24_09

தீமைக்கு பதில் நன்மை!!!


பொதுக் காலம் 23ஆம் வாரம்

12.09.2024 - வியாழக் கிழமை

"நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்" - தொடக்க நூல் 50:20

நமக்கு தீமை செய்தவர்களுக்கு நாம் கொடுக்கக்கூடிய அதிகபட்ச தண்டனை கோபம், எரிச்சல், பழிக்கு பழி. நாம் பெற்ற வலியை விட அவர்கள் இரண்டு மடங்கு பெற வேண்டும் என்பதற்காக நாம் செய்யும் இழிநிலை காரியங்களும் அதன் விளைவுகளும் அதில் அடங்கும்.

மன்னிப்பு, மறத்தல் இந்த வார்த்தை எல்லாம் அகராதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகின்றன. நான் அனுபவித்த கொடுமை அவனு(ளு)ம் அனுபவிக்க வேண்டும். 

இரக்கம் காட்டுவதால் என்ன பெரிதாக சாதித்து விடப் போகிறோம்? என்ற எண்ணம் பிறர் செய்ய தவறுகளை மன்னிக்க முடியா மனநிலையை நமக்கு கொடுத்து விடுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:27-38) "உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பி காட்டுங்கள், உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்ள விரும்புபவர் உங்கள் அங்கியையும் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள், அன்பு, நன்மை செய்வோருக்கு அதை திரும்ப செய்ய வேண்டாம். பகைவருக்கு நன்மை செய்யுங்கள், தீர்ப்பளிக்க வேண்டாம், மற்றவர்களை கண்டனம் செய்ய வேண்டாம், மன்னியுங்கள், கொடுங்கள் என்று இயேசு சொல்கிறார். 

போதனை எல்லாம் வாழ்வாக்கப்பட்டால் இங்கு பிரச்சனை ஏது? 

ஒருவர் கன்னத்தில் நம்மை அறைகிறார் என்றால், சொல்ல முடியாத அளவுக்கு கோபம் நமக்குள் எழும். ஆனால் இயேசு சொல்லக்கூடிய பதில் மறு கன்னத்தையும் திருப்பி காட்டுங்கள். (இது திருப்பி அடித்தலுக்கு சமம்).

இதிலும் ஒரு யுக்தி இருக்கிறது. உரோமையர் 12:20,21இல், "உன் எதிரி பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடு இருந்தால் அவன் குடிக்கக் கொடு; இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய். தீமை உங்களை வெல்ல விடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!" என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 

நமக்கு எதிராக தீங்கு செய்பவர்களுக்கு நாம் செய்யக்கூடிய நன்மையான காரியம் தான் அவர்களுக்கான பாடம் (திருப்பி அறைதல்).

தீமை செய்பவருக்கு தீமையை செய்து கொண்டிருந்தால் நாம் நன்மையை காண்பது எப்போது? 

'இழப்பதற்கு எதுவும் இல்லை' என்று சொல்வார்கள், நாம் நம்மிடம் இருக்கக்கூடிய நன்மைத் தனத்தை இழக்காமல் இருப்போம். 

ஒருவர் செய்த தீமைக்கு பதில் நன்மை செய்வோம்.

தந்தையை போல இரக்கம் உள்ளவராய் வாழ்வோம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...