24_03

சதித்திட்டம் தீட்டும் சதிகாரர்கள்


23.03.2024 - சனிக் கிழமை

“சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக் கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்” - நீதிமொழிகள் 12:20

மற்றவர்களை எப்படி அழிக்கலாம், மற்றவர்கள் நற்பெயரை எப்படி கெடுக்கலாம் என்று சதித்திட்டம் தீட்டப்படுகிறது. சிலவற்றை சதிகாரர்கள் சாதித்துவிடுகிறார்கள். அதன்பொருட்டு பெருமிதம் அடைகிறார்கள். நான்கு பேர் இணைந்து 5ஆவது நபருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டும்போது அந்த நால்வரும் மனதில் நினைக்க வேண்டியது, இன்று அடுத்தவர் வாழ்வை கெடுத்த நம் வாழ்வு, நாளை என்னவாகும் என்று?

கடவுள் கொடுத்த வாழ்வு அழகனாது. அதை மாசுப்படுத்திவிட்டு எதை நாம் பெரியதாக சாதிக்க போகிறோம்? நம் வாழ்வை எடுப்பதற்கே நமக்கு உரிமையில்லாதபோது, பிறர் வாழ்வை கெடுப்பதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 11:45-57) “இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்து கொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்? இவனை இப்படியே விட்டு விட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர்…” என்று தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தை கூட்டி இயேசுவுக்கு எதிராக பேசுகிறார்கள். இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்று தலைமைக் குருவாய் இருந்த கயபா சொல்கிறார். இவை இயேசுவுக்கு எதிரான சதித்திட்டம்.

இனத்தை, மொழியை, நாட்டை, கட்சியை காக்க நான் தியாகம் செய்வேன் என்று யாரும் முன்வருவதில்லை, ஆனால் அப்பாவி மக்களை பலியாக்கி அதன் மூலம் குளிர்காயும் சதிகாரக் கூட்டம் அன்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது.

சொல்லால், செயலால் அடுத்தவரை அழிப்பதில் காட்டும் ஆர்வத்தை, அடுத்தவர் வாழ்வுநிலை உயர்வதில் காட்டுவோம். சதிகாரர்களாக அல்ல மற்றவர்களின் தேவையை சந்திப்பவர்களாக மாறுவோம்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...