிச்சயம். இலக்கு தெளிவு உள்ளவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15: 26- 16: 4) "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்" என்கிறார் இயேசு.

இங்கு சான்று பகரும் நபரால் பிரச்சினை இல்லை சான்று பகரும் நபருக்கு தான் (உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப் பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது).

இயேசுவை ஏற்றுக் கொண்டால் அவரின் விழுமியங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். விழுமியங்களை ஏற்றுக் கொண்டால் அதற்கு வார்த்தையாலும் வாழ்க்கையாலும் சான்று பகர வேண்டும்.

எதிர்ப்பு உண்டு, தடை உண்டு ஆனால் நம் இலக்கோ அவரை குறித்து எடுத்துச் சொல்வதாக மட்டும் இருக்க வேண்டும். 

நம்பிக்கை இழந்து விடாமல், காலம் வரும் வரை அவரை குறித்து அறிவிப்போம்... சான்று வாழ்வு வாழ்வோம்...

அமைதி வேண்டும்...


25.05.2025 - ஞாயிற்றுக் கிழமை

பாஸ்கா காலம் 6ஆம் வாரம்

“பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்” - திருப்பாடல்கள் 23:2

அமைதி, மகிழ்ச்சி இவையிரண்டையும் வேண்டாம் என்று சொல்லாத நபர்கள் கிடையாது. இன்றைய காலக் கட்டத்தில் மனிதன் அமைதிக்காக எங்கெங்கோ அலைந்து திரிகிறான். சக மனிதரில் கிடைக்காத அமைதியை பலவற்றிற்கு (ஊடகம், மது, கேளிக்கை…) அடிமையாகி அடைய எண்ணுகிறான் மனிதன். 

இவ்வுலகம் நிரந்தர அமைதி கொடுக்காது என்பது மனிதனுக்கு தெரியும். நிரந்தரமாக அமைதியை கெடுக்கும். உடனடி நிவாரணம் கிடைத்தால் போதும் என்பதனால் மனதோடு அலைபாய்ந்துக் கொண்டிருக்கிறான். 

இவ்வுலகம் தருகின்ற அமைதி எதிர்பார்ப்பின் அடிப்படையிலே அமையும். நான் எதிர்பார்ப்பதை நீங்கள் செய்தால், நீங்கள் எதிர்பார்ப்பதை நான் செய்வேன் (Do and Receive). என்னுடைய ஆசைகள் நிறைவேறினால் உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். அது தான் நம் அமைதியின், மகிழ்ச்சியின் அடிப்படையான விதியாக மாறிவிட்டது அல்லது மாற்றிவிட்டோம்.

இன்று நாடுகளுக்கிடையே நடைபெறும் வன்முறையால், சண்டையால் மக்கள் அமைதி இழந்து இருக்கிறார்கள். ஆணவமிக்கோரின் கையில் அதிகாரம் இருக்கும் வரை அமைதிக்கு வாய்ப்பு என்பது இல்லை.

பிறரின் அமைதியை கெடுத்து தனது/தன்னை சார்ந்தோரின் அமைதியை நிலைநாட்ட துடிக்கும் உலகம் இது.

நம் அமைதி யாரில்? ஏதன் மீது இருக்கிறது? அமைதி வேண்டும் அமைதி வேண்டும் என்று யார் நம் அமைதியை தொலைத்தார்களோ அவர்களிடமே அமைதியை பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறோம்...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:23-29) ‘நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல’ என்கிறார் இயேசு. தன் தந்தையின் கட்டளையின்படி செயல்பட்ட அவர் உள்ளத்தில் அமைதியை பெற்றிருந்தார், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார். அவரில் நம்பிக்கை கொள்வோர் உள்ள அமைதியை நிறைவாக பெறுவர்.

இன்று மனிதர்கள் பலர் தங்களது ஆணவத்தால், அதிகாரத்தால், அதட்டலால் நம் அமைதியை குலைக்க பார்க்கிறார்கள். நம்முடைய பொறுமையை சோதித்து நம் அமைதியை சிதைக்கப் பார்க்கிறார்கள்.

உலகம் தரும் அமைதி அல்ல இறைஅமைதி நம் உள்ளத்தில் குடிக் கொள்ள வேண்டும்.

அமைதியை குலைக்கும் ஆணவக்காரரிடமிருந்து விலகி இருப்போம். இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதின் வழியாக நம் அமைதியை பெற்றுக் கொள்வோம்.

எனக்கு அமைதி வேண்டும் என்பது போல என்னை சார்ந்தோருக்கும் அமைதி வேண்டும்/ அமைதி கொடுக்கப்பட வேண்டும் என்பது நம் மனதில் இருக்கட்டும்...

வெறுப்புக்கு மத்தியிலும் இறைபணி...


பாஸ்கா காலம் 5ஆம் வாரம் 

24.05.2025 - சனிக் கிழமை

அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம் - சபை உரையாளர் 3:8

அன்பு செய்வதற்கு ஒரு காலம், வெறுப்பு கொள்வதற்கு ஒரு காலம் என்பது போல தான் நமது வாழ்க்கை சுழல்கிறது. இக்காலக் கட்டங்களில் நம்மில் அன்புணர்வு குறைந்து வெறுப்புணர்வு தான் மேலோங்கி இருக்கிறது. 

பலர் சொல்லக்கூடியது, என்னை அறியாமலே நான் கோபப்பட்டு விடுகிறேன், வெறுப்பு வந்து விடுகிறது. கோபம், வெறுப்பு, எரிச்சல் இவையெல்லாம் திடீரென வருவது இல்லை. இவையெல்லாம் நாள்பட்ட தேக்கங்கள். மனதில் தேக்கப்பட்டவை ஒருநாளில் வெளிப்படுகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15:18-21) உலகு உங்களை வெறுப்பதற்கு முன்பே அது என்னை வெறுத்தது என்கிறார் இயேசு. இங்கு வெறுப்பு இயேசு என்னும் தனி மனிதர் மீது மட்டும் அல்ல, மாறாக அவரது கொள்கைகளையும், எண்ணங்களையும், இறையாட்சி கனவுகளையும் ஏற்றுக் கொள்வோரையும் உலகு வெறுத்தது, வெறுக்கிறது. 

துன்புறுத்தப்படுபவர்கள் இங்கு தீயவர்களாக இருப்பதில்லை. துன்புறுத்துபவர்கள் தான் இங்கு தீயவர்கள். நேர்மையாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள், விரட்டப்படுகிறார்கள். ஆனால் இறைவனோடு இணைந்து இருப்பதால் அவர்கள் ஒருபோதும் சோர்ந்து போவதில்லை.

இயேசுவின் வார்த்தையை ஏற்று நடப்போரை உலகம் வெறுக்கத் தான் செய்யும். 

பச்சை மரத்திற்கே அவ்வாறு செய்தார்கள் என்றால், பட்ட மரமாகிய நமக்கு இன்னும் என்னவெல்லாம் செய்வார்கள். 

அன்னை தெரசா சொல்வார், ‘வெறுப்பது உலகாக இருந்தாலும், நேசிப்பது நீங்களாக இருங்கள்” என்று.

இயேசுவின் வார்த்தை நம்முள் ஆழமாக சென்று, வெறுப்பவர்களையும் நேசிக்கும் பண்பை, தியாகத்தை நம்மில் வளர்க்கட்டும். வெறுப்புணர்வை கடந்து இறைபணி செய்வோம்...

யாருடைய அன்பு சிறந்தது???


பாஸ்கா காலம் 5ஆம் வாரம்

23.05.2025 - வெள்ளிக் கிழமை 

"மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்; ஆண்டவராம் என்னை நீயும் அறிந்துகொள்வாய்" - ஒசேயா 2:20

அன்பு இருக்கும் இடத்தில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பே கடைசியில் ஆபத்தில் போய் முடியும். அதிக அன்பு செலுத்துவோர் கடைசியில் ஏமாளியாக தான் பார்க்கப்படுகிறார்கள். அளவுக்கு மீறிய அன்பும் ஆபத்தானது. 

எல்லை மீறி செல்கின்ற அன்பு இறுதியில் எதையும் செய்ய துணிந்து விடுகிறது. தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணம் தோன்றுகிறது. 

இன்று அன்பில் போட்டியும் பொறாமையும் உள்ளது. யாருடைய அன்பு பெரியது? யார் அன்பு சிறந்தது? என்ற போட்டியில் அன்பு அதன் தன்மை இழந்து நிற்கிறது.

மகனின் அன்பை இழந்து விடக் கூடாது என்று தாயும் கணவனின் அன்பை இழந்து விடக் கூடாது என்று மனைவியும் போட்டி போட்டு அன்பை சிதைத்து விடுகின்றனர்.

யாருடைய அன்பும் சிறந்தது அல்ல, அன்பே சிறந்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15: 12-17) "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்" என்கிறார் இயேசு.

அன்பு இருக்கும் இடத்தில் பொறுமைக்கு இடம் உண்டு, தாழ்ச்சிக்கு இடம் உண்டு, இரக்கத்திற்கு இடம் உண்டு, இறைவனுக்கு இடம் உண்டு.

அன்பு எங்கு பணத்திற்காக காட்டிக் கொடுக்கப்படுகிறதோ அங்கு அன்பு தன் சிறப்பை இழந்து போய் விடுகிறது. 

