பொதுக் காலம் 21ஆம் வாரம்
27.08.2024 - செவ்வாய்க் கிழமை
புனித மோனிக்கா - நினைவு
ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்" - திருப்பாடல்கள் 51:7
மோனிக்கா என்றால் கண்ணீரால் கடவுளை கரைப்பவர் என்பது பொருள். மோனிக்கா தன்னுடைய வாழ்வில் கணவராலும் மாமியாராலும் முதல் மகனான அகுஸ்தினாலும் அதிக துன்பங்களை அனுபவித்தார்.
இவர்கள் கடவுள் பயம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். ஆனால் மோனிக்காவோ அதிக கடவுள் நம்பிக்கை உடையவராக வாழ்ந்து வந்தார்.
ஒவ்வொரு நாளும் கண்ணீரோடு இவர்களின் மனமாற்றத்திற்காக வேண்டுவார். 371ஆம் ஆண்டு அவருடைய கண்ணீருக்கு பதில் கிடைத்தது. அவருடைய கணவர் கிறிஸ்து மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். மாமியாரும் மனம் மாறினார்.
ஆனால் இவருடைய கவலை குறைந்தபாடில்லை. தன்னுடைய மகனின் தாறுமாறான வாழ்க்கை இவரை இன்னும் சோகத்திற்கு உட்படுத்தியது.
ஒருமுறை மிலன் நகர் ஆயரான அம்புரோசிடம் தன்னுடைய மகனுக்காக கதறி அழுதார். இவருடைய அழுகையை பார்த்த ஆயர், உம்முடைய மகன் ஒருநாள் நிச்சயம் மனம்மாறி கடவுளுக்குகந்த வழியில் நடப்பான்" என்று உறுதி கூறினார். அதன்படி 387ஆம் ஆண்டு அகுஸ்தின் மனம்மாறி திருமுழுக்கு பெற்றார்.
தாயினுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காரணம் தன்னுடைய மகனின் உட்புற மனமாற்றம், அகுஸ்தினின் கடவுளை நோக்கிய பயணம் அவருக்கு மகிழ்வை கொடுத்தது.
புனித மோனிக்கா தன் மகனிடம் வைத்த ஒரு கோரிக்கை, "நீ எனக்காக ஒரு நற்செயல் செய். அது வேறொன்றுமில்லை. நீ திருப்பலி நிறைவேற்றும் போது அதில் என்னை நினைத்துக் கொள்".
ஒரு தாயின் கண்ணீர் ஒரு குடும்பத்தையே மாற்றி இருக்கிறது. அழுது அழுது நொந்து போன மனிதருக்கு மத்தியில் பல ஆண்டுகள் கண்ணீரோடு இறைவன் முன் தன் குடும்பத்தை ஒப்படைத்த புனித மோனிக்கா பொறுமையின் முன்மாதிரி.
தன் மகனின், கணவனின், மாமியாரின் உள்ளம் தூய்மை பெற வேண்டும் கடவுளை நாடி தேட வேண்டும் என்பதுதான் புனித மோனிக்காவின் ஒரே இறைவேண்டலாக இருந்தது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 23:23-26) வெளிவேடத்தனத்தோடு செயல்பட்ட மறைநூல் அறிஞர், பரிசேயரை இயேசு சாடுகிறார். புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் உள்ள பங்கை படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனையாகிய நீதி, இரக்கம் , நம்பிக்கை ஆகியவற்றை கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள் என்று அவர்களின் தவறை சுட்டிக்காட்டுகிறார்.
வெளிப்புற தூய்மையை நாடக்கூடிய அவர்களோ தங்களுடைய உள்ளத்தை தீட்டு படுத்தியிருக்கிறார்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறார்.
தேவையற்ற ஆடம்பர கொண்டாட்டங்கள்,, வழிபாட்டு முறைகள் இவற்றில் இன்பம் காணக்கூடிய மனநிலை நம்மில் இருந்தது என்றால் நாமும் வெளிவேடக்கார பரிசேய, மறைநூல் அறிஞரை போல தான் இருக்கிறோம்.
எது முக்கியம்? வெளிப்புற பகட்டான அடையாளங்களை காட்டிலும் உட்புறமாற்றம், உட்புற தூய்மை தான் முக்கியம்.
உள்ளம் தூய்மையாக இருந்தால் வெளிப்புறமும் தூய்மையாக இருக்கும்.
உள்ளம் மாசு படிந்து குப்பை கிடங்காக இருந்தால், வெளிப்புற வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். கைகளை கழுவுவதை காட்டிலும் உள்ளம் கறைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment