திருக்காட்சிப் விழாவுக்குப்பின் சனி
11.01.2025 - சனிக் கிழமை
"அடுத்தவருடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள்" - உரோமையர் 15:2
இன்று வளர்ச்சி என்பது தனிப்பட்ட வளர்ச்சியாக இருக்கிறது. யாரும் அடுத்தவர் நலனை நாடுவதில்லை. ஒருவேளை அடுத்தவர் மீது அக்கறை கொண்டவர் ஒருவர் இருக்கிறார் என்றாலும் அதில் இலாபம் இல்லாமல் இருக்காது.
எல்லோருடைய எதிர்பார்ப்பும் நான் வளர்ந்தால் போதும்/ என் குடும்பம் முன்னேறினால் போதும் என்ற நோக்கில் தான் இருக்கிறது.
1000 பேர் வசிக்கக் கூடிய ஒரு ஊரில் 999 பேரை பற்றி கவலைப்படாத ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் வாழ்ந்து பயன் என்ன? அவர் சீரோடும் சிறப்போடும் இருந்தும் பயன் என்ன?
என் எல்லையில் உள்ள குப்பை/கழிவுகளை அடுத்தவர் மீது வீசும் போது, நான் சுத்தம் ஆகிவிடுவேன். ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் தூய்மை இழப்பார்கள், அவர்களை நோய் தொற்றும். அது சுழற்சி முறையில் என்னையும் தாக்கும் என்பதைப் நான் அறியாமல் இருப்பது ஏன்?
அதை போல தான் நான் மட்டும் வளர்ச்சியை நோக்கி செல்வது எனக்கு மதிப்பாக இருக்கலாம், என் அயலானின் வீழ்ச்சி அடைந்தால் எனக்கு என்ன என்று எண்ணிக் கொள்ளலாம், எல்லோரும் அழிந்த ஊரில் நான் மட்டும் வாழ்ந்து பயன் என்ன? என்ற கேள்வி எழ வேண்டும்...
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3:22-30) திருமுழுக்கு யோவானிடம் ஒரு முறையீடு வருகிறது. ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்” என்ற முறையீடு தான் அது.
அதற்கு திருமுழுக்கு யோவான் கூறிய பதில் நமக்கு வியப்பை தருகிறது. அவர் செய்வதை குறித்து மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. "அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்".
முதிர்ச்சி அடைந்தவர்களால் மட்டுமே இத்தகைய பதிலிருப்பு செய்ய முடியும். இறையாட்சியை குறித்து பரப்புரை செய்து, மீட்புக்கான வழியை ஆயத்தம் செய்தவர், நான் ஒன்றுமில்லை என்று சொல்வது முற்றிலும் நம்மிலிருந்து மாறுபட்ட சிந்தனை தான்.
எதையும் செய்யாமல் எல்லாம் செய்தவர்கள் போல காட்டிக் கொள்ளும் மானுடம் மத்தியில் எல்லாவற்றையும் செய்துவிட்டு தன்னை தாழ்த்திய திருமுழுக்கு யோவானின் மனநிலை நம்மில் உருவாக வேண்டும். மற்றவர்களின் வளர்ச்சியில் அக்கறைக் கொண்டு மற்றவர்களை நாம் உருவாக்க வேண்டும்.
நான் வளர்ந்தால் மட்டும் போதாது, நாம் வளர வேண்டும்...
No comments:
Post a Comment