இன்று ஒருவர் மற்றவர் மீது கொண்ட அதீத அன்பினால் ஒருவர் மற்றவரை கொலை செய்யும் அளவுக்கு போய் விடுகின்றனர். அன்பிற்கு பணிவு தேவை.

நான் காட்டும் அன்பு திருப்பி காட்டப்பட வேண்டும் என்றோ என் அன்பை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றோ யாரும் எதிர்பார்க்க கூடாது. 

எங்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அங்கு ஏமாற்றத்துக்கு இடம் உண்டு.

நம் அன்பை மற்றவர்கள் பெறட்டும்... இடம் கொடுக்கப்பட்டால் மற்றவர் அன்பில் நாம் இணைவோம்...

நம் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?


பாஸ்கா காலம் 5ஆம் வாரம் 

22.05.2025 - வியாழக்கிழமை 

தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர். - திருப்பாடல்கள் 4:7

எல்லா மனிதரின் எதிர்பார்ப்பும் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான். மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது? யார் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறார்? 

மகிழ்ச்சி நமக்குள் இருந்து வருகிறது, ஆனால் அந்த மகிழ்ச்சியை தீர்மானிப்பது நாம் அல்ல, மற்றவர்கள் தான். 

எவ்வளவு வலிமைமிக்க நபராக இருந்தாலும் அவரிடம் ஒரு பலவீனம் (weakness) இருக்கும். தன்னை விட வலிமை குறைந்த ஒரு நபரிடம் நாம் பலவீனப்பட்டு போவார்கள். அதற்கு காரணம் அன்பு தான். (எகா - மகளிடம் தோற்றுப் போகும் தந்தை, காதலி முன் கை கட்டி நிற்கும் காதலன், தன்னை வெறுக்கும் மகனிடம் அன்பைக் காட்ட தவறாத தாய், நண்பனின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்கும் நண்பன்....)

இப்படியாக தன்னை விட ஆற்றல் குறைந்தவரிடம் அடங்கி போகிறார்கள் மனிதர்கள். இதற்கு நீங்களும் நானும் விதி விலக்கு அல்ல...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15: 9-11) "நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்" என்று சொல்கிறார் இயேசு.

தன்னை சார்ந்தவர்க்கு அன்பினால் அடங்கி போவதில் அன்பு வெளிப்பட வேண்டும். அதிகாரமோ ஆணவமோ சாதிக்காத காரியத்தை அன்பு சாதித்து விடும். 

1 கொரிந்தியர் 13:7 சொல்லப்பட்டுள்ளது, "அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்."

அன்பில் காணப்படும் மன உறுதி மனங்களை மாற்றி விடுகிறது. எத்தனையோ நபர்களை அன்பு மாற்றி இருக்கிறது.

இயேசுவின் பணி வாழ்வு அன்பின் பணி வாழ்வு. இயேசுவின் அன்பின் உச்சக் கட்டம் தன்னை தருதலில் வெளிப்பட்டது. சிலர் பேச்சுக்காக அதை தருகிறேன் இதை தருகிறேன் என்பார்கள், ஆனால் அவர் மட்டும் தான் எல்லோருக்குமாக தன்னையே தந்தார். 

அன்பிலும் இப்போது கலப்படம் வந்து விட்டது. போலியான அன்பும் வலம் வருகிறது. நம்மிடம் இருப்பதை பெற்றுக் கொண்டு நம்மை கெடுக்க நினைக்கும் உறவுகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

நம் அனுமதி இல்லாமல் நம் மகிழ்ச்சியை யாரும் குலைக்க கூடாது/முடியாது. 

இறை அன்பும் பிறரன்பும் நம்மில் முழுமை பெறட்டும்... நாமும் மகிழ்ச்சியாய் இருந்து மற்றவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்க முயல்வோம்...

பலன் தர... பக்குவப்பட...


பாஸ்கா காலம் 5ஆம் வாரம்

21.05.2025 - புதன் கிழமை 

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும். - லூக்கா நற்செய்தி 8:15

யார் பக்குவப்பட்ட மனிதர்? யார் வாழ்க்கையில் பல அடிகளை பெற்றிருக்கிறாரோ அவரே பக்குவப்பட்டவர். வாழ்க்கை ஒவ்வொரு முறை அடி கொடுக்கும் போது அவர் பலன்தர வாய்ப்புக் கொடுக்கிறது.

எல்லா மனிதர்களும் பக்குவமடைய விரும்பமாட்டார்கள். காற்று வீசுகின்ற பாதையில் பயணிக்க எண்ணுவோர் எதிர்நீச்சல் போட மாட்டார்கள்.

மரங்கள், செடிகள் வாழ்வும் நம் வாழ்வும் ஒன்றே. அவற்றின் வாழ்நாட்கள் தான் குறைவு. ஆனால் இரண்டின் செயல்பாடுகள் ஒன்றே. 

மரம் உரத்தை பெற்று உயிர் பெறுகிறது, வளர்கிறது. மனிதன் உணவு உண்டு உயிர் வாழ்கிறான். இரண்டிற்கும் தொடக்கமும் உண்டு முடிவும் உண்டு. இரண்டும் மண்ணில் இருந்தே உருவாகிறது, மண்ணுக்கே திரும்புகிறது. பலன் கொடுப்பதும் பக்குவப்படுவதும் தனிப்பட்ட மனிதரின் கையில் இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15:1-8) இயேசு திராட்சைக் கொடி உருவகத்தை பயன்படுத்துகிறார். நானே திராட்சைக் கொடி, நீங்கள் அதன் கிளைகள் என்கிறார். திராட்சைக் கொடியோடு கிளைகள் இணைந்திருக்கும் வரை தான் அவற்றிற்கு மதிப்பு. அவை வெட்டப்பட்டால் அதனால் ஒரு பயனும் இல்லை.

இங்கு இயேசுவோடு இணைந்திருக்கும் வாழ்வு பலன் கொடுக்கும் அல்லது கனி கொடுக்கும் வாழ்வு. 

பலன் தராத மரத்தையோ, செடியையோ யாரும் விரும்பமாட்டார். அவற்றை அப்புறப்படுத்தி விடுவார். அது போல நமது வாழ்வு பலன் கொடுக்கவில்லையென்றால் நாமும் அப்புறப்படுத்தப்படுவோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சொல்லாடல் நமக்கு வியப்பளிக்கிறது. கனி தரக் கூடிய கிளைகளை இன்னும் அவர் கழித்துவிடுகிறார், கனித் தராத கிளைகளை அவர் தறித்துவிடுகிறார்.

நாம் அவரால் கழிக்கப்பட்டு, இன்னும் பலன் கொடுக்கும் பக்குவத்தை அடைய வேண்டும். 

நாம் அவருடைய வார்த்தைகளால் தூய்மையாக்கப்பட்டிருந்தால் நாம் மிகுந்த கனி தருவோம். நாம் அவரோடு இணைந்திருந்தால் நாம் மிகுந்த பலன் தருவோம்.

அமைதி... அமைதி...


பாஸ்கா காலம் 5ஆம் வாரம் 

20.05.2025 - செவ்வாய்க் கிழமை 

அவர் நமக்கு மனமகிழ்ச்சியை அளிப்பாராக; இஸ்ரயேலில் முந்திய நாள்களில் இருந்ததுபோல நம் நாள்களிலும் அமைதி நிலவுவதாக. - சீராக்கின் ஞானம் 50:23

இந்த உலகமே அமைதியை விரும்புகிறது. எது அமைதி? என்ற பல பதில்கள் முன்வைக்கப்படலாம். அமைதி என்பது சத்தம் ஏதும் இல்லாமல் இருப்பது, அமைதி என்பது வன்முறை - கலவரம் இல்லாமல் இருப்பது, அமைதி என்பது தியான நிலையில் இருப்பது, அமைதி என்பது சமரசத்தோடு இருப்பது... 

ஆனால் இந்த அமைதி வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் இருக்க வேண்டும். வெளிப்புறம் அமைதியாக இருந்து, மனது அலை பாய்ந்துக் கொண்டிருந்தால் நாம் செய்ய நினைக்கும் காரியம் தடைப்படும்.

நம் அமைதியை யார் குலைக்கிறார்? நம் அனுமதியின்றி யாரும் நமது மனதை நிலைகுலைய செய்ய முடியாது. யாரோ? என்றோ? செய்த/சொன்ன காரியங்கள் இன்றும் நம் அமைதியை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. 

மனிதர்களால் கொடுக்கப்படுகிற அமைதி மனிதர்களாலே தடைப்பட்டு விடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான்  14: 27-31b) இயேசு தம் சீடரை நோக்கி,  "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்" என்று சொல்கிறார்.

உலகம் ஒரு நாள் தூக்கிக் கொண்டாடும், ஒரு நாள் தூக்கி எறியும். மனிதர் புகழ்ந்தும் இகழ்ந்தும் பேசுவார்கள். நம் அமைதிக்கான சாவி மனிதரிடம் இருந்தால் நாம் அமைதியை தேடிக் கொண்டு தான் இருக்க வேண்டி இருக்கும்.

