25_01

இறையனுபவம் பெற வேண்டும்...


கிறிஸ்து பிறப்புக் காலம் 
04.01.2025 - சனிக் கிழமை 

"இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்து கொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு" - 1 யோவான் 5:20

ஒவ்வொரு மனிதனின் அனுபவமும் வித்தியாசமானது. சிலருக்கு வாழ்க்கை பாடமாக அமையும், சிலருக்கு அனுபவமாக அமையும், சிலருக்கு மகிழ்ச்சியாக அமையும்.

கிறிஸ்தவர்களுக்கு இரண்டு வகையான அனுபவம் உண்டு. ஒன்று மண்ணக அனுபவம். இரண்டு விண்ணக அனுபவம்.

மண்ணக வாழ்க்கையே போதும் என்போரும் உண்டு... இந்த மண்ணக வாழ்க்கையே வேண்டாம் என்று எண்ணுவோரும் உண்டு. இந்த உலகில் நல்ல/இனிமையான மனிதர்களை உறவாக பெற்றவர்கள் ஆனந்த களிப்பில் துள்ளிக் குதிப்பர். தெரியாமல் மாட்டிக் கொண்டவர்களோ எப்போது தான் இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்குமோ? என்று அலுத்துக் கொள்வர். 

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றாக இருப்பதில்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 1:35-42) திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்கள் இறைஅனுபவம் பெற அழைப்பு விடுக்கிறார். "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று திருமுழுக்கு யோவான் சொல்ல, அதைக் கேட்டு சீடர் இருவர் இயேசுவை பின்தொடர்கின்றனர். 

பின்தொடர்ந்தது மட்டுமல்லாமல் இயேசுவோடு தங்கி இறைஅனுபவம் பெறுகிறார்கள். 

அவர்களுக்குள் இரண்டு வகையான மகிழ்ச்சி இருந்திருக்கும். 1. புதிய போதகர் கிடைத்துள்ளார் 2. புதிய அனுபவம்/புதிய வாழ்வு கிடைத்துள்ளது.

ஆலயத்தில் எல்லோரும் கடவுளை சந்திக்கிறார்கள். எல்லோரும் இறை பிரசன்னத்தில் அமர்கிறார்கள். ஆனால் எல்லோரும் இறை அனுபவம் பெறுவதில்லை. 

குருவின் பாதத்தின் கீழ் அமரும் எல்லோரும் குருவின் அனுபவம் பெறுவதில்லை. காரணம், அவர்கள் குருவோடு இணைந்து பயணிக்க தவறி விடுகிறார்கள். சிந்தனையும் செயலும் மாறினால் குருவை போல ஆக முடியாது.

இரு சீடர்களுள் ஒருவர் அந்திரேயா, அவர் தான் பெற்ற அனுபவத்தை அறிவிக்கிறார். மெசியாவைக் கண்டோம் என்று சொல்லி தன் சகோதரரான பேதுருவை இயேசுவிடம் அழைத்து வருகிறார். 

இன்று நாம் அனுபவம் பெற்றால் தானே மற்றவர்களை இயேசுவிடம் அழைத்து வர முடியும்! அனுபவம் பெற ஒரே வழி உலக காரியங்களை ஒதுக்கி வைத்து விட்டு அருள்பொழிவு பெற்றவரை அணுகிச் செல்ல வேண்டும்.

நல்லதொரு வாழ்க்கை போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...