24_09

படைத்தவரை உள்ளத்தில் நினை...


பொதுக் காலம் 25ஆம்  வாரம்

28.09.2024 - சனிக் கிழமை 

ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் பாடுகளும் துன்பங்களும் உண்டு. அந்த பாடுகள் வருவதற்கு முன் நம்மை படைத்தவரை உள்ளத்தில் நினைக்க வேண்டும். வலிமையோடும் ஆற்றலோடும் இருக்கின்ற போது வரக்கூடிய பாடுகள் வேறு, ஒன்றும் செய்ய இயலா நிலையில் (முதுமை) வரும் பாடுகள் வேறு.

இன்றைய முதல் வாசகம் (சபை உரையாளர் 11:9-12:8) இளமை முதல் கடவுளைத் தேட/படைத்தவரை உள்ளத்தில் நினைக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. 

நாம் மகிழ்ச்சியோடு வாழ்க்கையை நகர்த்தி விடலாம். களிப்பு, கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுதல் என்று மனம் விரும்புவதை செய்துவிடலாம். ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பு வழங்கக் கூடியவர் கடவுள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 

இளமை நலமாய் இருக்க இளமை விரும்புவதெல்லாம் செய்வது நல்லதல்ல, முதுமையும் இனிமையாய் இருக்க வேண்டும் என்றால் இளமை முதல் படைத்தவரை உள்ளத்தில் நினைக்க வேண்டும். படைத்தவரை உள்ளத்தில் நினைக்க வேண்டும் என்பது கடவுளுக்கு உகந்த காரியங்களை செய்ய வேண்டும் என்பது தான் பொருள். 

என்னை யாரும் பார்க்கவில்லை நான் செய்வது யாருக்கும் தெரியாது என்று நாம் தப்பு கணக்கு போட்டு விட முடியாது. 

மறைவாய் உள்ளதை காணும் விண்ணக தந்தை நமக்கு ஏற்ற கைம்மாறு கொடுப்பார். அந்த கைம்மாறு நாம் செய்யும் செயலுக்கு (நல்லதோ/தீயதோ) ஏற்றவாறு அமையும்.

இன்றைய முதல் வாசகம் சபை உரையாளர் 12:3-4 இல், "கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், வீட்டுக் காவலர்(கைகள்) நடுக்கங்கொள்ள, வலியோர்(கால்கள்) தளர்வுறுமுன்னும், அரைப்போர்(பற்கள்) மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர்(கண்கள்) ஒளி இழந்து போகுமுன்னும், தெருச் சந்தடி கேளாவண்ணம் கதவுகள்(காதுகள்) அடைத்துக் கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர்(குரல்வளை நரம்புகள்) அனைவரும் ஓய்ந்து போகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை."

சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் உடலிலுள்ள உறுப்புகள் அதன் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் முன் நம்மை படைத்தவரை நாம் உள்ளத்தில் நினைக்க வேண்டும்.

கடவுள் பயம், கடவுள் நம்பிக்கை இல்லாத வாழ்க்கையாக இக்காலம் மாறிப் போய்விட்டது. ஒரு பக்கம் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றி வேலைகள், மறுபக்கம் கடவுள் இல்லவே இல்லை என்ற நிராகரிப்பு.

உரு தந்து, சுவாசிக்க மூச்சு தந்து நம்மை இயக்கியவர் அவர். அவரின்றி ஒரு அணுவும் அசையாது. 

நம்மைப் படைத்தவரை, நம்மை உருவாக்கியவரை நம் உள்ளத்தில் நினைப்போம். 

கடவுளை உள்ளத்தில் நினைக்கின்ற போது கடவுளின் சாயலில் உள்ள மனிதரையும் எண்ணிப் பார்ப்போம். 

கடவுளுக்குரியதை கடவுளுக்கும் மனிதருக்கு உரியதை மனிதருக்கும் கொடுப்போம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...