24_05

உண்மையை அறிதலே கடவுளை காணுதலின் அடையாளம்…

07.05.2024 - செவ்வாய்க் கிழமை

“நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்; தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக்கொள்ளார்” - தோபித்து 13:6

உண்மை, நீதி ஆகியவற்றை ஒவ்வொருவருக்கும் ஏற்றார்போல நாம் மாற்றிவிடுகிறோம். எனக்கு பிடித்தவர்களுக்கு ஒரு நீதி. எனக்கு பிடிக்காதவர்கள் உண்மையை சொன்னாலும் அது என் காதுக்கு நன்மையாக தெரியாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:5-11) தனக்கு பின் வருபவராக இருக்கும் தூய ஆவியார் குறித்து இயேசு சான்று பகர்கிறார். தூய ஆவியார் என்னும் துணையாளரை இயேசு நமக்கு தருகிறார். உலகினரின் பார்வையில் இருக்கும் தவறான கருத்துகளை சுட்டிக் காட்டுபவராக தூய ஆவியார் இருக்கிறார்.

பாவம், நீதி, தீர்ப்பு பற்றிய உலகினரின் பார்வை வேறு. கடவுளின் பார்வை வேறு. நான் செய்வது தான் சரி, நான் தான் நீதிமான், நான் தான் நீதிபதி என்ற மனநிலை நம்மில் மேலோங்கி இருக்கிறது. 

உண்மை நம்மில் தங்கவில்லை என்றால் உண்மையானவரை நாம் கண்டுக் கொள்ளமுடியாது. என் பார்வையில் சரி என்ற மனநிலை நீங்கி சரியானதை சரியென்றும் தவறானதை தவறென்றும் ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் நோக்கி நாம் நகர வேண்டும்.

லூக்கா நற்செய்தி 12:10 இவ்வாறு சொல்கிறது, “மானிடமகனுக்கு எதிராய் ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெற மாட்டார்”.

தூய ஆவியாருக்கு எதிரான பழிப்புரை என்பது உண்மையை அறிந்திருந்தும் அதை திரித்து பொய்யாக கூறுவது, நம் உடல் தூய ஆவியார் தங்கும் கோவில் என்று தெரிந்திருந்தும் அதை மாசுப்படுத்துவது, தூய ஆவியாரின் கனிகளையும் வரங்களையும் பெற்றிருந்தும் அதை புறக்கணிப்பது.

நாம் உண்மையின் வழியாக கடவுளை அறிந்துக் கொள்வோம். 

1திமொத்தேயு 2:4 “எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்”. 


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...