24_03

இயேசுவின் செயல்களே அவருக்கு சான்று…


14.03.2024 - வியாழக் கிழமை

“மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதை விட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்” - 1யோவான் 5:9

ஒருவர் நல்லவர் என்பதற்கு அவருடைய நற்சொற்களும் நற்செயல்களும் சான்று பகரும். அதே போல ஒருவர் தீயவர் என்பதை அவருடைய தீய சொற்களும், செயல்களும் வெளிக்காட்டிவிடும். தனக்கு பிடிக்காதவர்கள் நல்லதே செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பாங்கு தேவை. 

தங்களை நல்லவர் போல காட்டிக் கொள்ளும் சிலரும் இங்கு இருக்கிறார்கள். நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது நல்லவர்கள் போல தங்களை காட்டிக் கொள்கிறவர்களை அல்ல, நல்லவற்றை செய்கிறவர்களை. சில நல்லவர்கள் தங்களுடைய வாழ்க்கையை இருளை (தீயவற்றை) நோக்கி திருப்புவதற்கு சில நல்லவர்களின் மௌனமும் காரணம். தீமை செய்வோருக்கு அஞ்சுவோர் இங்கு பலர் உண்டு. தீமைக்கு சான்று பகர்வோரும் உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 5:31-47) இயேசுவை ஏற்றுக் கொள்ள தயங்குகிறது யூதர்கள் கூட்டம். மனிதர் தரும் சான்று தனக்கு தேவையில்லை என்றாலும் திருமுழுக்கு யோவான் தன்னைக் குறித்து சான்று பகர்ந்ததையும் இயேசு நினைவு கூர்கிறார். (லூக்கா 3:16 - “யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்”).

எல்லாவற்றிற்கும் மேலாக தந்தை கடவுளும் சான்று பகர்ந்திருக்கிறார் (மாற்கு 1:11 - “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்”). தனது செயல்களின் வாயிலாக தன் தந்தையை எல்லோருக்கும் எடுத்தியம்பினார் இயேசு. 

ஆணவமிக்ககோர் ஒருபோதும் இறங்கி வருவதில்லை, அடுத்தவருக்கு செவிசாய்ப்பதில்லை என்பதற்கேற்ப யூதர்கள் அவரது செயல்களையும் அவரையும் வெறுத்தனர். நீங்கள் தந்தையின் வார்த்தையை நம்பாதவர்கள், மறைநூலை ஏற்றுக் கொள்ளாதவர்கள், இறையன்பு அற்றவர்கள், மோசேயின் வார்த்தையை நம்பாதவர்கள், பின் எப்படி என்னை நம்புவீர்கள், என் வார்த்தையை நம்புவீர்கள் என்கிறார் இயேசு. இத்தனை சான்றுகள் இருந்தும் நம்பிக்கை குறைவு தான் உள்ளது.

நாமும் இவர்களை போல சான்று இருந்தும், அடையாளங்களை பெற்றிருந்தும் நம்ப மறுக்கிறோம், தயங்குகிறோம். இயேசுவின் செயல்களை இன்றும் வாழ்ந்துக் காட்டும் மனிதர்களை ஏற்றுக் கொள்ளாத போது, நாம் இயேசுவையே ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

‘நீங்கள் உங்கள் பேச்சுகளின் வாயிலாக, முன்மாதிரியான வாழ்க்கை வாயிலாக சான்று பகரமுடியும்’ என்பார் தாமஸ் மேன்சன்.

இயேசுவின் செயல்கள் இயேசுவுக்கு சான்று அளிப்பது போல நாம் வாழக் கூடிய வாழ்க்கை முறை நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்கு சான்று பகர வேண்டும். இறைவேண்டல் செய்வதால் மட்டும் ஒருவரின் வாழ்வு நிறைவு பெறாது. இறைவேண்டல் செயல்களாக மாறி சான்று பகர வேண்டும்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...