24_06

போலியான செயல்கள்... போலியான வாழ்க்கை...

 


பொதுக் காலம் 11ஆம் வாரம்

19.06.2024 - புதன் கிழமை

"நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்" - மத்தேயு 7:19,20

ஏமாற்று வார்த்தைகள், ஏமாற்று செயல்கள் இவைகள் தான் மனிதரை கவர்ந்து இழுக்கிறது. உண்மையை உரக்கச் சொல்பவர்கள் நிராகரிக்கப்படுவதும் பொய்யை அழுத்தமாக பேசுபவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது தான் உலகின் எதார்த்தமாக இருக்கிறது. காரணம், போலிகளை நம்புவோர் அதிகம்.

போலி நபர்கள், போலியான வார்த்தைகள், போலியான செயல்கள் நிலைத்திருக்காது என்பதை அறிந்திருந்தாலும் போலித்தனத்தை தான் நாம் தலையில் தூக்கி வைக்கிறோம். மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று செய்யக்கூடியவை சொல்லக்கூடியவை மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அந்த கவர்ச்சியினால் தூண்டப்பட்டவர்கள் போலிகளிடம் மாட்டிக் கொள்கிறார்கள். 

தொடக்கம் போலியானால் முடிவும் போலி தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:1-6,16-18) தர்மம், இறைவேண்டல், நோன்பு ஆகியவை  பற்றி இயேசு எடுத்துச் சொல்கிறார். இவை மூன்றும் நம்மையும் கடவுளையும் இணைப்பதாக இருக்க வேண்டும். நமக்கான கைம்மாறை மனிதரிடமிருந்து பெற்றுக் கொண்டால், கடவுளிடமிருந்து நமக்கு கைம்மாறு கிடைக்காது.

கடவுளை திருப்திபடுத்த எதுவும் இங்கு செய்யப்படுவதில்லை. மனிதர்களை திருப்திபடுத்தவே, மனிதர்களின் கவனத்தை ஈர்க்கவே எல்லாம் செய்யப்படுகிறது.

ஆடம்பரம், பகட்டான வாழ்க்கை, ஆணவம் நிறைந்த சொற்கள் இவைகள் தான் மனிதரிடம் மேலோங்கி இருக்கிறது. இறைவேண்டலின் தாழ்ச்சியோ, நோன்பின் மகத்துவமோ, தர்மத்தின் ஆற்றலோ நம்மால் உணரப் படுவதில்லை.

மிகுதியான வார்த்தைகளை அடுக்கிக் கொண்டு போவது தான் இறைவேண்டல் என்ற பார்வையும், செய்யும் தர்மத்தை அடிக்கடி சொல்லிக் காட்டுவதும், நோன்பு இருப்பதாக தம்மை பெருமைப்படுத்தி கொள்வதும் உண்மையான செயல்பாடுகள் அல்ல. போலியான வாழ்க்கை முறை தான் இவைகள் என்பதை உணர மறுக்கின்றோம். 

இறை அச்சம் இருந்தால் போலித்தனம் நம்மை விட்டு தூர போகும். 

நிலையில்லா வாழ்வில் நிலையற்ற செயல்களை செய்யாமல், நிறை வாழ்வுக்கான செயல்களை செய்து அதன் வழியாக கைம்மாறை பெறுவோம்.

மக்கள் பார்க்க அறச் செயல் செய்யாமல், மறைவாய் நல்லதை செய்வோம். நல்லவர்களாய் வாழ்வோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...