பொருளை இழந்தவர்கள் பொருளை தேடுவது சரி, பொருள் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

அமைதியை இன்று இழந்து நிற்கிறோம் என்பதை விட அமைதி இல்லாமல் இருக்கிறோம் என்பது தான் உண்மை.

இன்று ஒருவர் நம் அமைதியை தீர்மானிக்கிறார், நாளை மற்றொருவர் தீர்மானிக்கிறார். அமைதிக்கான ஒரே வழி மனிதரிடம் அல்ல கடவுளிடம் தஞ்சம் புகுவது தான்.

மனிதர்களை சார்ந்து வாழ வேண்டும், ஆனால் மனிதர்களை மட்டுமே சார்ந்து வாழ்ந்து விட கூடாது. 

உலகம் தீர்ப்பிட காத்திருக்கிறது, ஆனால் அவரோ அமைதியை கொடுக்க காத்திருக்கிறார்.

உலகம் தருகின்ற இன்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு, உன்னதர் தரும் மகிழ்வை/அமைதியை நாடுவோம்...

பயனற்றது வேண்டாமே!!!


பாஸ்கா காலம் 5ஆம் வாரம்

19.05.2025 - திங்கட்கிழமை 

நான் செய்த செயல்கள் யாவற்றையும் அவற்றைச் செய்வதற்கு நான் எடுத்த முயற்சியையும் நினைத்துப் பார்த்தபோதோ, அவையாவும் வீண் என்பதைக் கண்டேன். அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்; முற்றும் பயனற்ற செயல்களே. - சபை உரையாளர் 2:11

பயன் உள்ள வாழ்க்கை எப்படி அடையாளப்படுத்தப்படும்? பிறருக்கும் தனக்கும் பயன் தருவதை நாடுதலே பயன் உள்ள வாழ்க்கை. அதிலும் இரண்டு இருக்கிறது.

1. தன் மனம் விரும்புகிறவற்றை எல்லாம் செய்வது, பேசுவது. (அது தவறாக இருந்தாலும் கூட)

2. சரியானதை மட்டும் செய்வது.

போகிற போக்கில் சிலர் எதையாவது செய்துவிட்டு போய் விடுகிறார்கள். சில நபர்களின் தந்திர செயல்பாட்டினால் பலரின் வாழ்க்கை வீணாகியுள்ளது. தன் மகனுக்காக/மகளுக்காக என்று சொல்லி திருமணத்தில் இணைக்கப்பட்டதை எளிதாக சில தாய் தந்தையர் பிரித்து விடுகின்றனர். 

பேசி தீர்க்க வேண்டிய காரியங்களை பேச விடாமலே தீர்த்து விடுகின்றனர். 

யார் யாரையோ தலைவன் தலைவியாக ஏற்றுக் கொண்டு பலர் திசைமாறி போகின்றனர். 

பயனுள்ள வாழ்க்கை பயனற்றதாய் மாறிக் கொண்டிருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 14: 5-18) லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை. அவர் அமர்ந்து பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து உரத்த குரலில், “நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்” என்றார். அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார்.

இதை கண்ட மக்கள் கூட்டத்தினர் பவுலையும் பர்னபாவையும் தெய்வங்களாக கருதி அவர்களுக்கு காளைகளை பலியிட முயன்றனர். 

இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது: “மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள்" என்று அறிவித்தார்கள்.

பயனுள்ள காரியங்கள் எளிதாக தட்டி கழிக்கப்படும். பயனற்ற காரியங்களோ எளிதாக மக்களால் கவர்ந்து இழுக்கப்படும்.

தலைவர் கட் அவுட் க்கு பால் அபிஷேகம், பணம் பதுக்கல், கொலை மிரட்டல், ஆள் கடத்தல், ஆயுதங்களால் தாக்குதல் என்று பல பயனற்ற காரியங்கள் இங்கு தலைவிரித்து ஆடுகின்றன.

யாரும் யாரையும் திருத்த முடியாது, அவரவர் பட்டு திருந்தினால் தான் உண்டு.

நாம் அழிவைத் தரும் உலக காரியங்களை அளவோடு பயன்படுத்தி விண்ணக கைம்மாறை பெற்றுக் கொடுக்கும் பயனுள்ள காரியங்களை நாடித் தேடுவோம் (இறைவார்தையை வாழ்வாக்க முயற்சி, எளியோரை தாங்குதல், பகிர்ந்து வாழுதல், அன்போடு பழகுதல், ஆணவம், அதிகாரம், பொறாமை ஆகியவற்றை நீக்குதல் இவை தான் கைமாறுக்கு வழிவகை செய்யும்).

எதுக்கு அன்பு செய்யணும்?


பாஸ்கா காலம் 5ஆம் வாரம்

18.05.2025 - ஞாயிற்றுக் கிழமை 

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையுடன் நீதி வழங்குங்கள்; ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள் - செக்கரியா 7:9

இந்த உலகம் அன்பால் சூழப்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரிந்தவர்களை மட்டும் அல்ல, கண்ணுக்கு தெரியாத எங்கோ இருக்கக் கூடிய மனிதர்கள் மீதும் நாம் பரிதாப்படுகிறோமே அது அன்பு.

இந்த உலகில் இரண்டு வகையான அன்பு இருக்கிறது. 1. உண்மையான அன்பு 2. போலியான அன்பு

1. உண்மையான அன்பை காண்பது அரிது. உண்மையான அன்பை எல்லோரும் விரும்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இறுதிவரை உண்மையான அன்பை காட்டுவதில்லை.
2. போலியான அன்பு என்று தெரிந்தும் கூட இன்று பலர் ஏமாந்துக் கொண்டே இருக்கிறார்கள். தற்காலிக சுகம் அதில் கிடைப்பதால் இந்த ஏமாற்றம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 

அன்பு என்ற ஒன்றை இந்த உலகில் இருந்து தூக்கி விட்டால் நாம் அனைவரும் இயந்திரம் தான்.

அன்பினால் காயமும் உண்டாகும்; அந்த அன்பே காயத்திற்கு மருந்தாகும். 
காயப்படுத்தும் நபர்களே கட்டு போடுவார்கள், சிலர் காயப்படுத்தி விட்டு கடந்து செல்வார்கள்.

சில மனிதர்கள் தந்த காயம், வலி சிலரை இறுதிவரை வெறுப்புணர்வுக்கு அழைத்துச் சென்று விடுகிறது.
யாரோ செய்த தவறுக்கு எல்லோரையும் எதிரியாக பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 13: 31-33a, 34-35) ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” என்கிறார் இயேசு.

எல்லா மனிதர்களும் இந்த உலகில் அன்பை பெறுவதில்லை. சிலருக்கு அளவுக்கு மீறி அன்பு கிடைக்கிறது. சிலருக்கு அன்பு இறுதியில் ஏமாற்றதை கொடுக்கிறது. 
அன்பு சிலரை அனாதை ஆக்கியிருக்கிறது (பெற்றோர் பிள்ளைகள் மேல் கொண்ட அன்பு).

இப்படி இருக்கும் சூழலில் எப்படி அன்பைக் காட்டுவது? என்ற கேள்வி எழுகிறது.
அன்பில் எதிர்பார்ப்பு இருக்க கூடாது. அன்பில் எதிர்பார்ப்பு இருந்தால் அது ஏமாற்றதை தான் தரும். 

அன்பை விதைத்து கொண்டே இருக்க வேண்டும். பலன் நமக்கு கிடைத்தாலும் சரி இல்லை அடுத்தவருக்கு கிடைத்தாலும் சரி என்ற நோக்கில் செயல்பட வேண்டும்.
அன்பு நோயை குணமாக்கும், தீமையை வேரறுக்கும், புனிதப்படுத்தும், நம்பும், நம்பிக்கை கொடுக்கும், நல்வழிபடுத்தும்.

இயேசுவை போல அன்பை விதைப்போம். எதிர்பார்ப்புகளற்ற அன்பாய் நம் அன்பு மாறட்டும்...

அறிதல்/புரிதல் குறைவு...


பாஸ்கா காலம் 4ஆம் வாரம் 

17.05.2025 - சனிக் கிழமை 

காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை - எசாயா 1:3

பொதுவாகவே மனிதர்களிடம் தன்னை பற்றிய அறிதலும் பிறரை பற்றிய அறிதலும் குறைவாக தான் இருக்கும். எந்த மனிதரும் தன்னை பற்றி முழுமையாக அறிந்து கொள்வதில்லை. (அப்படி அறிந்துக் கொள்வது மிக மிக கடினம்) தன்னை அறிந்தவன் மட்டுமே தன்னிலையை கடந்துச் செல்வான். பிறரை அறிந்துக் கொள்ள முற்படுவான்.

தன்னையே அறிந்துக் கொள்ள இயலாதவர் எப்படி மற்றவரை அறிந்துக் கொள்ள முடியும்? 

நமக்கு ஒரு இடத்தில் அதிக ஆர்வம் உண்டு. பிறரின் குறைகளை மட்டும் அறிந்துக் கொள்ள.

மனித வாழ்வில் குறைகளும் உண்டு நிறைகளும் உண்டு. குறைகளை மட்டும் பார்த்து அதை பெரிதுப்படுத்தினால் நிறைவை கண்டுக் கொள்ள முடியாது. 

என்னிடம் உள்ள குறைகளை நான் என்றாவது பெரிதுப்படுத்தியது உண்டா? நிச்சயம் இல்லை. அருகில் இருப்பவரை அறிந்துக் கொள்ள முற்பட வேண்டும். (கணவன், மனைவி, பிள்ளைகள் இடையே இன்று விரிசல் அதிகம் உள்ளது).

அறிந்துக் கொள்ள முற்படுதல் அன்பினால் தூண்டப்பட வேண்டும். அரைகுறை அன்பும் ஆபத்தானது தான்.

சிலர் சில மனிதர்களை அணுகி வருவார்கள், நெருங்கி பழகி தனக்கு தேவையான காரியங்களை கறந்துக் கொள்வார்கள். காரியம் முடிந்ததும் கலைந்து போய் விடுவார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14: 7-14) இயேசு தம் சீடரை நோக்கி: “நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்கிறார். பிலிப்போ தந்தையை எங்களுக்கு காட்டும் என்று சொல்ல, பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும் என்று சொல்கிறார் இயேசு.

இயேசுவோடு இருந்தவர்களில் இயேசுவை புரிந்துக் கொண்டவர் யாரும் இல்லை என்று சொல்லலாம். இயேசு எதை போதித்தார்? என்ன போதித்தார்? எப்படி போதித்தார்? என்பது அவர்களுக்கு விளங்கவில்லை.

ஒருவர் மற்றவரை புரிந்துக் கொள்ள இருவரும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டும்.

விருப்பு வெறுப்புகளை கடந்து இணைந்து செல்ல வேண்டும். அப்படிப்பட்ட குடும்பம் தான் இறையாற்றல் பெற்ற குடும்பமாக திகழ முடியும்.

மற்றவரை முழுவதுமாக அல்ல, முடிந்த அளவாவது புரிந்துக் கொள்ள முயலுவோம். நான் விரும்புவது போல மற்றவர் இருக்க வேண்டும் என்பது தவறு; மாறாக, மற்றவரை அவர் இருப்பது போல ஏற்றுக் கொள்வதே புரிந்துக் கொள்தலின் தொடக்கம்.

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?


பாஸ்கா காலம் 4ஆம் வாரம் 

16.05.2025 - வெள்ளிக் கிழமை

அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது ‘தூய வழி’ என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார் - எசாயா 35:8

எங்கே போகிறோம்? அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வியை அடிக்கடி எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையில் நிதானம் இழந்து விடக் கூடாது. 

வாழ்க்கையில் பல தடைகள் முன்வைக்கப்படும். அதற்கு நாம் துணிந்து நிற்க வேண்டும். துணிந்து நிற்க நம் கால்கள் நிலையாக இருக்க வேண்டும்.

அடுத்தவர் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்? என்பது தான் நமது தேடலாக இருக்கிறது. அடுத்தவரை பார்த்து கொண்டிருந்தால் நம் கால்கள் தடம் புரளும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14: 1-6) என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள் என்று இயேசு சொல்ல, தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்றார். 

ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்? என்பது தோமாவின் கேள்வி. நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்? என்பது அடுத்த கேள்வி.

இயேசுவின் பதில், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்பது தான். 

வழி மாறியவர்களுக்கு இயேசுவே வழியாக இருக்கிறார்.

வாழ்க்கையில் தடம் புரண்டவர்களுக்கு அவரே உண்மையாக இருக்கிறார். 

வாழ்வை முடித்துக் கொள்ள எண்ணுபவர்களுக்கு அவரே வாழ்வாக இருக்கிறார்.

பலர் இயேசுவை விட்டு, இயேசுவின் விழுமியங்களை விட்டு வெளியே போய் விடுகிறார்கள். அலைந்து திரிந்து ஊதாரித் தனமாக வாழ்ந்து விட்டு, எங்கோ தொலைந்து போய் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் ஓய்ந்த பிறகு திரும்பி வர முடியாமல் இருக்கிறார்கள். நாம் செய்த செயல்களுக்கு மன்னிப்பு உண்டா? நம்மை அவர் ஏற்றுக் கொள்வாரா? என்ற சந்தேகத்தோடு தூர நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

எப்போது? எங்கே? நாம் தொலைந்தோம் என்பதை உணர்ந்தாலே நாம் திருந்தி/திரும்பி வந்து விடுவோம்.

ஆண்டவர் எங்கும் போகவில்லை. நாம் தான் அவரை விட்டு போய்க் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை பெற்று திரும்பி வருவோம்.

பணியாளரும் பேறுபெற்றவரே!!!


பாஸ்கா காலம் 4ஆம் வாரம்

15.05.2025 - வியாழக்கிழமை 

மக்களின் நடுவர் எவ்வாறோ அவருடைய பணியாளர்கள் அவ்வாறே; நகரத் தலைவர் எவ்வழியோ, அவ்வழி நகர மக்கள் - சீராக்கின் ஞானம் 10:2

பணியாளர் தலைவர் இடையே இடைவெளி உண்டு. செய்யப்படும் பணியின் அடிப்படையில் அல்லது ஒருவருக்கு கீழ் பணி செய்வதால் ஒருவர் அடங்கி போக வேண்டி இருக்கும். 

பொதுவான புரிதலில் யாரும் யாரையும் விட மதிப்புக் குறைந்தவர் அல்ல. இன்று மதிப்பு எப்படி பார்க்கப்படுகிறது? ஒருவரின் பணத்தின் அடிப்படையில், ஒருவரின் அதிகாரத்தின் அடிப்படையில் தான்.

ஆனால் தகுதி, திறமை ஒருவரின் மதிப்பை கூட்டிக் காட்டும். கீழான பணி செய்தாலும் அவரிடம் இருக்கும் ஆற்றலின் அடிப்படையில் அவர் மதிப்புக்கு உரியவரே. அதே சமயத்தில் தன்னிடம் திறமை இருக்கிறது என்பதற்காக தன்னை விட பெரியவர்களையோ, தன் தலைவர்களையோ ஏளனமாக பார்க்க கூடாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 13: 16-20) பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப் பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.

ஒரு பணியாளர் பேறுபெற்றவர் ஆவது முதலில் அவர் தன்னிலை உணர்தலில் தொடங்குகிறது. தன்னிலை உணர்ந்து தன் பணி செய்பவர் மதிப்புக்கு உரியவர்.

எக்காரணத்தை முன்னிட்டும் நமக்கு தொடர்பில்லாத காரியங்களில் மூக்கை நுழைக்க கூடாது. தன்னை சரிப்படுத்த இயலாதவர் எப்படி அடுத்தவரை சரிப்படுத்த முடியும். 

தலைவர் வழிநடத்தும் இடத்தில் இருக்கும் காரணத்தினால் பணியாளர் அவருக்கு பணிந்து தனது கடமைகளை சரிவர செய்ய வேண்டும். (தலைவரும் தன்னை எல்லோரையும் விட உயர்ந்தவராக எண்ணி விட கூடாது, வல்லவனுக்கு ஒரு வல்லவன் இருப்பான்).

நமது கடமைகளை உணர்ந்து நமது பணிகளை சரிவர செய்வோம். நாம் செய்யும் பணி நமது மதிப்பை கூட்டட்டும், நம்மை பேறுபெற்றவராக மாற்றட்டும்...

ஒருவரின் இடத்தை மற்றவர் நிரப்புவார்


பாஸ்கா காலம் 4ஆம் வாரம்

14.05.2025- புதன் கிழமை 

"நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்" - எசாயா 48:10

எந்த மனிதரின் உள்ளத்திலும் நான் என்ற அகங்காரம் வர கூடாது. இன்று ஒருவர் நாளை மற்றவர். இன்று எனக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது, அதை சரிவர நிறைவேற்ற வேண்டியது என் பொறுப்பு. 

நான் அதை சரிவர செய்யாவிட்டால் மற்றவர் அந்த இடத்தை நிரப்புவார். எனக்கு மட்டுமே எல்லா தகுதி இருக்கிறது என்பதும் என்னால் மட்டுமே எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது ஆபத்தில் போய் முடியும்.

நமது தகுதி கடவுளிடம் இருந்தே வருகிறது. தகுதியற்றவர்கள் தகுதிப்படுத்தப்படுகிறார்கள். தலைக்கணம் உள்ளவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு திருத்தூதர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, யூதாசு இஸ்காரியோத்துவினால் திருத்தூதர்கள் அணியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முயன்றார்கள். 

பேதுரு பன்னிரெண்டாவது திருத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர் எத்தகைய தகுதிகளைப் பெற்றிருக்கவேண்டும் என விளக்கிச் சொல்கிறார்.

1. அவர் இயேசுவின் திருமுழுக்கிலிருந்து, அவர் விண்ணேற்றம் அடைந்தது வரை உடன் இருந்திருக்கவேண்டும்.

2. அவர் இயேசுவின் உயிர்ப்பை கண்ணால் கண்டிருக்க வேண்டும். 

இத்தகைய தகுதிகளைக் கொண்ட இருவரை சீடர்கள் முன்மொழிகிறார்கள். ஒருவர் யோசேப்பு எனப்படும் பர்சபா. இன்னொருவர் மத்தியா. பின்பு சீடர்கள் அனைவரும் ஒருமனதாக இறைவனிடம் வேண்டல் செய்து, இருவருடைய பெயரையும் சீட்டுக் குலுக்கிப் போடுகிறார்கள். சீட்டு மத்தியா பெயருக்கே விழுகிறது. இவ்வாறு மத்தியா திருத்தூதர்கள் அணியில் இடம்பெறுகிறார்.

