20.03.2024 - புதன் கிழமை
“நான் என் தந்தையின் அருமை மைந்தனாய், தாய்க்குச் செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்” - நீதிமொழிகள் 4:3
தந்தை மகன் உறவு என்பது குழந்தைப் பருவத்தில் அவ்வளவு இணக்கமாக இருக்கும். மகனின் குழந்தை பருவத்தில், தந்தை சிறந்த தலைவராக தெரிவார். வளர வளர உறவில் விரிசல் ஏற்படும். ஹீரோவாக தெரிந்த தந்தை எதிரியாக தெரிவார். மகனுக்கும் தந்தைக்கும் அவ்வளவாக உரையாடல், அன்பு, தகவல் பரிமாற்றங்கள் இருக்காது. (ஒரு சிலரை தவிர)
உளவியல் சொல்கிறது, மகளுக்கு தந்தையின்மீதும், மகனுக்கு தாயின்மீதும் அளவுக்கதிகமாக அன்பு இருக்கும். ஒருசில இடங்களில் விதிவிலக்கு உண்டு. தந்தையிடம் கேட்க நினைப்பதெல்லாம் தாயின் வழியாகவே பரிந்துரைக்கப்படும். மகன் நேரிடையாக தந்தையிடம் எதையும் கேட்பதில்லை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 8:31-42) தந்தை மகன் உறவில் பிரச்சினை இல்லை. தந்தையை மகன் பிரதிபலிக்கிறார். ஆனால் தந்தையை ஏற்றுக் கொள்வது போல, மகனை ஏற்றுக் கொள்வதில் தான் தயக்கம் இருக்கிறது. யூதர்கள் இயேசுவுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள்..
தந்தையிடமிருந்து நான் வந்தேன், தந்தையின் வார்த்தை என் வழியாக உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்று இயேசு சொல்கிறார். என் வார்த்தைகளை நீங்கள் நம்பவில்லையென்றால் என்னை அனுப்பிய தந்தையையும் நீங்கள் நம்பவில்லை என்கிறார் இயேசு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு ஒரு உருவகத்தை கையாளுகிறார், “பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக சொல்கிறேன். வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு”. அடிமை - பாவம் செய்தவர்கள் (கடவுளின் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாதவர்கள்) விடுதலை - மகன் (வார்த்தையை நம்புவோருக்கு விடுதலை வழங்குபவர் இயேசு). இந்த நம்புதல் என்ற வார்த்தை என்பது நம்புகிறேன் என்று சொல்வதில் வெளிப்படுவதல்ல, மாறாக நம்பிக்கை என்ற செயலில் வெளிப்படுவதே (கடவுளின் வார்த்தையின்படி நடப்பது, இருப்பது).
கடவுளை ஏற்றுக் கொள்கிறேன், நம்புகிறேன் என்றால் அவருடைய பிள்ளையாக மாற வேண்டும். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதே இயேசுவின் பணிவாழ்வு. அவர் தனது பணியை தந்தை விரும்பும் வகையில் செய்து, தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவர் ஆனார்.
நாமும் நம்பிக்கை நிறைந்த செயல்களால் கடவுளுக்கு நெருக்கமானவர்களாவோம்… அவரின் பிள்ளைகளாவோம்…
No comments:
Post a Comment