12.05.2024 - ஞாயிற்றுக் கிழமை
“நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” - யோவான் 14:12
அரும் அடையாளங்களை (வல்ல செயல்களை) யாரும் செய்ய முடியும். யாரெல்லாம் இயேசுவில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வல்ல செயல்களை செய்வர். வல்ல செயல்கள் எல்லாம் நல்ல செயல்களே!
ஒருவருக்கு நாம் செய்யும் அனைத்து நல்ல செயல்களும் வல்ல செயல்களே. இயேசு தனது பணிவாழ்வில் சென்ற இடமெல்லாம் நன்மையே செய்து கொண்டே சென்றார் என்று விவிலியம் நமக்கு போதிக்கிறது. அவர் நம்பிக்கை தந்தையின்பால் இருந்தது. நம் நம்பிக்கை அவர் வழியாக தந்தையை நோக்கியதாக இருக்க வேண்டும்.
இழக்க விரும்பாத பணிவாழ்வு இரக்கம் நிறைந்த வாழ்வாக இருக்க முடியாது. இயேசு தந்தையின் மீது கொண்டிருந்த அன்பும் நம்பிக்கையும் அவரை பஞ்சு மெத்தையின் மீது வைத்து அவரை தாங்கவில்லை. மாறாக இயேசு பல இழப்புகளை சந்தித்தார், எதிர்ப்புக்களை கண்டார், ஏளனங்களை சுமந்தார். ஆனால் நம்பிக்கையில் உறுதி கொண்டார். அவர் தந்தையின் மீது கொண்ட நம்பிக்கை அவரை தளர்வு இல்லாமல் பணி செய்ய வைத்தது.
செய்யும் வேலைக்கான பலன் செய்த உடனே கிடைப்பதில்லை. சிறிது களைப்பு, இடையூறு, வெறுப்பு, ஏமாற்றம் இவைகளையெல்லாம் கடந்த பிறகு தான் கிடைக்கும். நம்பிக்கையோடு கூடிய காத்திருத்தல் மிகுந்த கனிகளை கொடுக்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 16: 15-20) நம்பிக்கை கொண்டோர் செய்யும் அரும் அடையாளங்களை பட்டியலிடுகிறார்.
என் பெயரால் பேய்களை ஓட்டுவர்
புதிய மொழிகளை பேசுவர்
பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர்
கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்கு தீங்கு இழைக்காது
குணமாக்குவர்
இத்தகைய செயல்களை யாரெல்லாம் என்னில் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்கள் செய்வார்கள் என்கிறார் இயேசு.
இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு இவற்றையெல்லாம் இயேசுவின் திருத்தூதர்களால் செய்ய முடிந்தது. அவர்கள் நலமளித்தனர், அநீதிகளை சுட்டிக் காட்டினர், தப்பறைகளை உடைத்தனர்…
இயேசுவின் விண்ணேற்றம் என்பது கடப்பு நிலை. இயல்பான நிலையிலிருந்து முன்னோக்கி செல்வது. தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற உலகிற்கு மனிதராக வந்தவர் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி அதை நமக்கு விட்டு சென்றிருக்கிறார்.
நாமும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற, இந்த கடப்பு நிலை நோக்கி பயணிக்க, உலகிலிருந்து விண்ணகம் நோக்கி செல்வதற்கான பயணத்தில் இருக்கிறோம்.
No comments:
Post a Comment