மத்தியாவை குறித்த செய்திகள் விவிலியத்திலும், திருச்சபை வரலாற்றிலும் அதிகமாக இல்லை. 

அலெக்ஸ்சாண்ட்ரியா நகரைச் சேர்ந்த புனித கிளமென்ட், “ஆண்டவர் இயேசு பணித்தளத்திற்கு அனுப்பிய எழுபத்தி இரண்டு சீடர்களில் மத்தியாவும் ஒருவர் எனவும், அவர் உடல் ஒறுத்தல்களை அதிகமாகச் செய்வார்” எனக் குறிப்பிடுவார்.

திருத்தூதர்கள் குழுமத்தில் நேரடியாக இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் உண்டு, இயேசுவின் பெயரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உண்டு. அந்த வகையில் புனித மத்தியா இயேசுவின் பெயரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

இறைவனுடைய பணியை செய்வதற்காக, மீட்பை அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பதற்காக இயேசு திருத்தூதர்கள் குழுமத்தை ஏற்படுத்தினார். 

நாமும் அதே திருத்தூதர் குழுமத்தில் இணைக்கப்பட்டிருக்கிறோம். 

அருளும் ஆற்றலும் நிறைந்த மத்தியா போல நாமும் செயல்படுவோம்.

நம்முடைய திறமையை நம்முடைய பெருமைக்காக அல்ல, இறைவனின் திருவுளம் இம்மண்ணில் பரவ பயன்படுத்துவோம்...

ஆயனும் மந்தையும் ஒன்றாக...

பாஸ்கா காலம் 4ஆம் வாரம்

13.05.2025 - செவ்வாய்க் கிழமை

“எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்” - யோவான் 17:21

எதிர்பார்ப்பில்லா, பொறாமையில்லா, சமுதாய சீர்கேடு இல்லா அந்த காலம் எவ்வளவு அருமையாய் இருந்தது. அன்று தொலைத் தூர பயணம் இல்லை, தொலைத் தொடர்பு சாதனம் இல்லை. ஆனால் உறவு ஒன்றிப்புக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்று எல்லாம் இருக்கிறது, ஆனால் உறவு ஒன்றிப்பு தான் இல்லை. 

எல்லாரும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்று சிந்தனையில் எண்ணினோம் செயலில் காட்டினோம். ஆனால் இன்று மனதளவில் கூட அந்த ஒன்றிப்பு எண்ணம் வருவதில்லை. இணைந்திருப்போரை பிரிக்க சதித்திட்டம் தீட்டும் கூட்டம் இங்கு அதிகம். அதிலும் அந்த சதிக்கார கூட்டம் வீட்டுக்குள்ளே இருக்கிறது என்பது தான் வருந்ததக்கது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 10:22-30) மந்தையோடு ஒன்றித்திருக்கும் ஆயனை பற்றி வாசிக்க கேட்கிறோம். இந்த ஆயனிடமிருந்து மந்தையை பிரிக்க எவராலும் முடியாது. காரணம் அந்த ஆடுகள் அவரது குரலுக்கு செவிசாய்க்கின்றன. ஆடுகள் ஆயனோடு இணைந்திருக்கின்றன. தந்தையிடமிருந்து மகன் அவற்றை பெற்றிருக்கிறார், அவற்றிற்கு அவர் நிலைவாழ்வு அளிக்கிறார்.

தந்தை மகனோடும் மகன் தந்தையோடும் ஒன்றித்திருப்பது போல நாமும் இணைந்து வாழ வேண்டும். இணைப்பில் தான் அமைதி உண்டாகும். ஒன்றிப்பில் தான் மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்து வாழ்ந்து, எதையும் நாம் அனுபவிக்காமலும் மற்றவர்கள் பெற்றுக் கொள்ளாமலும் போவதைவிட இருக்கும் வரை இணைந்து பயணிப்போம். 

சிந்தனையிலும் ஒன்றிப்பு தேவை, பேச்சிலும் ஒன்றிப்பு தேவை. (பல நேரங்களில் ஒன்றிப்பை சிதைப்பதே, நாம் வாய்த் தவறி விட்ட வார்த்தைகள் தான்) இறை உறவில் இழப்பு இல்லை. இறை மனித ஒன்றிப்பில் தோல்வி இல்லை.

பிளவை உண்டாக்கும் சந்தர்ப்பவாதிகளை தூரெடுப்போம். அதன் மூலம் நம் உறவுகள் தூய்மை பெறும். உறவுகள் இணைக்கப்படும்.

ஆயனுக்கு செவிமடுக்க...


பாஸ்கா காலம் 4ஆம் வாரம்

12.05.2025 - திங்கள் கிழமை

“அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்” - திருப்பாடல்கள் 116:2

வம்பை விலைக் கொடுத்து வாங்குவது போல தேவையில்லாத உறவுகளை, உணர்வை கொடுத்து வாங்கி விடுகிறோம். உணர்வினால் ஒருமுறை கட்டப்பட்டால் அதன்பின் மீண்டு வருவது கடினம் தான். ஒருவருக்கு அடிமையாகிவிட்டால் அவர் ஆட்டி வைப்பது போல தான் நாம் இயங்குவோம். அடிமைத்தனம் ஆபத்தானது. அலைபேசி அடிமை, உணர்வின் அடிமை, உணவுக்கு அடிமை, நுகர்வுவெறிக்கு அடிமை என்று அடிமைத்தனம் நீண்டுக் கொண்டே செல்கிறது.

இந்த அடிமைத்தனம் உள்ளே நுழைந்தால், மற்ற நல்லவை காதின் உள்ளே நுழையாது. இன்று பெற்றோருக்கோ, மூத்தோருக்கோ செவிமடுக்க முடியாதவாறு காதுகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 10:1-10) ஆயன், ஆடு செவிமடுக்கும் நிலை விவரிக்கப்பட்டுள்ளது. ஆயன் ஆட்டை அறிந்திருக்கிறார், ஆயனை ஆடுகள் அறிந்திருக்கின்றன, அவற்றிற்கு அவரது குரல் தெரியும், அறியாத ஒருவர் பின் அந்த ஆடுகள் செல்லாது என்கிறார் இயேசு கிறிஸ்து. 

நம்முடைய நல்வாழ்வை சிதைக்க பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்படுவது தெரிந்தும் திசைமாறி செல்வது முறையல்ல. ஆயனின் பார்வையிலிருந்து விலகி போக கூடாது. ஆயனுக்கு செவிமடுக்கின்ற போது நாம் நிலைதடுமாற மாட்டோம். ஆயனுக்கு ஆடுகளின் நிலை தெரியும், ஆடுகளின் பலவீனம் தெரியும், ஆடுகளின் களைப்பு தெரியும்.

நம்முடைய வேலை என்பது காதுகளை திறந்து செவிமடுக்க வெண்டும். செவிமடுத்தால் மட்டும் போதாது செவிசாய்க்க வேண்டும். கேட்பவற்றை செயல்படுத்த வேண்டும். 

இவ்வுலக வாழ்வை நாம் நிறைவாக பெற்றிட ஆயன் வழியில் நடப்போம். அடிமைத்தனத்துக்கு அல்ல ஆயனுக்கு செவிமடுப்போம். 

ஆடுகளை அறிந்து அன்பு செய்யும் ஆயன்...

பாஸ்கா காலம் 4ஆம் வாரம்

11.05.2025 - ஞாயிற்றுக் கிழமை

“ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன்” - எசேக்கியேல் 34:12

இன்றைய நாள் இறையழைத்தல் ஞாயிறாகவும், நல்லாயன் ஞாயிறாகவும் சிறப்பிக்கப்படுகின்றது. பழைய ஏற்பாட்டில், இஸ்ராயேல் மக்கள் கடவுள் உறவு என்பது ஆயன் மந்தை என்னும் உருவகம் வழியாகவே விளக்கப்படுகிறது. ஆயனை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஆயனை நோக்கி வருதல், இது தான் பழைய ஏற்பாட்டு நிகழ்வு. 

கடவுள் இஸ்ராயேல் மக்களின் ஆயராக இருந்த போது அவர்கள் குறைகளை கண்டதில்லை. இதைத் தான் தாவீது அரசர் திருப்பாடல் 23இல் இவ்வாறு பாடுகிறார், “ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை”. ஆயரை விட்டு வழிமாறிய மந்தை தீமையை சந்திக்க நேருகிறது. அடிமைத்தன வீட்டிற்கு இழுத்துச் செல்லப்படுகிறது. 

கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகள் முக்கியமல்ல தனது உயிர் தான் முக்கியம். ஆனால் ஆயனுக்கு தன் மந்தையும் முக்கியம், தனது உயிரும் முக்கியம். தனது உயிரை பணயம் வைத்து ஆடுகளை காப்பாற்றுவதில் கூலிக்கு மேய்ப்பவரை விட ஆயனுக்கு அதிக ஈடுபாடு உண்டு. 

