24_08

உள்ளொளி பெற எடுத்து வாசியுங்கள்...


பொதுக் காலம் 21ஆம் வாரம்

28.08.2024 - புதன் கிழமை 

புனித அகுஸ்தின் வாழ்வை மாற்றிய இறைவசனம் உரோமையர் 13:13-14, "பகலில் நடப்பது போல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டை, சச்சரவு ஆகியவற்றை தவிர்ப்போமாக! தீய இச்சைகளை தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்". 

இந்த வார்த்தையை கேட்பதற்கு முன் உலக இன்பங்களில் அதிக நாட்டம் கொண்டிருந்த அகுஸ்தின் கிறிஸ்துவின் ஒளியை உள்ளத்தில் ஏற்று புனித வாழ்க்கை வாழ தொடங்கினார். உலக இன்பங்களில் கவனம் செலுத்திய அகுஸ்தின் மணிக்கேயிச கொள்கையினால் மிகவும் பாதிக்கப்பட்டார். மிலன் நகர ஆயர் அம்புரோஸ் அவர்களின் மறையுரை அவருக்கு ஆறுதல் தர தொடங்கியது. தனக்குள் இருந்த பாவ வேட்கை குறைய ஆரம்பித்தது. உலக இன்பத்தை விட கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சிறந்தது என்று சொல்லி இறைவார்த்தையை படித்து தன்னுடைய பாவத்தை உணர ஆரம்பித்தார். மனம்மாறிய பிறகு பல்வேறு நூல்களை எழுத ஆரம்பித்தார். ஒரு ஆயரின் மறையுரையால் தொடப்பட்ட இவர் பின்னாளில் 32 ஆண்டுகள் ஹிப்போ நகரின் ஆயராக இருந்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 23:27-32) வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பான மறைநூல் அறிஞரை பரிசேயரை இயேசு கண்டிக்கிறார்.

வெளிப்புறத்தில் நேர்மையாளர்களைப் போல காட்டிக் கொள்வோர் உட்புறத்திலோ மாசுபடிந்து இருக்கிறது. 

கல்லறையின் வெளிப்புறம் அழகுப்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால் அதன் உட்புறமோ எலும்பும் எல்லா வகை அழுக்கும் நிறைந்திருக்கும் என்கிறார் இயேசு. 

புனித அகுஸ்தினாரின் உள்ளம் இதே போல தான் இருந்தது. கிறிஸ்துவின் ஒளியை காண்பதற்கு முன்பு வரை அவருடைய உள்ளம் மூடப்பட்ட கல்லறையாக இருந்தது. எடுத்து வாசி என்ற இறை வார்த்தையை கேட்டது முதல் அவருடைய உள்ளம் புதுப்பிக்கப்பட்ட மாளிகையாக மாறியது.

 வெளிப்புறத்தில் அறிவாளியாக திறமைசாலியாக இருக்கக்கூடியவர்கள் உட்புறத்தில் பலவீனமானவர்களாக இருக்கத்தான் செய்வார்கள். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு பலவீனம் இருக்கிறது. அந்த பலவீனங்களை கண்டு அவற்றிலிருந்து வெளிவருவது தான் கடவுளுக்குகந்த வாழ்க்கை வாழ்வதன் அடையாளம். பலவீனங்களிலே மூழ்கி நாம் முத்து எடுக்க முடியாது. 

நம்முடைய வாழ்வு வெளிப்புறத்தில் அழகுப்படுத்தப்பட்டிருக்கிறது. உட்புறத்தை மனிதனால் பார்க்க இயலாது என்பதால் அது மாசுபடிந்தே இருக்கிறது.

ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறங்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார். (1சாமுவேல் 16:7)

கடவுளே கண்களுக்கு எதுவும் மறைவாய் இருப்பதில்லை. நாம் மறைவாய் செய்யும் செயல்கள் கூட கடவுளுக்கு வெளிப்படையாய் உள்ளது. 

மனிதர் முன்னிலையில் நேர்மையாளரை போல நாம் நம்மை காட்டிக்கொள்ளலாம், ஆனால் உள்ளே இருக்கும் போலித்தனமும் நெறிகேடும் நிறைந்த வாழ்க்கை நம்மை ஒருநாள் காட்டிக் கொடுத்துவிடும்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...