பொதுக் காலம் 12ஆம் வாரம்
28.06.2024 - வெள்ளிக் கிழமை
"உமது மனம் விரும்புவதை அவர் உமக்குத் தந்தருள்வாராக! உம் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவாராக!" - திருப்பாடல்கள் 20:4
நல்லது நடக்க வேண்டும் என்று தொடர்ந்து எண்ணிக் கொண்டிருந்தால் வாழ்வில் நல்லது நடக்கும். இப்படி ஆகிவிடுமோ அல்லது அப்படி ஆகிவிடுமோ என்று எதிர்மறையாக சிந்திக்க ஆரம்பித்தால் அவை தான் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும்.
நாம் விரும்பியது விரும்பியபடி நம்முடைய வாழ்க்கையில் நடக்கும், அதற்கு நம்பிக்கை அடிப்படையாக இருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 8:1-4) தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்கிறார்.
விரும்புவதால், நம்புவதால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை அந்த நபரிடம் இருந்தது. இயேசுவும் அவரது நம்பிக்கையை கண்டு அவருக்கு நலம் கொடுக்கிறார், குருவிடமும் காட்டச் சொல்கிறார்.
குருவிடம் காட்டச் சொல்வதற்கான காரணம், குரு பரிசோதனை செய்து இவருக்கு தொழுநோய் இல்லை என்று சொன்னால் மட்டுமே இவர் ஊருக்குள், தன்னுடைய வீட்டிற்குள் நுழைய முடியும். அதற்காகத்தான் அவர் குணமானதை குருவிடம் காட்டச் சொல்கிறார் (லேவியர் நூல் 14ஆம் அதிகாரம்).
இயேசு தனக்கு குணமளிக்க வேண்டும் என்று அந்த தொழுநோயாளர் விரும்பினார், தொழுநோயாளருக்கு நலம் கொடுக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். இங்கு விரும்பினதால் நலம் பெற்றுக் கொண்டார் அந்த நபர்.
இயேசுவுக்கு இன்னொரு விருப்பமும் இருந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த நபர், அனைவராலும் கைவிடப்பட்டு, மனித மாண்பை இழந்து இருந்தார். அவரும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் தன் உறவினரோடு இணைக்கப்பட வேண்டும் என்று இயேசு விரும்பியதால் நலம் கொடுக்கிறார்.
நம்முடைய வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டுமென்று நம்முடைய சிந்தனையில் எண்ணிக் கொண்டிருந்தோம் என்றால் நிச்சயம் நாம் விரும்பியபடி நல்லது நம்முடைய வாழ்க்கையில் நடக்கும்.
இங்கு பலர் விரும்புகிறார்கள்; ஆனால் விரும்பியபடி நடக்கும் என்று நம்பிக்கை கொள்வதில்லை.
நம்புவோம்... நல்லதை விரும்புவோம்...
No comments:
Post a Comment