என்னதான் பார்த்து பார்த்து வளர்த்தாலும் அந்த ஆடு அடிமைவிலைக்கோ, கறிகடைக்கோ தான் செல்லும். இருந்தபோதிலும் அந்த ஆயன் வருவாயை ஈட்டி விடுவார். அங்கு இழப்பு இருக்கிறது, அதே சமயத்தில் உழைப்பின் பலன் இருக்கிறது.

இன்றைய நாளின் நற்செய்தி (யோவான்  10: 27-30) வாசகத்தில் இயேசு நல்ல ஆயனாக உருவகப்படுத்தப்படுகிறார். என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள மாட்டார். 

ஆடுகளை மேய்ப்பவர்களுக்கு இந்த ஆடுகளால் பலன் உண்டு, பயன் உண்டு. ஆனால் இயேசு என்னும் ஆயனுக்கு இந்த மக்கள் என்னும் மந்தையால் என்ன பலன் உண்டு என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

“அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்” (யோவான் 6:39)

இது தான் இயேசு ஆயனாக இருந்து பெறும் பலன், பயன். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதே அவர் பெறும் பலனாக இருக்கிறது.

பிரிந்து கிடக்கும் மந்தையை ஒன்று சேர்ப்பதும், மனங்களால் சிதறி கிடக்கும் மக்களை கூட்டிச் சோப்பதும் தான் இந்த ஆயனின் வேலை.

இயேசு என்னும் ஆயன் இன்று நம் வழியாக செயலாற்றப்பட வேண்டும். ஒரே ஆயனின் ஒரே மந்தையாக எல்லோரும் இணைய நாம் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு நமக்குள் இருக்கும் கட்சி மனப்பான்மை, சாதிய உணர்வுவெறி, உயர்த்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் வேறுபாடு ஆகியவை களையப்பட வேண்டும். 

இறைவார்த்தையை அறிவிப்பதனால் மட்டும் நாம் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றிவிட முடியாது, தினசரி திருப்பலியில் பங்கெடுப்பதனால் மட்டும் இறைவனின் மனம் குளிர்ந்துவிடாது. 

இறைவனை போல 

நம்மை இழந்து, 

நல்ல ஆயனாக இருந்து,

நம்பிக்கை இழந்தோரை தூக்கிவிடும்போது, 

பசித்தோருக்கு உணவளிக்கும்போது,

 வாழ்விழந்தோருக்கு வாழ்விற்கான வழியை காட்டும்போது, 

வார்த்தையிலும் செயலிலும் இறையன்பை பிரதிபலிக்கும்போது 

நாம் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் ஆயராக இருக்க முடியும். 

முணுமுணுப்பு நீங்க வேண்டும்...


பாஸ்கா காலம் 3ஆம் வாரம்

10.05.2025 - சனிக் கிழமை

“நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலை வாழ்வு” - உரோமையர் 6:22

வெளிப்படையாக பேசுதல், வாயுக்குள்ளே முணுமுணுத்தல் இரண்டும் ஒன்றல்ல. வெளிப்படையாக பேசுகின்ற போது அடுத்தவருக்கு தெரிய வரும், அதற்கான பதில் கிடைக்க வாய்ப்புண்டு. முணுமுணுப்பதினால் உள்மனக் காயங்கள் தான் அதிகமாகும்.

இந்த முணுமுணுப்பு தான் நம் நிம்மதியையும் மற்றவர்கள் நிம்மதியையும் கெடுத்துவிடும். வார்த்தைகள் தெளிவாகவும் கருத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:60-69) ‘இயேசு நிலைவாழ்வு அளிக்கும் உணவை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது’ இந்த பேச்சை இன்னும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? என்று இயேசுவை சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்கள் முணுமுணுத்து இயேசுவை விட்டு பிரிந்து சென்றனர். இயேசுவின் வார்த்தையை அவர்கள் நம்பவில்லை, அவரில் நிலைவாழ்வு உண்டு என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

அந்த வேளையில் இயேசு தன் சீடர்களை பார்த்து நீங்களும் என்னை விட்டு போய்விட நினைக்கிறீர்களா? என்று கேட்கிறார். அப்போது பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்” என்கிறார். 

நம்முடைய இல்லற, துறவற வாழ்வில் முணுமுணுப்புக்கும் எரிச்சலுக்கும் இடம் கொடுத்தோம் என்றால் இருக்கிற அமைதியையும் நாம் தொலைத்துவிடுவோம். இறைவனில் நம்பிக்கையும் பணிவில் தெளிவும் வார்த்தையில் உண்மையும் இருந்தால் நிலைவாழ்வு நிச்சயம் தான். 

இவ்வுலகிலே நிலைவாழ்வை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் வார்த்தையும் வாழ்க்கையும் இணைந்து செல்ல வேண்டும்.

இயேசுவை போல, பணியிலும் பணிவிலும் பேசும் வார்த்தையிலும் கருத்தாய் இருப்போம்… அதனால் நிலைவாழ்வு நமக்கு சாத்தியமே…

பிலிப்பியர் 2:14 இவ்வாறு சொல்கிறது, “முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள்”

கடவுளின்/மனிதரின் எண்ணங்கள் வேறு...


பாஸ்கா காலம் 3ஆம் வாரம்

09.05.2025 - வெள்ளிக் கிழமை 

எல்லா மனிதர்களின் எண்ணங்களும் ஒன்றல்ல. எல்லா மனிதர்களும் ஒன்றாக சிந்திப்பது இல்லை. நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுவோர் மத்தியில் தீமையை விதைப்போரும் உண்டு. 

சில மனிதர்கள் செய்த காரியங்களை குறித்து அறியப்பட்ட செய்தியைக் கொண்டு இறுதிவரை அவரை கெட்டவராக பார்ப்பவரும் உண்டு. கெட்டவர் தன் சார்பாக செயல்பட்டால் அவரை நல்லவராக தூக்கி பிடிப்பவரும் உண்டு.

எனக்கு ஏற்றார் போல செயல்பட்டால் மற்றவர் நல்லவர், எனக்கு எதிராக செயல்பட்டால் கெட்டவர். தான் செய்வது தவறு என்றாலும் தன் சார்பாக மனிதர்கள் இருக்க வேண்டும் என்று மூளை சொல்லத் தான் செய்கிறது.

ஒருவர் கெட்டவர் என்பதை ஒரு நிமிடம் தீர்மானித்து விடும். ஒருவர் நல்லவராக பார்க்கப்படுவதற்கு பல வருடங்கள் தேவைப்படும். 

இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 9: 1-20) சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார் என்பதையும் அதே மனிதர் பவுலாக மாறி, அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.

இதற்கு இடையில் பார்வை இழந்த சவுல் பார்வை பெற, அனனியா கடவுளால் அனுப்பப்படுகிறார். ஆனால் அனனியாவால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான் என்று அனனியா சொல்ல, ஆண்டவரோ "அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார். என் பெயரின் பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக் காட்டுவேன்” என்றார்.

மனிதரின் எண்ணங்கள் கடவுளின் எண்ணங்களில் இருந்து மாறுபட்டவை. மனிதர் முகத்தை பார்க்கின்றனர், ஆனால் கடவுளோ அகத்தை பார்க்கின்றார்.

நாம் மாறிவிட்டோம் என்பது மனிதருக்கு தெரியாது, மனிதரால் நம்ப முடியாது. ஆனால் கடவுளுக்கு எல்லாம் தெரியும்.

நம் எண்ணங்களை அவர் சீர்தூக்கி பார்க்கிறார்.

திருப்பாடல்கள் 139:2

நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.

திருப்பாடல்கள் 139:7

உமது ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?

திருப்பாடல்கள் 139:6

என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது.

இறைவன் நம்மை ஆய்ந்து அறிந்திருக்கிறார்... அவர் பார்வையிலிருந்து நாம் மறைவாக இல்லை.

நம்பினால் தடையில்லை


பாஸ்கா காலம் 3ஆம் வாரம்

08.05.2025 - வியாழக்கிழமை 

இயேசுவை அறிந்துக் கொண்டவர்களை விட இயேசுவை அறிந்துக் கொள்ள எண்ணுபவர்கள் தான் அவர்மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். 

யாரும் இயேசுவை ஏற்றுக் கொள்ளலாம். யாரும் இயேசுவின் படிப்பினைகளை பின்பற்றலாம். இது இயேசுவை வழிபாட்டுப் பொருளாக மட்டும் பார்ப்பவர்களுக்கு எரிச்சலை கொடுக்கும். 

ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு "Liturgical Beauty", அதாவது வழிபாட்டு ஒழுங்கு/வழிபாட்டின் நேர்த்தி. இதை இப்படி தான் செய்ய வேண்டும், இது இங்கே தான் இருக்க வேண்டும், இவர்கள் இங்கு வர வேண்டும், இவர்கள் மட்டும் தான் இதை செய்ய வேண்டும் என்று சொல்லி வழிபாட்டிற்கு அழகு சேர்க்க துடிக்கும் கூட்டம் இயேசுவின் போதனையையும், அவர் விதைத்த இறையாட்சியின் விழுமியங்களையும் கண்டுக் கொள்ளாது.

சிலர் நம்பிக்கையோடு கடவுளை தேடி வருவார்கள், சிலர் ஐயத்தோடு கடவுளைத் தேடி வருவார்கள், சிலர் பொழுது போக்கிற்காக கடவுளை தேடுவார்கள், சிலர் பாவ புண்ணிய சேர்க்க கடவுளை தேடுவார்கள். 

