பொதுக் காலம் 33ஆம் வாரம்
18.11.2024 - திங்கட் கிழமை
"என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்" - எசேக்கியேல் 37:13
வரலாற்றுப் பின்னணி
புனிதர்கள் பேதுரு பவுல் ஆகிய இருவரும் இயேசுவின் திருத்தூதர்கள். திருத்தூதர்களின் தொடக்கமும் நிறைவுமாக இவர்கள் இருக்கிறார்கள்.
புனித பேதுரு - இயேசுவால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புனித பவுல் - இயேசுவால் தனிப்பட்ட பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவர்.
ஒருவரின் நேரிய வாழ்வு தான் இறந்த பின்னும் வெளிப்படும் என்பதற்கேற்ப இவர்கள் இறந்த பின்னும் இவர்களின் கல்லறை மேல் கட்டப்பட்ட பெருங்கோயில்கள் இவர்களது வரலாற்றை பேசுகிறது.
உரோமையை ஆண்டு வந்த நீரோ மன்னனுடைய காலத்தில் திருத்தூதர்களின் தலைவரும் முதல் திருத்தந்தையுமான பேதுரு கொல்லப்பட்டார் என்பது வரலாறு. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொடக்ககாலக் கிறித்தவர்கள் அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்தி வந்தனர்.
அதன் பின்னர் உரோமையை ஆண்ட கான்ஸ்டன்டைன் என்ற மன்னர் பேதுருவின் கல்லறை இருந்த இடத்தில் மிகப்பெரிய கோயிலை கட்டினார். ஆண்டுகள் பல செல்ல சிதிலமடைந்த கோயில் இருந்த இடத்தில், திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் 1506ஆம் ஆண்டு ஒரு புதிய கோயிலை கட்ட தொடங்கினார். இக்கோயில் கட்டி முடிக்க 120ஆண்டுகள் ஆனது. திருத்தந்தை 8ஆம் அர்பன் தான் 1626ஆம் ஆண்டு கட்டி முடித்தார்.
பிற இனத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற புனித பவுல் ஒஸ்டின் நகர் நோக்கிச் செல்கின்ற சாலையில் உள்ள அக்குவே சால்வியே என்ற இடத்தில் கொல்லப்பட்டார் என்பது வரலாறு.
கான்ஸ்டன்டைன் என்ற மன்னர் புனித பவுலுக்கென்று கோயில் கட்டத் தொடங்கினார். அப்பணி அவரால் முடியாமல் போகவே திருத்தந்தை பெரிய லியோவின் ஆசியோடு முதலாம் தியோடர் என்ற மன்னர் அதை நிறைவு செய்தார்.
இப்பெருங்கோயில் 1833ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் சேதமடைந்தது. எனவே திருத்தந்தை பதினொன்றாம் பயசின் காலத்தில் உலகெங்கும் பரவியிருந்த கிறித்தவர்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டு புனித பவுல் பெருங்கோவிலானது புதுப்பிக்கப்பட்டது.
டிசம்பர் 10ஆம் நாள் இக்கோயில் நேர்ந்தளிக்கபட்டாலும் பின்னாளில் நவம்பர் 18ஆம் நாளுக்கு விழா மாற்றப்பட்டது.
கல்லறை கோயிலாக மாறுவது தொடக்க காலங்களில் நடைபெற்றது. சமீப காலங்களில் பீடத்தின் முன் பகுதியில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கோயிலின் வெளிப்புறங்களில் கல்லறை அமைக்கப்பட்டது.
நம்பிக்கை கற்றுக் கொடுத்த முன்னோர்கள், மறைப்பணியாளர்கள், புனிதர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் என்று பல நபர்களின் கல்லறைகள் நமக்கு இன்றும் நம்பிக்கையை போதிக்கின்றன.
கல்லறைகள் இறந்தவர்களின் உடல்கள் புதைந்து கிடக்கும் இடம் மட்டுமல்ல... மாறாக நம்பிக்கை பிறப்பெடுக்கும் இடமும் கூட...
No comments:
Post a Comment