24_03

பணிவில் தொடங்குகிறது தலைமைத்துவம்


28.03.2024 - பெரிய வியாழன்

“உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்” - மத்தேயு 23:11

தலைமைத்துவம் என்பது தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கு பணிசெய்வதற்கே. பணிசெய்வதற்காக வருபவர்கள் தங்களுக்கு ஓட்டுக் கிடைக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவோ பணிவான, தாழ்வான பணிகளை சில நாள்களுக்கு செய்வர். பார்ப்பவர்களுக்கும் தெரியும், உடன் பயணிப்பவர்களுக்கும் தெரியும் இது நடிப்பு என்று. காரணம் தேர்தல் நேரத்தில் மட்டும் இத்தகைய தலைமைத்துவச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஓட்டுக் கிடைப்பதற்கான எதை சொன்னாலும் செய்ய தலைவர்கள் முன்வருவார்கள், வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும், மற்றவர்களை பற்றி அவதூறு சொல்லப்படும், உங்கள் நலனுக்காகவே நாங்கள் என்று சொல்லப்படும்… இவையெல்லாம் ஒரு சில மாதங்களுக்கே. மனிதர்களும் தங்களுக்கு தற்காலிக ஆதாயம் கிடைப்பதால் பொய் வாக்குறுதிகளை நம்பி நம்பி ஏமாந்துப் போகிறார்கள்.

இது தலைமைத்துவப் பண்பா? நிச்சயமாக இது தலைமைத்துவ பண்பும் அல்ல… நல்ல தலைவரின் பண்புமல்ல. தன்னால் எதைச் செய்ய முடியுமோ அதை எடுத்துச் சொல்வதோடு, தான் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை காண்பது தான் நல்ல தலைமைத்துவம்.

இயேசுவின் தலைமைத்துவம் தனித்துவமிக்க தலைமைத்துவம். நாமும் (திருத்தந்தை, கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், கிறித்தவ நம்பிக்கையாளர்கள்…) அவருடைய தலைமைத்துவத்தை பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். பல நிலைகளில் அவரை பிரதிப்பலிக்க தவறிவிடுகிறோம். (“நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச் செய்தீர்கள். வேலியரோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கிவிட்டீர்கள், என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்”. - மலாக்கி 2:8)

அருள்பொழிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தலைமைத்துவ பொறுப்பு இருக்கிறது என்று சொல்லி, இயேசுவின் தலைமைத்துவ பண்பை தட்டிக் கழிக்கும் நபர்களும் இங்கு உண்டு. தலைமைத்துவ பண்பு என்பது அதிகாரம் செலுத்துவதில் அல்ல, இயேசுவின் வாழ்வை பிரதிபலிப்பதில் இருக்கிறது. “நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” (யோவான் 13:15).

இயேசு அதிகாரத்தை அன்பாக மாற்றினார் - (ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் - யோவான் 13:34)

மன்னிப்பாக மாற்றினார் - (தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை - லூக்கா 23:34)

பணிவாக மாற்றினார் - சீடர்களின் பாதங்களை கழுவினார்

சமத்துமாக மாற்றினார் - ஒடுக்கப்பட்டவர்களை தேடிச் சென்றார், தொழுநோயாளிகளை தொட்டார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் இயேசு, பணிவை தன் அதிகாரமாக கொண்டு, தான் மட்டுமல்ல தன்னை பின்பற்றுவோரும் பணிவோடு பணிபுரிய அழைப்பு விடுக்கிறார். தலைவராக இருந்து அதிகாரம் செலுத்துவதும் மற்றவர்களை ஆட்டிப் படைப்பதும் எளிது. ஆனால் இயேசுவின் தலைமைத்துவத்தை கடைப்பிடிப்பது கடினம். 

இன்றைய நற்செய்தியிலிருந்து தியானிக்க சில வார்த்தைகள் (யோவான் 13:1-15)

இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது (யோவான் 13:1)

கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் (யோவான் 13:3),

ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடருடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார் (யோவான் 13:5)

உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை (யோவான் 13:11)

நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் (யோவான் 13:15)

                                - தொடரும்…

 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...