24_08

ஞானம் + உணவு = இயேசு


பொதுக் காலம் 19ஆம் வாரம்

18.08.2024 - ஞாயிற்றுக் கிழமை

"இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" - லூக்கா 2:52

தாய்க்கு/தந்தைக்கு தன் குழந்தை எப்படி இருந்தாலும் பிடிக்கும். ஒருபோதும் தாயானவள்/தந்தையானவர் தன் குழந்தையை விட்டுக் கொடுக்க முன்வர மாட்டார். தனக்கு எதிராக பழிச்சொல் பேசி, தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டாலும் கூட தன் மகன்/மகள் மீது தாய்க்கான/தந்தைக்கான பாசம் ஒருபோதும் குறையாது.

குழந்தை பலவீனத்தோடு பிறந்தாலும், குறைபாடோடு இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் தாய்/ தந்தை.

தன் இரத்தத்தை பாலாக்கி, தன் வியர்வையை உணவாக்கி தன் பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய தாய் தந்தை உறவே இத்துனை மகத்துவம் மிக்கது என்றால், நம்மை படைத்து, உருக்கொடுத்து உருவாக்கிய கடவுளின் அன்பு எத்துணை மிகுதியானது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:51-58) இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்கிறார். 

உணவு எதற்காக கொடுக்கப்படுகிறது? உடலுக்கு ஆற்றல் தருவதற்காக, உடலை திடப்படுத்துவதற்காக. தன்னிடம் இருக்கக்கூடிய உணவை ஒருவர் மற்றவருக்கு பகிர்ந்து கொடுக்க முன் வரலாம், ஆனால் இயேசு தன்னையே உணவாகத் தருகிறார். இங்கு இயேசு தன்னை உணவாக தருதல் என்பது தன் வாழ்வை தற்கையளிப்பு செய்வதை குறிக்கிறது. தன் வாழ்வையே நாம் வாழ்வு பெறும் பொருட்டு கொடுக்கிறார்.

விடுதலைப் பயண நூலில் (12:3-11) நாம் காணும் பாஸ்கா நிகழ்வின் தொடக்கமே உணவு தான். குடும்பத்துக்கு ஒரு ஆடு, வீட்டிற்கு ஒரு ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள் இல்லையெனில், எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரை சேர்த்துக் கொள்ளட்டும் என்று தொடங்கி, ஒரே குடும்பமாக எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு முன்பு அவர்கள் உண்ட உணவு அவர்களுக்கு ஆற்றலை கொடுத்தது. அந்த ஆட்டின் இரத்தம் கதவு நிலைகளில் பூசப்பட்டது. கடவுள் அந்த இரவில் எகிப்தினை கடந்து சென்றார்.

விடுதலைப் பயண நூலில் கடவுள் மக்களிடையே கடந்து சென்றார். யோவான் நற்செய்தியில் இயேசு உணவாக கடந்து வந்தார். 

பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களுக்கு உண்ண மன்னாவும் காடையும் கொடுக்கப்பட்டது. புதிய ஏற்பாட்டில் இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் உணவாக தந்தார். 

இயேசுவே ஞானமாய் இருக்கிறார். அவரில் நம்பிக்கை வைப்போர், அவருக்கு அஞ்சுவோர் அவரிடமிருந்து ஞானத்தை பருக முடியும். 

ஞானத்தை எவ்வாறு வரையறை செய்யலாம்? ஒருவர் தன்னுடைய அறிவை பயன்படுத்தி காலத்தின் சூழலுக்கு ஏற்ப முடிவுகளும், மதிப்பீடுகளும் செய்யும் ஆற்றல் ஞானமாக கருதப்படுகிறது (இது ஒருவகை விளக்கம்). 

யோபு நூலின் அடிப்படையில் ஞானம் என்பது, ஆண்டவருக்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம். தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு" (யோபு 28:28)

1 கொரிந்தியர் 1:30 "கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்". 

1 கொரிந்தியர் 1:25, "மனிதன் ஞானத்தை விட கடவுளின் மடமை ஞானமிக்கது. மனித வலிமையை விட அவருடைய வலுவின்மை வலிமைமிக்கது".

மனிதன் இன்று தன்னை அறிவாளியாக ஞானமிக்கவனாக கருதி கொள்கிறான். ஆனால் அவனுடைய ஞானத்தால் மற்றவருக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் போவதால் அது ஞானம் அல்ல, வெறும் குப்பைதான்.

இன்றைய முதல் வாசகமானது (நீதிமொழிகள் 9:1-6) ஞானம் தனக்கென்று ஒரு வீட்டை கட்டி இருப்பதாகவும் அது பலி விலங்குகளை கொண்டு திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்று ஏற்பாடு செய்ததாகவும் மதிகேடராய் இருப்போருக்கு உணவருந்த அழைப்பு விடுத்ததாகவும் எடுத்துச் சொல்கிறது.

அறியா நிலையில் இருந்து அறியும் நிலைக்கு கடந்து வருவது தான் ஞானத்தின் முதல் படி. 

இரண்டாம் வாசகத்தில் (எபேசியர் 5:15-20) திருத்தூதர் பவுல் இந்த காலத்தை பொல்லாத காலமாக, தாறுமாறான வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் காலமாக அறிக்கையிடுகிறார். இந்த வாழ்க்கையில் இருந்து கடவுளின் ஆவியால் நிரப்பப்பட கிறிஸ்து வழியாக தந்தை கடவுளுக்கு நன்றி செலுத்த அழைக்கிறார் திருத்தூதர் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:51-58) நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படி கொடுக்க இயலும் என்று வாக்குவாதம் அவர்களிடையே எழுந்ததாக வாசிக்க கேட்கிறோம். 

எது உண்மையோ அது தாமதமாகத்தான் உண்மை என்று உணரப்படும். எது பொய்யோ அது விரைவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும். 

அதேபோலத்தான் இயேசு தன்னையே உணவாக தருகிறார் என்பதன் பொருள் அன்று பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த உணவு என்பது இழப்பை குறிக்கிறது, தியாகத்தை சுட்டிக் காட்டுகிறது. "இதை என் நினைவாக செய்யுங்கள்" என்று இயேசு சொன்னாரே அதுதான் இயேசு என்னும் ஞானத்தை பற்றி கொள்வதற்கான வழிவகை. 

இயேசு கிறிஸ்து தன்னை உணவாக கொடுத்து அவரை நாம் உண்பதன் வழியாக ஞானத்தை பெற்றுக்கொள்ள வழிவகை செய்கிறார். 

இந்த சமூகத்தில் அதிகம் படித்தவர்கள் மற்றவர்களை மதிக்காதவர்களாக இருக்கிறார்கள். பெற்ற தாய், தந்தையை மதிக்காத பிள்ளைகளும் இவ்வுலகில் வாழத்தான் செய்கிறார்கள். 

உண்டு குடித்து களிப்போடு இருந்து மற்றவர் வாழ்வு எப்படி போனாலும் பரவாயில்லை என்று சுயநல போக்கில் வாழக்கூடிய மனித மிருகங்களும் இவ்வுலகில் வாழத்தான் செய்கிறார்கள். 

இருப்பவருக்கு இருப்பவற்றை பகிர தெரியவில்லை. இல்லாதவரோடு இருப்பவற்றை பகிரும்போது இல்லாதவரும் இருப்பவராகிறார் என்று உண்மையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. 

இயேசு தன்னை கொடுத்தார் இத்தரணி உயர. இயேசு தன்னை இழந்தார் நாம் வாழ்வு பெற. 

இயேசு எனும் ஞானத்தை நம் வாழ்வில் கண்டுணர அவரின் விழுமியங்களை வாழ்வாக்குவோம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...