24_09

மறுதலிப்பு அல்ல மறைமுக வாழ்த்து...


பொதுக் காலம் 25ஆம் வாரம்

24.09.2024 - செவ்வாய்க் கிழமை 

"அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என வாழ்த்துவார்கள்; அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான்" - நீதிமொழிகள் 31:28 

நம் அன்புக்குரியவர்களின் மறுப்பும் மறுதலிப்பும் நம்மை காயப்படுத்தும். சில நபர்களின் மறுதலிப்பு நம்மை வாழ்க்கையில் உயர செய்யும். 

நம் மனம் பலவீனமானது. உயரத்தில் இருக்கும் போது தாழ்வை நோக்கி பயமும், தாழ்வில் இருக்கும் போது நம் வாழ்வு எப்பொழுது உயரும் என்ற கவலையும் நம்மை குடிகொள்ளும்.

யார் மறுத்தாலும் யார் மறுதலித்தாலும் நான் உயர்வதை யாராலும் தடுக்க முடியாது என்ற நம்பிக்கை இருந்தால், தடைகள் ஆயிரம் வந்தாலும் தடுமாற்றும் வாழ்வில் இல்லை. சில மனிதர்களின் சாதாரண வார்த்தைகள் பல மனிதர்களை அளவுக்கதிகமாக காயப்படுத்தி இருக்கிறது. 

சில வார்த்தைகள் மீண்டும் வாழ்வில் எழ முடியாத அளவுக்கு அடியை கொடுக்கிறது. யார் சொன்னார்கள்? எங்கு சொன்னார்கள்? என்று சில வேளைகளில் நடந்தது மறந்து விடுகின்றன. ஆனால் அவை ஏற்படுத்தி வடுக்கள் ஆறாமல் குத்திக் கொண்டே இருக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 8:19-21) உம் தாயும் சகோதரர்களும் உம்மை பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள் என்று இயேசுவுக்கு சொல்லப்பட்ட போது, இயேசு அவர்களைப் பார்த்து 'இறைவார்த்தையை கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரரும் ஆவார்கள்' என்கிறார்.

இந்த வார்த்தை அன்னை மரியாவுக்கு வலியை ஏற்படுத்தியிருக்குமா? நிச்சயம் இந்த வார்த்தை மறுதலிப்பை குறிப்பது போல் இருக்கிறது. இயேசுவால் தாயும் சகோதரர்களும் நிராகரிப்பு செய்யப்படுவது போல இருக்கிறது. 

உண்மையில் இயேசு தன் தாயையும் சகோதரர்களின் நிராகரிப்பு செய்யவில்லை, மறுதலிக்கவில்லை. மாறாக மறைமுக வாழ்த்தை கொடுக்கிறார். 'நான் ஆண்டவரின் அடிமை உம் வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்' என்று தன்னை இறைத்திருவுளத்திற்கு அர்ப்பணித்த அன்னை மரியா இறைவார்த்தையின்படி நடந்தவர் தானே. 

இந்த இடத்தில் அன்னை மரியா இறைவார்த்தைக்கு செவிமடுத்தவர் என்பது மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை மறுதலித்தாலும் நாம் நம்முடைய கடமையிலிருந்து தவறி விடக்கூடாது. சில வேளைகளில் மறுதலிப்பு நமக்கு முன் வைக்கப்படும் நம்பிக்கைகான சோதனை.

மனிதர்கள் மறுத்தாலும் மறுதலித்தாலும் நாம் நீதியோடும் நேர்மையோடும் இறைதிருவுளத்தை நிறைவேற்றுகின்ற போது நாம் கடவுள் முன் தலைநிமிர்ந்து நிற்க முடியும். 

நமக்கான கைம்மாறு அவரிடம் இருந்து நமக்கு கிடைக்கும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...