திருவருகைக் காலம் முதல் வாரம்
02.12.2024 - திங்கட் கிழமை
"ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது; உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்தறிபவர்; உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே." - சாலமோனின் ஞானம் 6:3
ஆணவத்தின் தொடக்கம் அதிகாரம் செலுத்துவதில் அடங்கி இருக்கிறது. மற்றவரை தன்னைவிட கீழானவராக பார்க்கும் பார்வை இன்னும் மறையவில்லை.
அதிகாரம் பணம் புகழ் இவற்றைப் பற்றி பேசுகின்ற போது எனக்குள் எழக்கூடிய கேள்வி, எதையும் கொண்டு செல்ல முடியாத நிலையிலேயே மனிதர்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்றால், நாம் சேர்த்து வைத்தது எல்லாவற்றையும் நம்மோடு எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலை வந்தால் நாம் என்னவெல்லாம் செய்வோம்? என்பதுதான்.
இன்று அதிகாரம் தலை தூக்கி நிற்கிறது. அதிகார வர்க்கம் அடக்குமுறையை கையாளுகிறது.
ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 7:1-10) தனது மகனுக்காக தன் நிலையில் இருந்து இறங்கி வருகிறார் நூற்றுவர் தலைவர். நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை சொல்லும் என் பையன் நலமடைவான் என்ற உன்னத நம்பிக்கையை பறைசாற்றுகிறார்.
எவ்வளவு அதிகாரமிக்க தலைவர் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு, தன்னை தகுதியற்றவர் என்று கருதுகிறார் என்பது தான் நமக்கான பாடம். தன் பணியாளர்களை அதிகாரத்தோடு ஆளக்கூடிய தலைவர், தன் மகனுக்காக அதிகாரத்தை துறந்து, ஆணவத்தை துறந்து தன் நிலையிலிருந்து இறங்கி வருகிறார்.
இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடம் இரண்டு. 1. நம்முடைய நிலையிலிருந்து இறங்கி வருதல், 2. நம்பிக்கையை அறிக்கையிடுதல்.
அவர் கொண்டிருந்த அதிகாரத்தை, அவரின் நம்பிக்கை பணிய வைத்துவிட்டது. பணிந்து நின்ற காரணத்தினால் அவர் தாழ்ந்து போகவில்லை. மாறாக இஸ்ரயேலரிடத்தில் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை போற்றப்பட்டது.
தலைமைத்துவம் என்பது அதிகாரத்தில் நிறைவு பெறுவது அல்ல பணிவில், பகிர்வில், பரிவில் முழுமை பெறுவது.
தன்னை முன்னிலைப்படுத்துவது தலைமைத்துவம் ஆகாது. தன்னோடு இருக்கும் மனிதர்களின் மாண்பை காப்பாற்றுவதும் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை தட்டிக் கழிக்காமல் சரிவர செய்வதுதான் உண்மையான தலைமைத்துவம்.
இயேசுவின் தலைமைத்துவம் இறைமகன் என்ற நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வந்து கீழ்ப்படிந்து சாவை ஏற்பதிலும் மீட்பை பெற்றுக் கொடுப்பதிலும் முழுமை பெற்றது.
அதிகாரத்தோடும் ஆணவத்தோடும் அல்ல, நம்பிக்கையோடும், திறந்த மனதோடும், உண்மையோடும் நாம் பணியாற்றும் இடங்களில் நம் தலைமைத்துவத்தை வெளிக்காட்டுவோம்.
நம் பணிவே நம் தலைமைத்துவம்.
No comments:
Post a Comment