24_10

பேறுபெற்றோர்... இன்னும் அதிகம் பேறுபெற்றோர்...


பொதுக் காலம் 27ஆம் வாரம்

12.10.2024 - சனிக் கிழமை 

பேறுபெற்ற மக்களினமாக வாழ நாம் அழைக்கப்படுகின்றோம். மண்ணக பேறுபெற்றோராக அல்ல மாறாக விண்ணக பேறு பெற்றோராக வாழ அழைக்கப்படுகிறோம்.

மண்ணகத்தில் ஒருவரைப் பற்றிய ஒருவரின் பார்வை வித்தியாசமானது. தனக்கு ஆதாயம் தரக்கூடியவர்களை புகழ்ந்து பேசுவது மனிதர்களின் இயல்பு. ஒருவரால் தனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் அவரை கால் தூசியாக கூட மதிக்க மாட்டார்கள். இதுதான் உலகம் கற்றுத் தரும் பாடம். 

தனது வயிறு நிரம்ப வேண்டும் என்றால் மற்றவர்களுடைய மனம் குளிர வேண்டும், தனது வாழ்வு சிறக்க வேண்டும் என்றால் மற்றவர் பெயர் உயிரே பறக்க வேண்டும் என்பதற்காக புகழ்ந்து பேசுவோரும் உண்டு.

"உன் உதவி அவர்களுக்குத் தேவைப்படும் போது உன்னை ஏமாற்றுவர்; உன்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்து உனக்கு ஊக்கம் அளிப்பர்; உன்னிடம் நயந்து பேசி, “உனக்குத் தேவையானது என்ன?” எனக் கேட்பர்" - சீராக்கின் ஞானம் 13:6 

அதே வேளையில், உண்மையிலேயே உள்ளத்தின் ஆழத்திலிருந்து மனம் குளிர பாராட்டுவோரும் உண்டு. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:27-28) இயேசுவின் தாய் அன்னை மரியாவை ஒரு பெண் கூட்டத்திலிருந்து பாராட்டுகிறார். 'உம்மைக் கருத்தாங்கி பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்' என்பதுதான் அந்த பாராட்டு.

இந்த பாராட்டு எதையும் எதிர்பார்த்து வரவில்லை. மாறாக, இயேசுவின் பணிகளைக் குறித்து வியந்த அந்த பெண், இயேசுவையும் அவருடைய தாயையும் பாராட்டுகிறார்.

அந்தப் பெண்ணுக்கு இயேசு கொடுக்கக்கூடிய மற்றொரு செய்தி, இறைவார்த்தையைக் கேட்டு அதை கடைபிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்.

அன்னை மரியா பேறுபெற்றவர் இன்னும் அதிகம் பேறுபெற்றவர். 

இயேசுவை பெற்றெடுத்ததால் அன்னை மரியா பேறுபெற்றவர், இறைவார்த்தைக்கு செவிமடுத்ததினால் அன்னை மரியா இன்னும் அதிகம் பேறுபெற்றவர்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் பேறுபெற்றவராக மாறுவது நாம் இறைவார்த்தைக்கு செவிமடுப்பதிலும் இறைவார்த்தையை செயல்படுத்துவதிலும் இருக்கிறது.

"இதோ! நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்" - திருவெளிப்பாடு 22:7

மனிதர்களை புகழ்வது முக்கியமல்ல, கடவுளிடமிருந்து பாராட்டு பெறுவதே முக்கியம். 

கடவுளிடமிருந்து பாராட்டு பெற நாம் கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும். 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...