24_09

நல்லது செய்ய புறப்படு...


பொதுக் காலம் 25ஆம் வாரம்

25.09.2024 - புதன் கிழமை

"தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்" - திருப்பாடல்கள் 37:27

பயணம் செய்ய எல்லோரும் விரும்புவோம். ஆனால் பயணத்தில் சில தடங்கல்கள் வந்தால் கவலை உண்டாகும்.

மண்ணக வாழ்வு விண்ணக வாழ்வை நோக்கிய ஒரு பயணம். தடுமாற்றங்கள் தடைகள் எல்லாவற்றையும் கடந்து உண்மையை நோக்கிய ஒளியை நோக்கிய பயணம். பள்ளம் என்று தெரிந்தும் யாரும் பள்ளத்தில் விழுவதில்லை, ஆனால் இருளென்று தெரிந்து இருளான வாழ்வை, இருளான பாதையை நாம் தேர்ந்தெடுக்கிறோம். 

தீய வாழ்வால், பாதைகள் தடுமாற கூடாது. பயணங்கள் தடைபட கூடாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9:1-6) இயேசு தன்னுடைய சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்து பணி செய்ய அனுப்புகிறார். இயேசுவின் சீடர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். அந்தப் பயணத்திற்கு சில பரிந்துரைகள் வைக்கப்படுகிறது. உணவு, பை, பணம், கைத்தடி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டாம், அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும். நற்செய்தியை அறிவித்து நோயாளிகளை குணமாக்குங்கள். 

இந்த பயணத்தில் சீடர்கள் வழியாக தேவையில் இருப்போர் பயனடைகின்றார்கள். நோயுற்றோர் நலம் பெறுகிறார்கள்.

பாதை சரியாய் இருந்தால் பயணம் சரியாய் அமையும். இலக்கு தெளிவாய் இருந்தால் நம் வாழ்க்கை நலமாய் அமையும். 

இயேசு தன்னுடைய சீடர்களுக்கு மேலும் சொல்லக்கூடிய அறிவுரை, 'உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறி விடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'.

நல்லது செய்ய சீடர்கள் பயணம் மேற்கொண்டார்கள். நாம் மண்ணக பயணத்தில் நல்லது செய்ய அழைக்கப்படுகிறோம். நன்மை செய்ய கூடுமாயின் இயன்றவரை முடிந்தவருக்கு நன்மை செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். 

நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும் கூட பரவாயில்லை, மற்றவர்களை நோயாளிகளாக மாற்றாத மனநிலை நமக்குத் தேவை.

ஆதிக்கத்தையும் அடக்கு முறையையும் மற்றவர் மேல் திணிக்காத மனநிலை நமக்குத் தேவை. 

நல்ல செய்தியை, நல்ல வாழ்வை மற்றவருக்கு முன்மாதிரியாக கொடுக்க நாம் அழைக்கப்படுகிறோம். 

நாம் பயணத்தில் நல்லது நடக்க வேண்டும் நல்லவையே நடக்க வேண்டும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...