24_10

மனம்மாறியதற்கான அடையாளம்...


பொதுக் காலம் 28ஆம் வாரம்

14.10.2024 - திங்கட் கிழமை 

அடையாளம் என்பது நம்முடைய வாழ்க்கையின் அவசியமாக உள்ளது. ஒருவர் யார் என்று தெரிந்து கொள்ள அவருடைய அடையாளம் தேவைப்படுகிறது. இவர் இன்னாருடைய மகன்/மகள், இவர் இந்த ஊரைச் சார்ந்தவர், இவர் இந்த தொழிலை புரிந்து வருகிறார் என்ற அடையாளம் தேவைப்படுகிறது. (அடையாளம் தான் நம்மை யாரென்று அடையாளப்படுத்துகிறது).

நாம் கிறித்தவர்கள் என்பதை அடையாளப்படுத்துவது திருச்சிலுவை. திருப்பலி பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒளி கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறது. 

திருவழிபாட்டில் ஊதா நிறம் கிறிஸ்துவின் வருகையை முன்னிட்டு நாம் அடையும் மகிழ்ச்சியையும், தவக்காலத்தில் நாம் அடைய வேண்டிய மனமாற்றதையும் அடையாளப்படுத்துகிறது.

பச்சை நிறம் வாழ்வையும் வளர்ச்சியையும் அடையாளப்படுத்துகிறது.

வெள்ளை நிறம் தூய்மை, உயிர்ப்பு ஆகியவற்றை அடையாளப்படுத்துகிறது.

சிவப்பு நிறம் தியாகம், மறைசாட்சியத்தை அடையாளப்படுத்துகிறது. 

இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் அடையாளம் முக்கிய இடம் பெறுகிறது. அடையாளம் ஒன்றை சுட்டிக் காட்டுகிறது, ஒன்றை பிரதிபலிக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:29-32) இயேசுவிடம் வந்த மக்கள் கூட்டம், இயேசு யார் என்று கண்டுக் கொள்ள அவரிடம் அடையாளம் கேட்டு சோதிக்கின்றனர். இந்த அடையாளம் கேட்டு சோதிப்பது அவரை யார் என்று கண்டு கொள்வதற்காக மட்டுமல்ல; உண்மையிலேயே, இவர் ஆற்றல் நிறைந்தவரா? என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் தான்.

சாலமோனின் ஞானத்தை கேட்க கடைக்கோடியில் இருந்து வந்த தென்னாட்டு அரசி, யோனா அறிவித்த செய்தியை கேட்டு மனம் மாறிய நினிவே மக்கள், இந்த தலைமுறையினரோடு எழுந்து இவர்களை கண்டனம் செய்வார்கள் என்று இயேசு சொல்கிறார். 

இயேசு இந்த வார்த்தைகளை சொல்ல காரணம், எங்கோ இருந்தவர்கள்/கடவுளை அறியாதவர்கள் அறிவிக்கப்பட்டதை கேட்டு நம்பினார்கள். ஆனால் இயேசு செய்தவற்றை கண்கூடாக பார்த்தவர்கள், மீண்டும் அடையாளம் கேட்பதன் வழியாக தாங்கள் மனம் மாறவில்லை/தாங்கள் கடவுளுக்கு செவிசாய்க்கவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டே இருந்தார்கள்.

இங்கு இவர்கள் கேட்கும் அடையாளம் என்பது தெரிந்து கொள்வதற்காக அல்ல தொல்லை கொடுப்பதற்காக. 

இருந்தபோதிலும் இயேசு யோனாவின் அடையாளத்தை முன்வைக்கிறார். 

(மத்தேயு நற்செய்தி 12:40, "யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்").

இயேசுவிடம் இருந்து அவ்வளவு வார்த்தைகளை கேட்டும் கூட அவர்கள் தங்களுடைய மனமாற்றத்தை வெளிக்காட்டவில்லை. மனமாற்றம் அடையாளங்களில் வெளிப்படவில்லை.

இயேசுவை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை, தெரிந்து கொள்ளவில்லை எனவே அவரை சோதித்தார்கள்.

சிலர் அடையாளம் கேட்பது சோதிப்பதற்கே...

நீங்கள் யார்? என்று கேட்கப்படும் கேள்வியில் இரண்டு பொருள் இருக்கிறது. ஒன்று நாம் யார்? என்பதை அறிந்து கொள்ள, மற்றொன்று நம்முடைய பின்புலம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள.

நாம் கிறிஸ்துவை பிரதிபலிக்கும் அடையாளமாக மாற வேண்டும். மற்றவரை சோதிக்கவும் மற்றொருடைய வாழ்வை அழிக்கவும் நாம் ஒருபோதும் முற்படக்கூடாது.

அடுத்தவரில் அடையாளம் தேடுவதை விட நாம் கிறிஸ்துவின் அடையாளமாக இருக்க வேண்டும். 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...