பொதுக்காலம் 11ஆம் வாரம்
19.06.2025 - வியாழக்கிழமை
மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்காக எப்படி மன்றாடமுடியும்? - சீராக்கின் ஞானம் 28:4
ஒரு மனிதன் தவற, மற்றொரு மனிதன் அவனை மன்னிக்கும் போது மன்னித்தவன் புனிதன் ஆகிறான். மன்னிப்பு பெற்றவன் மனிதனாக திருந்தி வாழும் வாய்ப்பு பெறுகிறான்.
மன்னிப்பு என்னும் உயரிய மருந்து எல்லோருக்கும் விலையேற பெற்றதாக தெரியாது. வாழ்க்கையில் தவறு செய்து, அடிபட்டு, இனி வேறு வழியில்லை என்று திருந்தி வரும் மனிதனை நம்பி அவரை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் ஒரு மனிதரை கண்டவர் அடையும் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. அந்த இடத்தில் மன்னிப்பு உயரிய ஆற்றல் பெற்றது.
எல்லாரும் தவறக் கூடியவர்கள் தான். ஆனால் தவறுக்கு வருந்தும் மனிதருக்கு மன்னிப்பு என்னும் மருந்து கொடுக்கப்பட வேண்டும். மன்னிப்பிற்காக காத்திருக்கும் மனிதருக்கு சரியான நேரத்தில் மன்னிப்பு கொடுக்கப்படவில்லையென்றால் அவர் இன்னும் தீயவராக மாறிவிடுவார்.
காலம் தவறி கொடுக்கப்படும் மருந்து கொடுக்கப்பட்டு பயனில்லாமல் போவது போல, காலம் கடந்து மன்னித்தால் அதனால் ஒரு பயனும் இல்லை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:7-15) இறைவேண்டலும் மன்னிப்பும் இடம் பெறுகிறது.
இறைவேண்டலில் பிதற்ற வேண்டாம், மிகுதியான சொற்கள் இறைவேண்டலுக்கு அவசியம் இல்லை என்கிறார் இயேசு. இறைவேண்டலுக்கு அவசியமான ஒன்று மன்னிப்பு என்னும் பண்பு தான்.
மன்னிக்க மனம் இல்லாதவர் இறைவனிடம் மன்னிப்பு கேட்க தகுதி அற்றவர்.
யாரால் தன்னோடு வாழ்பவரை மன்னிக்க முடிகிறதோ அவரே இறை மன்னிப்புக்கு உரியவர்.
பல மனிதர்கள் இறைவேண்டலில் சிறப்புக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இயல்பான வாழ்க்கையில் இறை மனித ஒன்றிப்புக்கு ஏதும் செய்வதில்லை.
இறைபுகழ்ச்சி சக மனிதரோடு நாம் கொள்ளும் நல்லுறவில் தொடர்கிறது. இறைவன் புகழப்பட வார்த்தை முக்கியம் அல்ல, இறைவார்த்தை வாழ்வாக்கப்படுதலே அவசியம்...
மன்னிப்போடு கூடிய இறைவேண்டல் கேட்கப்படும்.
No comments:
Post a Comment