பொதுக் காலம் 34ஆம் வாரம்
29.11.2024 - வெள்ளிக் கிழமை
"பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு; நான் சொல்வதைக் கவனி" - நீதிமொழிகள் 4:20
பேசக்கூடிய வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தாக்கத்தை ஏற்படுத்தும். வார்த்தைகள் அடுத்தவருடைய மனதிலும், வாழ்விலும் அதிர்வலையை ஏற்படுத்தும்.
அதிர்வலைகள் சில வேளைகளில் நமக்கே ஆபத்தாய் அமையலாம். பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம்.
சில வார்த்தைகள் ஆறுதல் அளிக்கின்றன, சில வார்த்தைகள் வாழ்வு கொடுக்கின்றன, சில வார்த்தைகள் கண்ணீர்விட வைக்கின்றன, சில வார்த்தைகள் போலியாக உள்ளன, சில வார்த்தைகள் ஏமாற்றுகின்றன.
நம் வாயில் இருந்து வரும் வார்த்தைகளில் உருட்டும் புரட்டும் இருக்கின்றதா?
பேசப்பட்ட வார்த்தை ஏதாவது ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு தான் செல்லும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 22:29-33) அழிவு நெருங்கும் போது இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்துக் கொள்ள இயேசு அழைப்பு விடுக்கிறார். கடந்த சில நாட்களாக வாசிக்க கேட்ட நற்செய்தி பகுதிகள் அழிவை, துன்பத்தை, மானிட மகனின் வருகையை, மீட்பை பற்றி விவரித்தன. இந்த வார்த்தைகள் நம்மில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை சிந்திப்போம்.
இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு மனமாற தான் இவை நம்மை அழைக்கின்றன. சாதாரண மனிதர்கள் பேசும் வார்த்தைக்கே ஆற்றல் உண்டு என்றால் அனைத்தையும் உண்டாக்கியவரின் வார்த்தைக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கும்.
விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும் இயேசுவின் வார்த்தைகள் ஒருபோதும் ஒழியாது.
நல்லாருக்கும் பொல்லாருக்கும் இவ்வுலகில் அழிவு உண்டு, ஆனால் அவரில் நம்பிக்கை கொண்டு புது வாழ்வு வாழ்பவர்கள் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.
அவரின் வார்த்தையை பற்றிக் கொள்வோம்... வார்த்தையின் படி வாழ்வோம்... மீட்பை பெற்றுக் கொள்வோம்...
No comments:
Post a Comment