திருநீற்றுப் வெள்ளிக்கு பின் சனி
08.03.2025 - சனிக் கிழமை
"ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது" 1 யோவான் 1:8
யார் இந்த சமூகத்தில் நான் ஒரு தவறு கூட செய்யவில்லை என்று சொல்ல முடியும். தவறு செய்து மாட்டிக் கொண்டவர்கள், தவறு செய்து இன்னும் மாட்டிக் கொள்ளாதவர்கள், நான் செய்தது தவறு தான் அதற்கு என்ன? என்று கேட்பவர்கள், தவறை ஏற்றுக் கொள்ளாதவர்கள்... அவ்வளவு தான் வித்தியாசம்.
யோக்கியன் என்று ஒரு நபரையும் சுட்டிக் காட்ட முடியாது. இங்கு பல நபர்கள் அடுத்தவனை அயோக்கியன் என்று சொல்லி தங்களை யோக்கியர்களாக காட்டிக் கொள்கிறார்கள்.
சில அதிமேதாவிகள் பணம் கொடுத்து சமூகத்தில் உயர் இடத்தை பெற்று விடுகிறார்கள். அதே பணத்தால் மற்றவர்களை குற்றவாளிகளாகவும் மாற்றி விடுகிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 5: 27-32) பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், “வரிதண்டுபவர்க ளோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று கேட்டனர்.
பரிசேயர்களின் எண்ணம் நிச்சயம் இதுவாக தான் இருந்திருக்கும். நாங்கள் தூயவர்கள், நாங்கள் நேர்மையாளர்கள், நாங்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள்...
கடவுள் நெருக்கம் என்பது கடவுளின் பிரதிபலிப்பாக இருப்பதன் வழியாகவே சாத்தியம்.
நான் யார் தெரியுமா? என் பின்புலம் தெரியுமா? எங்க அந்தஸ்து தெரியுமா? என்று இந்த உலகில் பெருமிதம் கொள்ளலாம்... அவ்வுலகில் நம் செயல்கள் திரையிடப்பட்டு காட்டப்படும்.
நான் தூயவன் என்பது என் செயலிலும் சொல்லிலும் வெளிபடட்டும்...
வெண்ணிற ஆடை அணிந்தால் மட்டும் போதாது, அதில் படும் கறைகளை நீக்க முயல வேண்டும்...
No comments:
Post a Comment