பொதுக் காலம் 28ஆம் வாரம்
15.10.2024 - செவ்வாய்க் கிழமை
மனிதனின் உள் இருந்து வெளியே வருவது தான் மனிதனையும் மனிதத்தையும் தீட்டுப்படுத்துகிறது...
குழந்தை பருவத்தில் விளையாடி விட்டு வருகிற போது குழந்தைகளின் கைகள், உடைகள் அழுக்கு படிந்து இருக்கும். ஆனால் குழந்தைகளின் உள்ளம் எப்போதும் தூய்மையாக இருக்கும் (பொறாமைப்படுதல், பழிவாங்குதல், எரிச்சல் ஆகியவை இங்கு கிடையாது).
வளர வளர உள்ளம் அழுக்கு படிந்து காணப்படுகிறது. நல்லது எது? தீயது எது? என்பதை பகுத்து அறியக் கூடிய பருவத்தில் தான் எல்லா குப்பைகளையும் உள்ளத்துக்குள்ளே குவித்து வைக்கிறோம்.
புனித அகுஸ்தினார் சொல்வார் 'தீமைகளை, பாவங்களை அறிக்கையிடுவதே நன்மைத்தனத்தின் தொடக்கம்'
நான் மாசுள்ளவன்(ள்) என்பதை கண்டுணராத வரை, நான் மற்றவர்களையும் அவர்கள் செய்வதையும் தீட்டாகத் தான் கருதுவேன். தீட்டு வெளியில் இல்லை, நம் உள்ளே இருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:37-41) பரிசேயர் இயேசுவை விருந்துக்கு அழைக்கிறார். அவர் கை கழுவாமல் உண்பதை கண்டு வியப்படைகிறார்.
"பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன" என்ற இயேசுவின் பதில் அவருக்கு மேலும் வியப்பைக் கொடுத்திருக்கும்.
வயிற்றுக்கு விருந்து கொடுத்தவருக்கு இயேசு உள்ளத்திற்கான மருந்துக் கொடுக்கிறார்.
நம் உள்ளம் தூய்மையாகாமல் வெளிப்புறத்தில் தூய்மையாக இருப்பது போல காட்டிக் கொள்வது பயனற்றது.
நம் குறைகள் களையப்பட வேண்டும். நம்மைவிட மற்றவரை குறைவாக மதிப்பிடும் பழக்கம் மறைய வேண்டும். உட்புறம் தூய்மையானால் வெளிப்புறம் புதுப்பொலிவு பெறும்.
No comments:
Post a Comment