நம்பிக்கை தான் மனிதத்தையும் இறைமையையும் இணைக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 8: 26-40) எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர், இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன் என்று சொல்லி திருமுழுக்கு பெறுகிறார். இதற்கு முன்னதாக பிலிப்பு இறைவாக்கினர் எசாயா சுருளேட்டை எடுத்து வாசிக்கிறார். அதன் அர்த்தத்தை அரச அலுவலர் கேட்க, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவிக்கிறார் பிலிப்பு.

ஒருவர் நம்பினார், கிறிஸ்துவில் புதுபிறப்பு அடைந்தார். நம்பினார் புது வாழ்வு பெற்றார்.

நம்பிக்கை தடைகளை உடைக்கும். இன்று அதிகார போக்கிலான ஆன்மீக, அரசியல் பணிகள் நடைபெறுகின்றன.   செய்ய வேண்டியவர்கள் அதிகாரத்தை திணிக்கிறார்கள், மற்றவர்களையும் செயல்பட விடுவதில்லை.

கீழானவர்கள் மேலானவர்கள் என்ற பிளவுகள் இயேசுவின் பார்வையில் இல்லை. ஆனால் இயேசுவின் பெயரை சொல்லி இன்றும் பல பிரிவினைகள் இருக்கின்றன. 

தடைகளை உடைக்க நம்பிக்கை கொள்வோம். தடைகளை தாண்டி பயணிப்போம்...

இறுதிநாளில் கைம்மாறு...

பாஸ்கா காலம் 3ஆம் வாரம்

07.05.2025 - புதன் கிழமை 

இந்த உலகில் இருக்கும் எல்லா மனிதர்களும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பசி, தாகம் இந்த இரண்டும் தான் வாழ்வின் அடிப்படை தேவை. அதை பெறுவதற்காக தொடங்கப்பட்ட ஓட்டம் இடையில் திசைமாறி விட்டது என்றே சொல்லலாம்.

சொத்துக் குவிப்பு/சேமிப்பு, பணம் பதுக்கல், நிலம் சூறையாடப்படல், அந்நிய நாட்டின் மீது படையெடுப்பு, கலவரத்தை தூண்டி விட்டு பணம் சம்பாதித்தல், மருத்துவத்தில் சீர்கேடு, தண்ணீர், காற்று ஊழல் என்று பிரச்சினைகளின் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.

எல்லாம் எதற்காக? இம்மையில் நன்றாக வாழ்வதற்காக என்பது பதிலாக வரும். இம்மை வாழ்வில் நமக்கு முழு நிறைவை தரும் எதுவும் இல்லை. இன்று மகிழ்ச்சியை தருவது நாளைக்கு தூக்கியெறியப்படும். 

நிலையானவற்றை தேடிச் சென்று கொண்டிருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6: 35-40) இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி: “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்.

அந்த நிலைவாழ்வில் தான் நிறைவாழ்வை பெற முடியும். இறைவனில் நம்பிக்கைக் கொள்வோருக்கு என்றுமே பசி, தாகம் இராது என்று சொல்லப்படுகிறது.

பசி, தாகமே இராது என்று சொல்லப்படுகிற போது நிலையற்ற மற்ற காரியங்களை குறித்து கவலை பட எந்த அவசியமும் இராது.

நாம் செய்யக் கூடிய ஒவ்வொன்றின் கைம்மாறை இவ்வுலகிலே தேடிக் கொண்டிருக்கிறோம். கைம்மாறு கிடைக்காத தருணம் வருகிற போது நம் சுயத்தை காட்டி விடுகிறோம்.

நல்லது செய்து பொறுமையுடன் காத்திருத்தலே சிறப்பு. இறுதியில் நமக்காக கைம்மாறு கொடுக்கப்படும். 

சபை உரையாளர் 12:14 இவ்வாறு சொல்கிறது, "நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்."

வார்த்தையே உணவு...


பாஸ்கா காலம் 3ஆம் வாரம்

06.05.2025 - செவ்வாய்க் கிழமை 

சிலரின் வார்த்தை ஜாலம் பலரை மயக்கி இருக்கிறது. வார்த்தைகளினால் பலரை பலர் கவர்ந்திருக்கிறார்கள். சிலரின் வார்த்தைகள் உண்மை போன்று தோன்றும் ஆனால் போலியானது. சிலரின் வார்த்தைகள் ஏற்றுக் கொள்ள கடினமாக இருக்கும் ஆனால் அதுவே நல்வாழ்வுக்கு உகந்தது.

சிலரின் வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது. சிலர் எப்போது பேசுவார்கள்? என்று இருக்கும், சிலர் எப்போது பேசி முடிப்பார்கள் ? என்று இருக்கும்.

பேசும் விதங்கள் தான் நமக்கான நண்பர்களை பெற்றுக் கொடுக்கிறது. பேசியது போல செயல்படுவது தான் நம் நண்பர்களை தக்க வைக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான்  6: 30-35) இயேசு மக்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார்.

உணவு உயிர்க்கு ஆற்றல் தருவது தான், ஆனால் அழியக் கூடிய உணவை விட வேறொரு ஆற்றல் மிக்க உணவு ஒன்று உண்டு என்றால் அது இயேசுவின் வார்த்தை.

அழுகின்ற போது சில மனிதர்களின் வார்த்தை ஆறுதல் தருகிறது.சாதாரண மனிதர்களின் வார்த்தைக்கே இவ்வளவு என்றால் உண்டு என்றால் நம்மை படைத்து இயக்குபவரின் வார்த்தைக்கு எவ்வளவு ஆற்றல் இருக்க வேண்டும்.

ஆறுதலிக்கும் வார்த்தைகள் அற்பமான உணவை விட மேலானது.

எல்லோருக்கும் பேசும், புரிய வைக்கும் திறமை கிடையாது. 

இறைவன் அத்தகைய ஆற்றலின் வாயிலாக நம்மை நிறைத்திருந்தால் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

வார்த்தையினால் மற்றவர்களுக்கு வலு ஊட்டுவோம். 

தேடுதலில் பொருள் இருக்க வேண்டும்...

பாஸ்கா காலம் 3ஆம் வாரம்

05.05.2025 - திங்கட்கிழமை 

இந்த உலகத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நாம் எதை எதையோ தேடிக் கொண்டிருக்கிறோம். தேடியதை கண்டுப்பிடித்து விட்டாலும் அதில் நம் மனம் நிறைவைக் காண்பதில்லை.

நிறைவில்லாத மனம் எதிலும் திருப்தி அடைவதில்லை. சிலருக்கு தேடலில் உடனடி பலன் கிடைக்கிறது, தேடியது ஒன்றும் கிடைக்காததால் சிலர் வாழ்க்கையை நொந்துக் கொள்கிறார்கள். 

நம்முடைய தேடலின் பொருள் நமக்கு புரிந்தால், வெற்றி அருகில் தான். அர்த்தமற்ற தேடல் வீணானது. 

இருளில் தொலைத்ததை நாம் வெளிச்சத்திலோ, வெளிச்சத்தில் தொலைத்ததை இருளிலோ தேடிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6: 22-29) நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என்று இயேசு மக்கள் கூட்டத்தை பார்த்துச் சொல்கிறார்.

உணவுக்காக மட்டும் தேடிய கூட்டம் தற்காலிக மகிழ்வை தேடியது. அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள் என்று இயேசு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

நம் வாழ்வில் தற்காலிக நிறைவை பெற்றால் போதும் என்ற எண்ண ஓட்டம் அதிகம் இருக்கிறது. எதை? யாரை? தேடுகிறோம் என்பதும் எதற்காக? தேடுகிறோம் என்பதும் மிக மிக முக்கியம்.

நமக்குரியதை நாம் தான் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

தேடினால் கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும். சரியான பாதையில் தேட வேண்டும். அடுத்தவரை போல குறுக்கு வழியில் அல்ல நேரிய வழியில் நமக்கானதை தேடி கண்டுக் கொள்வோம்.

சரியான புரிதலோடு தேட வேண்டியதை தேடினால் அது நம்மை விட்டு மீண்டும் தொலைந்து போகாது.

பழைய நிலைக்கு அல்ல... புதிய நிலைக்கே!



பாஸ்கா காலம் 3ஆம் வாரம்

04.05.2025 - ஞாயிற்றுக் கிழமை

“இயேசு அவரை நோக்கி, கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல என்றார்” - லூக்கா 9:62

திரும்பிப் பார்க்கிறவர் தகுதியுள்ளவர் அல்ல என்ற சொல் துறவற வாழ்வுக்கு மட்டுமல்ல, இல்லற வாழ்வுக்கு பொருந்தும். துறவற நிலை, திருமண நிலை இரண்டும் இறைவனின் பணியை தொடர்ந்து ஆற்றுவதற்கான பணித்தளங்களே. கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்று இயேசுவே கூறியிருக்கிறார். 

இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் என்னும் கலப்பையை பிடித்தவர்கள் திருமணப்பந்தத்தை இறுதிவரை காப்பாற்றிக் கொள்ளமுடியா நிலையில் இருக்கிறார்கள். கோபம், ஆணவம், செருக்கு, தலைக்கணம் மற்றொருவரை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு தடையாக இருக்கிறது. பேசப்பட்ட ஒரு வார்த்தைக்காக விவாகரத்து என்ற நிலைக்கு வந்தவர்களும் உண்டு. கடவுள் கொடுத்த வாழ்வை சிறு பிரச்சினைக்காக அழித்தவர்களும், அழிக்க காரணமாய் இருந்தவர்களும் உண்டு. 

அதேபோல துறவற வாழ்வில், கிறிஸ்து கொடுத்த அழைப்பையும் மேன்மையையும் இழந்தவர்களும் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தகுதியற்றவர்களாய் மாறியதும் உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 21:1-19) இயேசுவின் சீடர்களுக்கும் அதே நிலை தான் ஏற்பட்டது. இயேசுவோடு இருந்தவர்கள், இயேசுவின் இறப்பிற்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எண்ணுகிறார்கள். பேதுரு மற்ற சீடர்களிடம், ‘நான் மீன்பிடிக்கப் போகிறேன்’ என்றார், உடனே மற்ற சீடர்களும் ‘நாங்களும் உம்மோடு வருகிறோம்’ என்று சொல்லி படகில் ஏறினார்கள். சீடர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மறந்து விட்டனர், தாங்கள் சான்று பகர வேண்டும் என்பதை மறுத்து விட்டனர். நற்செய்தி பதிவு செய்கிறது, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு மூன்றாம் முறையாகத் தம் சீடர்களுக்கு தோன்றினார். 

இத்தனை காட்சிகள் கொடுத்தும் அவர்கள் உறுதிப்படவில்லை. முன்னோக்கி செல்ல வேண்டியவர்கள், நிலைதடுமாறி பின்னோக்கி பார்க்க ஆரம்பித்தனர். 

முன்னோக்கி செல்ல வேண்டிய குடும்ப வாழ்க்கை இன்று பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. திருமணத்திலும் துறவறத்திலும் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. 

நம் நிலை என்ன? கலப்பையில் வைத்திருக்கின்ற நமது கை, கடவுளின் பணியை நிறைவு செய்கின்றவரை எடுக்கப்படாமல் இருக்கின்றதா? என்பதை சிந்திப்போம். 

பேதுரு தடுமாறினவர் தான், ஆனால் மீண்டும் அழைப்புக் கொடுக்கப்பட்ட போது அழைப்பில் உறுதியாய் இருந்தார்.

என் ஆடுகளை பேணி வளர் என்ற சொல்லுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார் என்பதை இன்றைய முதல் வாசகம் தெளிவுப்படுத்துகிறது. இயேசுவைக் குறித்து அறிவிக்க கூடாது என்று சொல்லப்பட்ட போதிலும் துணிச்சலோடு இயேசுவை பற்றி அறிவித்தார்கள்.

பெற்றுக் கொண்ட அழைப்புக்கு சான்று பகர்ந்தார்கள்.

நாமும் அழைப்பின் மேன்மையை அழித்துவிடாமல்\இழந்து விடாமல் காப்போம்.


நம்பிக்கைக் கொள்...


புனித பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள் விழா

பாஸ்கா காலம் 2ஆம் வாரம்

03.05.2025 - சனிக் கிழமை 

ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்; அவர் உனக்குத் துணை செய்வார். உன் வழிகளைச் சீர்படுத்து; அவரிடம் நம்பிக்கை கொள் - சீராக்கின் ஞானம் 2:6

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:6-14) வழியும் வாழ்வும் உண்மையுமான இயேசுவை அவருடைய சீடர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவரையே கண்டு கொள்ளாத போது அவருக்குள் இருப்பவரை (தந்தையை) எப்படி அவர்களால் கண்டு கொள்ள முடியும்?

தந்தையை காட்டும்படியாக பிலிப்பு இயேசுவிடம் கேட்கிறார். இயேசுவிடம் இருந்தும் இயேசுவையும் அவருக்குள் இருப்பவரையும் அடையாளம் காண தவறிவிட்டார்கள்.

தந்தை தனக்குள் இருந்து செயலாற்றுவதை இயேசு தெளிவுப்படுத்துகிறார். 

நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.

தன் சீடர்களின் நம்பிக்கை குறைவின் உச்சக் கட்டம் தான் இயேசுவை இந்த வார்த்தை பேச வைத்து விட்டது.

நம்பிக்கை இரண்டு வகையில் வெளிப்படுத்தப்படும், 1. சொற்களின் வாயிலாக 2. செயல்களின் வாயிலாக.

இயேசுவின் வார்த்தையையும், செயல்களையும் நம்பாத கூட்டம் தான் இயேசுவோடு இருந்ததா? என்ற கேள்வி எழுகிறது.

நம்பிக்கை ஒன்று இருந்தால் எதிரியுடன் கூட பல மைல் தூரம் நடக்கலாம். நம்பிக்கை எளிதாக வந்து விடுவதில்லை. நம்பிக்கை குறைவு தான் நம்மை நகர விடுவதில்லை.

நட்சத்திரங்களை நாம் பார்க்க முடியவில்லை என்பதற்காக நட்சத்திரம் இல்லை என்று சொல்ல முடியாது. நம்பித்தான் ஆக வேண்டும்.

மனிதர்களில் நயவஞ்சகர்கள், துரோகிகள், கோபக்காரர்கள், ஆணவக்காரர்கள், அன்பானவர்கள், ஆறுதல் தருபவர்கள், வளர்ச்சி பாதைக்கு வழிவகுப்பவர்கள் என பலவகை உண்டு.

அவர்களில் இருப்பதை கண்டுக் கொள்ள முதலில் நாம் அவர்களை நம்ப வேண்டும்.

நம்பிக்கையில்லா ஒவ்வொரு நகர்வும் பெட்ரோல் இல்லாத வண்டிக்கு சமம். எப்போது நிற்கும் என்பது யாருக்கும் தெரியாது.

எல்லா மனிதர்களிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு. சில வேளைகளில் நாம் கொடுக்கும் நம்பிக்கை/நாம் வைக்கும் நம்பிக்கை குறையை கூட நிறையாய் மாற்றும்.

நம்பிக்கையோடு பயணிப்போம்....

உணவு உறவை பலப்படுத்தும்...


பாஸ்கா காலம் 2ஆம் வாரம்

02.05.2025 - வெள்ளிக் கிழமை 

இங்கே என் ஆசியால் உணவுப் பொருள் தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்; அதனை ஏழைகள் உண்டு நிறைவு பெறுமாறு செய்வேன் - திருப்பாடல்கள் 132:15

உணவு இல்லாமல் உறங்கச் செல்லும் மனிதர்கள் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள். சில நபர்களின் வீட்டில் அடுப்பு எரிவது அபூர்வம் தான். சிலர் தங்கள் கஷ்டத்தை வெளியே காட்டிக் கொள்வது இல்லை. 

தன் நிலை கண்டு பிறர் எள்ளி நகையாடி விடக் கூடாது என்பதற்காக தனக்குள்ள கஷ்டத்தை தனக்குள்ளே வைத்துக் கொள்கிறார்கள்.

சில பெற்றோர் தங்களின் வயதான காலத்தில் உணவிற்காக ஒவ்வொரு பிள்ளைகளின் வீடாக ஏறி இறங்குகிறார்கள். உணவு பசியாற்றுவது மட்டுமல்ல உறவை வளர்ப்பது. 

முற்காலத்தில் வீடுகளின் முன் இருந்த திண்ணை நமக்கு சுட்டிக் காட்டிய பாடம் உறவு தான். வழிபோக்கருக்காக இரவு சோற்றுப் பானையில் சோறு இருக்கும், காலையில் தான் பானை கழுவப்படும்.

ஆனால் இன்று சொந்த தாய் தந்தைக்கே உணவு கொடுக்காத உறவுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:1-15) உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டு உணவு கொடுக்கிறார்.

இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.

இவர்கள் அனைவருக்கும் எப்படி கொடுக்க இயலும் என்று தடை போட, மற்றொரு சீடரோ அங்கிருந்த சிறுவனை முன்னிறுத்திகிறார். " இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்ற தயக்கமும் அவரிடம் இருந்தது.

ஒருவர் தடையாக இருந்தார், ஒருவர் தயக்கத்தோடு இருந்தார். 

இயேசுவோ, மக்கள் மீது பரிவுக் கொண்டிருந்தார். எனவே மக்களை அமரச் செய்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அப்பத்தை அனைவருக்கும் பகிர்ந்துக் கொடுத்தார்.

இயேசுவின் பார்வையில் உறவும் முக்கியம் உணர்வும் முக்கியம், அதற்கு ஒரு கருவி தான் உணவு.

ஒவ்வொரு திருப்பலியிலும் இயேசு தன்னை பகிர்ந்துக் கொடுக்கிறார். ஒரே குடும்பமாக நாமும் இவ்விருந்தில் பங்கெடுக்கிறோம்.

உணவு உடலுக்கு மட்டுமல்ல உறவுக்கும் பலம் கொடுக்கும். தேவையில் இருப்போருக்கு தேவையானதை செய்வோம். உறவு பாராட்டுவோம். அதன் வழியாக இயேசுவின் பரிவிரக்கச் செயல்களில் பங்கெடுப்போம்..

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...