பொதுக் காலம் 34ஆம் வாரம்
27.11.2024 - புதன் கிழமை
"கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை" - 2 திமொத்தேயு 1:7,8
யாருக்கு செவிசாய்க்கிறோமோ அவருக்கு தான் நாம் சான்று பகர முடியும். செவிசாய்க்காத காதுகள் ஒருபோதும் செயல்படாது.
யாரை நமக்கு அதிகம் பிடித்திருக்கிறதோ அவரை நாம் அதிகம் தேடுவோம். யாரை அதிகம் நம்புகிறோமோ அவர் சொல்வதையெல்லாம் கண் மூடித்தனமாக செய்வோம் (அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி).
நமக்கு பிடித்தவர்களை யாராவது எதிர்த்தால் அவர்களை நாம் எதிர்ப்போம். ஒருவரை பிடித்ததற்காக உயிரையும் இழக்க துணிந்து விடுகிறார்கள் சிலர். இவ்வாறாக நம்முடைய உடனிருப்பை/அன்பை வெளிப்படுத்தப்படுகிறது.
சாதாரண மனிதருக்கே இப்படி என்றால் நம்மை படைதவருக்கு இதைவிட பெரிதாய் செய்ய வேண்டாமா?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 21:12-19) இறுதிக் காலங்களில் நடைபெற இருக்கும் துன்பங்களை விவரிக்கிறார் இயேசு. அந்த துன்பங்களின் வழியாக நாம் இயேசுவுக்கு சான்று பகர அழைப்பு கொடுக்கப்படுகிறது.
தொழுகைக் கூடத்திற்கு கொண்டு செல்வார்கள், சிறையில் அடைப்பார்கள், காட்டிக் கொடுப்பார்கள், கொலை செய்வார்கள் என்று துன்பத்தின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.
கிறிஸ்துவை அன்பு செய்தால் ஏற்படும் துன்பங்கள் தான் இவை. கிறிஸ்துவையும் கிறிஸ்துவின் விழுமியங்களையும் பின்பற்றாதவர்களுக்கு இவ்வுலகில் எத்தகைய இடரும் இல்லை. ஏனெனில் இடர்களை தருபவர்களே அவர்கள் தான்.
இவற்றை சந்திக்க/தாங்க இயேசுவின் மீது அன்பும் நம்பிக்கையும் கொள்ள வேண்டும்.
இயேசுவின் வார்த்தையை கேட்டு விட்டு கடந்து செல்பவர்கள் பலர், இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்குபவர்கள் வெகு சிலரே. எதற்கு வீண் பிரச்சினை என்று நாம் பல தருணங்களில் தீமைகளோடு சமரசம் செய்து விடுகிறோம்.
நம்மில் மனஉறுதி இருந்தால் நம்மை எதிர்போருக்கு முன்னிலையில் இயேசுவுக்கு சான்று பகர்ந்து நம் அன்பை வெளிப்படுத்துவோம்.
நாம் சரியானதை செய்கிற போது, உலகு நம்மை வெறுக்கிறது என்றால் நாம் இயேசுவுக்கு சான்று பகர்கிறோம் என்று அர்த்தம்.
No comments:
Post a Comment