24_11

நிறைவுக் காண குறை ஒரு தடையல்ல...


பொதுக் காலம் 33ஆம் வாரம்

19.11.2024 - செவ்வாய்க் கிழமை 

"நீ உண்டு நிறைவுற்றிருக்கும்போது, பட்டினி கிடந்த காலத்தை நினைவில் கொள்; உனது செல்வச் செழிப்பின் காலத்தில், உன் வறுமை, தேவையின் காலத்தை எண்ணிப்பார்" - சீராக்கின் ஞானம் 18:25

குறை இருக்கும் இடத்தில் நிறைவுக்கு இடம் இல்லை. நிறைவுள்ள இடத்தில் குறைக்கு இடம் இல்லை.

குறையுள்ள மனிதர் தன் நிலையை ஏற்றுக் கொள்ளும் வரை அவருடைய குறை மறைய போவதில்லை.

சில மனிதர்கள் சிலரின் குறைகளை அன்பு செய்ய தொடங்குகிறார்கள். சில மனிதர்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட சிலருக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது. சிலரின் குறும்புகள் சிலருக்கு பிடித்தம். அந்த அன்பு இறுதியில் குறையை மாற்றி விடும் என்பதும் உண்மை.

குறையில்லாத மனிதர் இவ்வுலகில் இல்லை, அதற்காக குறைகளிலே நிறைவு காணும் மனிதர் வாழ்வில் ஒருபோதும் நிறைவு காண போவதில்லை. 

இன்றைய முதல் வாசகத்தில் (திருவெளிப்பாடு 3:1-6,14-22) நம் வாழ்க்கை குறித்த வசனம் கொடுக்கப்பட்டுள்ளது. திருவெளிப்பாடு 3:17இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, ‘எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை’ என நீ சொல்லிக்கொள்ளுகிறாய். ஆனால், நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை.

நம் நிலையை நாம் உணர்வதில்லை. நம் நிலையை அறிந்திருந்தாலும் அதை திருத்திக் கொள்ள முயல்வதில்லை. எல்லாம் கொடுக்கப்பட்டதுதான் என்ற எண்ணம் உள்ளத்தில் பதிந்தால் எல்லாம் சரி ஆகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 19:1-10) குறையுள்ள சக்கேயு நிறைவை காண அத்தி மரத்தில் ஏறுகிறார். (அத்தி மரம் ஞானத்தின் அடையாளம், வளமையின் அடையாளம், ஒளியூட்டப்படுதலின் அடையாளம்...)

 சக்கேயு குறையுள்ள/குட்டையான மனிதர் தான், ஆனால் தன் நிலை உணர்ந்த மனிதர். இயேசு என்னும் ஞானத்தை அறிய காட்டு அத்தி மரத்தில் ஏறுகிறார். இயேசுவை பார்க்க சென்றவர் இயேசுவால் கண்டுக் கொள்ளப்படுகிறார். இயேசு அவருடைய வீட்டில் உணவருந்துகிறார்.

பாவியிடம் தங்க போயிருக்கிறாரே என்று இயேசுவுக்கு எதிராக பலர் முணுமுணுத்தனர். இயேசு அதை பொருட்படுத்தவில்லை.

குறையை களைந்த சக்கேயு மகிழ்ச்சியுடன் இயேசுவை வரவேற்கிறார். தன் பாவத்தை அறிக்கையிட்டு பரிகாரத்தையும் அறிக்கையிடுகிறார். அவரின் பாவ அறிக்கை, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடுகிறேன், பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.

குறையை ஏற்றுக் கொண்டு, மனம் மாறியதால் சக்கேயுவின் வீட்டிற்கு மீட்பு கிடைத்தது.

பலர் அவரில் இருந்த குறையை மட்டும் கண்டார்கள், இயேசுவோ அவரில் இருந்த நிறைவை (தவறுக்கு வருந்துதல், தவறை திருத்துதல்) கண்டார்.

யார் தான் தவறு செய்யவில்லை என்ற வார்த்தை தவறை நியாயப்படுத்தி விடுகிறது. தவறும் மனிதரும் உண்டு, தவறு செய்ய தூண்டப்படுவோரும் உண்டு. காலம் சிலரை குற்றவாளியாக கடைசிவரை சிறைப்படுத்தி விடுகிறது.

தப்பு செய்ய தூண்டுவோரும் தப்புக்கு துணை போவோரும் ஒன்றே.

நான் யோக்கியன் என்று நடிப்பதை விட தவறை உணர்ந்து திருந்துவது நல்லது. 

நிறைவை காண குறை ஒருபோதும் தடையாக இருக்க கூடாது.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...