பொதுக் காலம் 33ஆம் வாரம்
17.11.2024 - ஞாயிற்றுக் கிழமை
இன்னும், ‘மிக மிகக் குறுகிய காலமே இருக்கிறது; வரவிருக்கிறவர் வந்து விடுவார், காலம் தாழ்த்தமாட்டார்" - எபிரேயர் 10:37
கடவுளின் வருகை எப்படி இருக்கும்? எப்போது இருக்கும்? எதற்காக இருக்கும்? என்ற பல கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.
வீட்டிற்கு விருந்தினர் வந்தால் மகிழ்ச்சி. வெளிநாட்டில் வேலை செய்யும் தந்தை/தாய் வீட்டிற்கு வந்தால் மகிழ்ச்சி. படிக்க சென்ற குழந்தைகள் பத்திரமாக வீட்டிற்கு வந்தால் மகிழ்ச்சி. இவ்வாறாக ஒருவர்/பலருடைய வருகை மகிழ்ச்சி கொடுக்கிறது. இதற்கு முக்கிய காரணம், நமக்கும் அவர்களுக்கும் இடையேயான நெருக்கம்/அன்பு/புரிதல் என்று பலவற்றை சொல்லலாம்.
நம்மை அன்பு செய்பவர்கள் நம்மை தேடி வருகின்ற போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.
ஒரு நாளில் தோன்றி ஒரே நாளில் வாடும் மலரை போல சில உறவுகள் இருந்தாலும், பலர் உண்மை உணர்வோடு/உறவோடு பிரித்தவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சில காத்திருப்பு ஏமாற்றத்தை தந்தாலும் கூட காத்திருப்பு நீண்டுக் கொண்டே போகிறது.
நாம் எதிர்பார்ப்பதை கொடுப்பவர் என்றும் நம் அன்புக்கு உரியவரே! அவர் மீதான அன்பு என்றும் மாறாது. நாம் எதிர்பார்க்காததை செய்பவர் ஏற்படுத்திய வடு ஒரு போதும் அழியாது.
மனிதர்களிடையே காணப்படும் இந்த அன்பும், அந்த அன்பிற்காக காத்திருப்பதும் சுகம் என்றால், கடவுளுக்காக காத்திருப்பது அதிலும் தனி சுகம் தானே.
நான் அவர் விரும்புவதை செய்து மனநிறைவோடு வாழும் போது, அவர் வருகை எனக்கு மகிழ்வை கொடுக்கும்.
அவரது வருகை அச்சத்தின் வருகையாக மாறுவதும் அல்லது ஆனந்தத்தின் வருகையாக மாறுவதும் நம் செயல்பாட்டை பொறுத்தது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 13:24-32) மானிட மகனின் வருகையை பற்றி வாசிக்கிறோம்.
"அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்" என்கிறது இன்றைய நற்செய்தி.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட்டிச் சேர்க்கப்படும் போது தலைநிமிர்ந்து நிற்பர். மானிட மகன் கதவை தட்டுகிற போது மற்றவர்களின் கதி என்னவாகும் என்று சிந்திக்க வேண்டும்.
மானிட மகன் வருவார் என்பது உறுதி, ஆனால் அவர் எப்போது வருவார் என்பது நமக்கு தெரியாது. ஆனால் ஒன்றை மட்டும் நாம் புரிந்துக் கொள்ளலாம். அவர் வருவதற்கு காலம் தாழ்த்துகிறார் அல்லது காலம் தாழ்த்துவது போல நமக்கு தோன்றுகிறது.
2பேதுரு 3:8 இவ்வாறு சொல்கிறது, "அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன".
காலம் தாழ்த்துதல் என்றால் நாம் அனைவரும் மனம் மாறி மீட்கப்பட வேண்டும் என்பதற்காக என்று புரிந்துக் கொள்ளலாம்.
(யோனா நூலில் நினிவே நகரின் மனமாற்றத்தை இந்த பின்னணியில் புரிந்துக் கொள்ளலாம்.)
கடவுளின் வருகைக்காக எல்லா வேளையும் தயராக இருக்க வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில் (தானியேல் 12:1-3) நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்க்கபடுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர். அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர் என்று வாசிக்கிறோம்.
நல் வாழ்க்கை வாழ்ந்தோருக்கு இறுதியிலும் நல்லதே நடக்கும்.
(வாசிக்க - ஆண்டவருடைய வருகை - 2பேதுரு 3:1-18)
கடவுளின் வருகைக்காக காத்திருக்கும் நாம் தலை நிமிர்ந்து நிற்க நற்காரியங்களை கையில் எடுப்போம். அழிவு தரும் நாளாக அல்லாமல் வாழ்வு தரும் நாளாக அவர் வருகை அமையட்டும்.
No comments:
Post a Comment